முறையீடுகளுக்கு தீர்வுகளும் இல்லை ! முறையீடுபவா்களை மதிப்பதும் இல்லை! – ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர்கள்
தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில், பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தி, 09.04.2025, புதன்கிழமை காலை 10:30 மணியளவில் கவன ஈர்ப்பு மற்றும் பெருந்திரள் முறையீட்டு ஆர்ப்பாட்டம் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரி கல்வி ஆணையர் அலுவலகம் முன்பு நடைபெற்ற உள்ளது.
கோரிக்கைகளின் விவரங்கள்
கல்லூரிக் கல்வி ஆணையராக திருமதி இ சுந்தரவல்லி ஐ.ஏ.எஸ் அவர்கள் பொறுப்பேற்றதிலிருந்து அவர்களிடம் பிரச்சனைகளை தெரிவிக்கவும் முறையீடுகள் அளிக்கவும் பல சங்கங்கள் அவரை பலமுறை சந்தித்துள்ளனர். ஆனால் யாரையும் அவர் அமரச் சொல்வதும் இல்லை, முகம் கொடுத்து பேசுவதும் இல்லை.
முறையீடுகளை மட்டும் வாங்கி வைத்துக்கொண்டு, அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதும் இல்லை, முறையீடு அளித்தவர்களுக்கு பதில் அளிப்பதும் இல்லை. அவரை சந்திப்பதே ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக இருப்பதில்லை.

நமது சங்கத்திலிருந்து மூன்று முறை அவரை சந்தித்து இருக்கிறோம். நிற்க வைத்து காகிதங்களை மட்டும் பெற்றுக்கொண்டு அனுப்பி விடுவார். அதிலும் ஒரு முறை 12.30 மணியிலிருந்து (பார்வையாளர் நேரம் 12.30 – 1.30 மணி) அவரை சந்திப்பதற்காக காத்திருந்த சங்கத் தலைவர்களை இரண்டு மணிக்கு மேல் எங்களையும் பிற பார்வையாளர்கள் அனைவரையும் அழைத்து வரிசையில் நிற்க வைத்து முறையீடுகளைப் பெற்றுக் கொண்டு அனுப்பினார்.
நம்மைப் பொருத்தவரை. நான்கு கருத்துருக்கள் இயக்குனரிடமிருந்து அரசுக்கு செல்ல வேண்டியுள்ளன. ஓராண்டுக்கும் மேலாக அவை நிலுவையில் இருந்து வருகின்றன.
1) 1986- 88 காலக் கட்டத்தில் ஓய்வு பெற்ற, 19 ஆண்டுகள் பணி முடித்த ஆசிரியர்களுக்கு, இணைப் பேராசிரியர் ஊதிய விகிதத்தில் ஓய்வூதியம் வழங்குதல்.
2) கடந்த 2016 யு.ஜி.சி ஊதிய விகிதத்தில் மத்திய அரசு வழங்கியுள்ள ஒத்திசைவுப் பட்டியலின் அடிப்படையில் நமக்கு ஓய்வூதிய நிர்ணயம் செய்தல்.
3) ரூ.14940 உயர் துவக்க ஊதியம் வழங்குவதில் ஆகக்கூடிய செலவு பற்றிய விவரங்களை மண்டல இணை இயக்குனர்களிடமிருந்து பெற்று, அதனை தொகுத்து அரசுக்கு அளிக்காததோடு இந்த உயர் துவக்க ஊதியம் கிட்டாத வகையில் செயல்முறைகள் வெளியிடுதல்.
4) இளையோர் மூத்தோரைவிட கூடுதலான ஊதியம் பெறும் முரண்பாட்டை களைதல் ஆகியவை தொடர்பான கருத்துருக்கள், நாம் பலமுறை முறையிட்டும், அரசிடமிருந்து நினைவூட்டுக் கடிதங்கள் அனுப்பப் பட்டும் இதுவரை எந்தப் பயனும் இல்லை.
இப்பிரச்சினைகளில் தொடர்புள்ள மூத்த பேராசிரியர்களின் வயதினைக் கருதியாவது மனிதநேய அடிப்படையில் இதனை செய்ய வேண்டும் என நாம் எதிர்பார்ப்பது இயல்பு. ஆனால் அதற்காக இல்லாவிடினும் சாதாரண அலுவலக நடைமுறையை ஒட்டியாவது இவற்றைச் செய்ய இயக்குநரகம் முன்வரவில்லை என்பது வேதனை அளிக்கிறது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இவற்றையெல்லாம் கல்லூரிக் கல்வி ஆணையரின் கவனத்திற்கு கொண்டு வரவும் இவை குறித்த முறையீடுகளை அனைவரும் சென்று அவரிடம் அளிப்பதும் இந்த நிகழ்ச்சியின் நோக்கம் ஆகும்.
“எனவே….. நமது உணர்வுகளைத் தீவிரமாக வெளிப்படுத்தும் வகையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் திரளாக நம் உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இது…. நமது உணர்வுகளை வெளிப்படுத்தவும் மரியாதையைக் காப்பதற்கும் ஆன போராட்டமாகும்!” என்று தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.