என்ன ஏதென்று கேட்பதற்குக்கூட நாதியற்றுப் போனோமா? – போராட்ட களத்தில் வருவாய்த்துறை பணியாளர்கள்

1

என்ன ஏதென்று கேட்பதற்குக்கூட நாதியற்றுப் போனோமா? – வேதனையில் வருவாய்த்துறை பணியாளர்கள் ! பொதுவில் பொதுமக்கள் தங்களது அடிப்படை உரிமை மற்றும் தேவைகளுக்காக போராட்டம் நடத்தும்பொழுது, போலீசாருடன் போராட்டக்களத்திற்கே வந்து நிற்பவர்கள் தாசில்தார் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள்தான். வருவாய்த்துறை அலுவலர்கள் தங்களது பிரச்சினைகளை பட்டியலிட்டு பத்து அம்சக் கோரிக்கைகளுடன் எட்டாவது நாட்களாக போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள். தமிழகத்திலுள்ள 315 தாலுகா அலுவலங்களும் வெறிச்சோடிக் கிடக்கின்றன. ஒருவார காலமாக வருவாய்த்துறை பணிகள் முற்றிலும் முடங்கிக்கிடக்கின்றன.

வீடியோ லிங்க

2 dhanalakshmi joseph

ஆனாலும், அரசு தரப்பில் குறைந்தபட்சம் எங்களை அழைத்துப்பேசக்கூட மனம் வரவில்லை; என்ன ஏதென்று கேட்பதற்கும் நாதியற்ற நிலையில் இரவு பகலாக இங்கேயே தங்கி உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தி வருகிறோம் என்பதாக வேதனைப்படுகிறார்கள், வருவாய்த்துறை பணியாளர்கள். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதற்கான முன்தயாரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய நெருக்கடியான காலத்தில்தான், வருவாய்த்துறை பணியாளர்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

- Advertisement -

”தேர்தல் சமயத்தில் வருவாய்த்துறையின் பணிகளின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, எந்த நடவடிக்கையும் எடுக்காத திமுகவின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளைப் போலன்றி, வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினரிடம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண முன்வருமாறு திமுக அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்” என்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தும் பாராமுகமாகவே அரசு இந்த விவகாரத்தை அணுகிவருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

போராட்ட களத்தில் வருவாய்துறையினர்
போராட்ட களத்தில் வருவாய்துறையினர்

கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி முதல் பல கட்டப் போராட்டங்களை நடத்தியும் அரசிடம் இருந்து எந்த சாதகமான பதிலும் வராத நிலையில், பிப்-27ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தார்கள். தற்போது, மார்ச்-04 முதலாக அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் ஒன்றுகூடி இரவு – பகல் தொடரும் உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இதற்குப் பின்னரும், ”தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் வரும் வியாழக்கிழமை (மார்ச்.07) முதலாக சென்னை வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் இரவு, பகலாகத் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும், இதிலும் தீர்வு எட்டப்படாத பட்சத்தில், தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த வருவாய்த்துறை அலுவலர்களும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை முற்றாகப் புறக்கணிக்கப் போவதாகவும்” அறிவித்திருக்கிறார்கள் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர்.

போராட்ட களத்தில் வருவாய்துறையினர்
போராட்ட களத்தில் வருவாய்துறையினர்

” வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடன் நிரப்பிட வேண்டும்; அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்திட வேண்டும்; அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மேலாண்மைப் பணிக்கென சிறப்பு பணியிடங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மைப்பிரிவில் 31.03.2023 முதல் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை மீண்டும் வழங்கிட வேண்டும்; வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் உள்ள பயன்பாட்டிற்கு தகுதியற்ற ஈப்புகளை கழிவு செய்து அவற்றிற்கு ஈடாக புதிய ஈப்புகளை உடனடியாக வழங்கிட வேண்டும்.” என்பது உள்ளிட்ட பத்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

மிக முக்கியமாக, ”வருவாய்த்துறையில் உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் நிரப்பிட முதலமைச்சர் உத்தரவிட்டும், திட்டமிட்டே காலதாமதம் செய்யப்படுவதாகவும்; குறைவான ஊழியர்களை வைத்துக்கொண்டு, நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பணிகளை நாங்கள் மட்டுமே எவ்வாறு சமாளிக்க முடியும்?” என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.
“வருவாய்த்துறையில் இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களின் பெயர்களை முறையே இளநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் என பெயர் மாற்றம் செய்ய அதிமுக ஆட்சிகாலத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2016-ல் அறிவிப்பு வெளியிட்டு, 8 ஆண்டுகளாகிவிட்டது. இதுவரையில் அதற்கோர் அரசாணை பிறப்பிக்காமல் காலந்தாழ்த்தி வருகிறார்கள்.”

4 bismi svs
போராட்ட களத்தில் வருவாய்துறையினர்
போராட்ட களத்தில் வருவாய்துறையினர்

”சென்றமுறை தேர்தலின்போதே, தேர்தல் கால செலவுகளுக்கான நிதியை ஒதுக்கீடு செய்யவே இல்லை. ஓராண்டு கழித்துதான் அதற்குரிய தொகையை ஒதுக்கினார்கள். இதனால், பெட்ரோல் பங்க் முதல் ஜெராக்ஸ் கடை வரையில் பலரிடம் கடன் சொல்லி தேர்தல் வேலையை பார்க்க வேண்டிய இக்கட்டில் தள்ளப்பட்டோம். இதனை கருத்தில் கொண்டு, முன்கூட்டியே நிதி ஒதுக்கீடு செய்யுங்கள் என கோருகிறோம்.”

இவையெல்லாம் புதிய கோரிக்கைகள் ஒன்றுமில்லை. ஏற்கெனவே, இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2023 மே மாதம் சென்னை வருவாய் நிருவாக ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தின் போது, வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் அரசு தலைமைச் செயலாளர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, முதலமைச்சரும் தலையிட்டு, வருவாய்த்துறை அமைச்சர் போராட்ட களத்திற்கே வந்திருந்து கோரிக்கையை நிறைவேற்றித் தருகிறோம் என்பதாக வாக்குறுதி அளித்ததையடுத்தே, அந்தப் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும், மே-16, 2023 அன்று வருவாய்த்துறை அமைச்சர், நிதித்துறை அமைச்சர், சட்டத்துறை அமைச்சர் மற்றும் அரசு செயலாளர்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தையில் ஒரு மாத காலத்தில் நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதியளித்தார்கள். இன்றோடு, பத்து மாதங்களாகிவிட்டது. அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார்கள்.

நாங்களும் திடீரென்று எல்லாம் போராட்டத்தில் இறங்கிவிடவில்லை. பிப்-13 அன்று ஒட்டுமொத்தமாக தற்செயல் விடுப்பு எடுத்து எங்களது எதிர்ப்பை பதிவு செய்தோம். பிப்-22 முதல் அனைத்துப் பணிகளையும் புறக்கணித்து அலுவலக வாயிலில் காத்த்திருந்தோம். பிப்-27 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினோம். மார்ச்-04 முதலாக இரவு – பகல் இங்கேயே படுத்துறங்கி உள்ளிருப்புப் போராட்டத்தை தொடர்ந்து வருகிறோம். ” என விரக்தியோடு தங்களது மனக்குமுறலை கொட்டித் தீர்க்கிறார்கள், வருவாய்த்துறை பணியாளர்கள்.

போராட்ட களத்தில் வருவாய்துறையினர்
போராட்ட களத்தில் வருவாய்துறையினர்

”எங்களது துறையின் பெயரே வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறைதான். பேரிடர் மேலாண்மைக்கென்று நிரந்தர ஊழியர்களே கிடையாது. இருந்த தற்காலிக பணியாளர்களையும் ஒரே நாளில் வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். பெரும்பாலான தாலுகாக்களில் அலுவலக உதவியாளர்கள் இல்லை. ஜெராக்ஸ் எடுக்கும் வேலையை செய்யக்கூட ஆட்கள் கிடையாது. தாசில்தார்களுக்கென்று தனி ஜீப் கிடையாது. ரெகுலர் பயன்பாட்டிற்கான ஜீப் பல தாலுகாக்களில் இல்லை. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்காக இரவு பகல் பாராமல் பேரிடர் காலத்தில் பணியாற்றியதைப் போல பணியாற்றியிருக்கிறோம்.

இப்போது இந்த பணிகளுக்கென, நாலு தாலுகாவுக்கு ஒரு துணை தாசில்தார்களை நியமித்திருக்கிறார்கள். பீல்டு ஒர்க் பார்க்க ஆளே இல்லை. கீழ்மட்ட பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தாமல், குறைந்த பட்சம் காலிப்பணியிடங்களைக்கூட நிரப்பாமல், மேற்பார்வையாளர்களின் எண்ணிக்கையைக் கூட்டிக் கொண்டே போனால், யார்தான் வேலை செய்வது? இந்த இலட்சணத்தில் ”நீங்கள் நலமா?” என்று தினம் ஒரு திட்டத்தை அறிவித்துக் கொண்டே செல்கிறார்கள். எவ்வளவுதான் நாங்களும் சமாளிப்பது சொல்லுங்கள்?” என கடுகாய் வெடிக்கிறார்கள் வருவாய்த்துறை பணியாளர்கள்.

ஒருவார கால பணிப்புறக்கணிப்புப் போராட்டம்; இரண்டு நாட்களாகத் தொடரும் உள்ளிருப்புப் போராட்டம் என எதுவுமே, அரசின் கவனத்திற்கு இன்னும் சென்று சேராமல்தான் இருக்கிறதா? குறைந்தபட்சம் சங்க நிர்வாகிகளைக்கூட அழைத்துப்பேசாமல் புறக்கணிப்பதற்கான காரணத்தையாவது அரசு தரப்பில் தெளிவுபடுத்த வேண்டும் என்பதே போராட்டக் களத்தில் இருப்பவர்களின் குறைந்தபட்ச கோரிக்கையாகவும் இருக்கிறது.

– வே.தினகரன்.

5 national kavi
1 Comment
  1. murugesan s says

    இத்துறை ஊழியர்கள் பொதுமக்களை எவ்வாறு நடத்துகிறீர்கள் என்பதை சற்று சிந்தித்து பாருங்கள். அதே போலத்தான் உங்களையும் அரசாங்கம் நடத்தும்.

Leave A Reply

Your email address will not be published.