சமயபுரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரை தேரோட்ட திருவிழா.
தமிழகத்தின் சக்தி ஸ்தலங்களில்மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமான சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. முன்னதாக பக்தர்களின் நலன் காக்க அம்மனே பச்சைப்பட்டினி விரதம் மேற்கொண்டு , மாசி மாதம் – 25-ந்தேதி கடைசி ஞாயிற்றுக்கிழமை (09-03-2025) தொடங்கி பங்குனி மாத ஞாயிற்றுக்கிழமையான இன்றுடன் (06-04-2015) பச்சை பட்டினி விரதம் நிறைவு பெறுகிறது.
தொடர்ந்து வந்த 5 வார ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட ரதங்கள் மற்றும் பாதயாத்திரையாக பூக்களை எடுத்து வந்து அம்மனுக்கு சாற்றுபடி செய்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மேலும் சித்திரைத் தேரோட்டத்தின் முக்கிய நிகழ்வான கொடியேற்ற நிகழ்ச்சி காலை 6 மணி முதல் 8 மணிக்குள் மேஷலக்னத்தில் நடைபெற்றது.

முன்னதாக கொடிமரம் முன்பு கேடயத்தில் மாரியம்மன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார். கொடி மரத்திற்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அஸ்திரதேவருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று , மாரியம்மன் திருவுருவம் வரையப்பட்ட திருக்கொடியை, கோவில் சிவாச்சார்யார்கள் வேத மந்திரங்கள் முழங்க , பக்தர்களின் ஓம் சக்தி, பராசக்தி என்ற பக்தி கோஷம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் கொடி மரத்திற்கு சிறப்பு அர்ச்சனை நடைபெற்று மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இன்று இரவு அம்மன் கேடயத்தில் புறப்பட்டு திருவீதி உலா வரும் நிகழ்ச்சியுடன் , ஒவ்வொரு நாளிலும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வரும் நிகழ்ச்சியும் ,அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாள் இரவில் 8 மணி அளவில் சிம்மம் ,பூதம், அன்னம் ,ரிஷபம், யானை, சேஷ வாகனம், மரக்குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மாரியம்மன் சர்வ அலங்காரத்தில் கோவில் மாட வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
வருகின்ற 14ஆம் தேதி இரவு அம்மன் வெள்ளிக் குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடாகி வழிநடை கண்டருளி, 15-ம் தேதி காலை 7 மணிக்கு அம்மன் மூலஸ்தானம் சென்றடைகிறார். சித்திரைப் பெருந்திருவிழாவின் அதி முக்கிய நிகழ்வான தேரோட்டம், வருகின்ற 15ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறுகிறது .அன்று காலை 10:31 மணிக்கு மேல் 11- 20க்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது .
விழாவிற்கான ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் விஎஸ்பி இளங்கோவன் ,கோவில் இணை ஆணையர் பிரகாஷ் மற்றும் அறங்காவலர்களான பிச்சைமணி ,ராஜசுகந்தி, லட்சுமணன் மற்றும் கோவில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.