ஆணையர் கையெழுத்து போடலை … அதனால ரெண்டு மாசமா சம்பளம் போடலை ! சமயபுரம் கோவில் பரிதாபம் !
ஆணையர் கையெழுத்து போடலை … அதனால ரெண்டு மாசமா சம்பளம் போடலை ! திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் நிர்வாகம் சார்பில் சமீபத்தில் புதியதாக வேலைக்கு தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களுக்கு இரண்டு மாதங்களாக சம்பளமே வழங்கப்படவில்லை என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழகத்தில் மிகவும் பிரதிசித்தபெற்ற கோவில்களுள் ஒன்று சமயபுரம் மாரியம்மன் கோவில். முடி காணிக்கைத் தொடங்கி, ஆடு, கோழி காணிக்கை, வெள்ளி உருவ காணிக்கை, துலாபரம், கரும்புத்தொட்டி பரிகாரம் என பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காக வருவதும் போவதுமாக வார நாட்கள் முழுவதும் பரபரப்பாக இயங்கிவரும் கோயில்களுள் முக்கியமானது இத்திருக்கோயில்.
அன்றாடம் ஆயிரக்கணக்கிலான பக்தர்களின் வருகையை கையாளும் வகையில், வாகன நிறுத்துமிடம் தொடங்கி பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றிவிட்டு திரும்புவது வரையிலான அனைத்து தேவைகளையும் கருத்திற்கொண்டு பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது, கோவில் நிர்வாகம். மிக முக்கியமாக காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையில் அன்னதானம் வழங்கப்படுகிறது.
இவற்றுள் பல பணிகள் டெண்டர் வழியே நிறைவேறினாலும், அடிப்படையான பணிகள் கோயில் நிர்வாகம் சார்பில் பணிக்கு அமர்த்தப்பட்ட ஒப்பந்த / நிரந்தர பணியாளர்களை கொண்டு நிறைவேற்றப்படுகிறது.
இதற்கேற்ப குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்போது, முறையான விளம்பர அறிவிப்பின் வாயிலாக பணியாட்கள் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகாவோ தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். வெறுமனே தகுதி மற்றும் எழுத்துத்தேர்வின் வழியாக மட்டுமே தேர்வு செய்யாமல், நேர்காணல் நடத்தி பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதன் காரணமாக, ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனி ரேட் நிர்ணயம் செய்து பதவி வழங்கப்படுவதாகவும் உறுதிசெய்யப்படாத குற்றச்சாட்டு உலவிவருகிறது.
இந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக தொடங்கி சென்ற வாரம் வரையில் மூன்று தவணைகளில் பணியாளர்கள் புதியதாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் எவருக்கும் இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. குறிப்பாக, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக பணிக்கு சேர்ந்த பணியாளர்கள் 20-க்கும் அதிகமானோருக்கு இதுவரை சம்பளமே வழங்கப்படவில்லை என்பதாக தெரிவிக்கிறார்கள். தேர்வான பணியாளர்கள் பெரும்பாலும் சாதாரண குடும்ப பின்னணியைக் கொண்டவர்கள். மாத சம்பளத்தை நம்பியே குடும்பத்தை நடத்துபவர்கள்.
மிக முக்கியமாக இவர்கள் யாரும் பின்வாசல் வழி வந்தவர்கள் அல்ல. முறைப்படி அறிவிப்பு செய்து, தகுதியின் அடிப்படையில் சட்டப்பூர்வமான வழிமுறைகளின்படி பணியில் அமர்த்தப்பட்டவர்கள். ஆனாலும், சென்னை ஆணையரின் கையெழுத்துக்காக ஆவணங்கள் காத்துக்கொண்டிருப்பதாகவும், ஆணையர் கையெழுத்து போட்டால் தான் சம்பளம் போட முடியும் என்பதாக கோயில் நிர்வாகத்தின் சார்பில் தகவல் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆணையரின் கையெழுத்து அவசியம் என்பது அவர்களது நடைமுறை சார்ந்த விசயம். அதுவரை, அந்த பணியாளர்கள் வீட்டில் அடுப்பு எரியாமல் இருக்க முடியுமா? மாதந்தோறும் கிலோ கணக்கில் பொன் இனங்களும் கோடிக் கணக்கில் பணத்தாள்களுமாக காணிக்கையாக குவியும் சமயபுரம் கோயில் நிர்வாகத்தால் மாதம் பத்தாயிரம் ரூபாய் பணியாளருக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் போய்விட்டதா என்ன?
இதுகுறித்து விளக்கமறிய, சமயபுரம் கோயில் செயல் அதிகாரியும் இணை ஆணையருமான கல்யாணியை அங்குசம் சார்பில் தொடர்புகொண்டோம். நமது அழைப்பை ஏற்கவில்லை. வாட்சப் வழி தகவல் அனுப்பியும் எந்த பதிலையும் இதுவரை அவர் தரப்பில் தெரிவிக்கவில்லை.
நிர்வாக நடைமுறைகளை காரணம் கூறாமல், மாதம்தோறும் பணியாளர்களுக்கு சம்பளத்தை தாமதமின்றி பட்டுவாடா செய்ய வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.
இணை ஆணையர் கல்யாணி விளக்கம் : அங்குசத்தில் செய்தி வெளியானதையடுத்து, வாட்சப் வழியே அனுப்பியிருந்த குறுந்தகவலில், “சம்பளத் தலைப்பின் கீழ் கூடுதலாக செலவு செய்ய அனுமதி இல்லை. தணிக்கைத் தடைகள் எழுப்பப்படும்.எனவே ஆணையர் அனுமதிக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. வந்தவுடன் வழங்கப்படும். விதி முறைகளை கடைபிடிக்கா விட்டால் தவறு. எனவே, அனுமதி வேண்டப்பட்ட உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இது கோவிலில் உள்ள பணி. அரசுப் பணி அல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்பதாக தெரிவித்திருக்கிறார்.
– ஆதிரன்.