சாதி ஒழிப்பிற்கான செயல்திட்டத்தை பள்ளியிலிருந்தே தொடங்க வேண்டும் ! பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை
சாதி ஒழிப்பிற்கான செயல்திட்டத்தை பள்ளியிலிருந்தே தொடங்க வேண்டும் ! பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை ! “பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டத்தில் சாதி ஒழிப்பு” என்ற பொருண்மையில் சென்னைப் பல்கலைக்கழகம், மெரினா வளாகத்தில் அமைந்துள்ள பவளவிழா அரங்கில் மே-27 அன்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
மருத்துவர் சீ. ச. ரெக்ஸ் சற்குணம் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் எழுத்தாளர் கே. பாலபாரதி, வழக்குரைஞர் அ. அருள்மொழி, பேராசிரியர் அரங்க மல்லிகா, பத்திரிகையாளர் கடற்கரை மத்தவிலாச அங்கதம், எழுத்தாளர் வாசுகி பாஸ்கர் ஆகியோர் பங்கேற்று கருத்துரை வழங்கினர்.

பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு மாணவர்களால் உருவாக்கப்பட்ட பரிந்துரைகளை உள்ளடக்கிய தீர்மானங்களின் நோக்கங்களை விளக்கி முன்மொழிந்தார்.
புலவர் சு. பழநிசாமி அவர்கள் அனைவரையும் வரவேற்க, எழுத்தாளர் வே. மணி அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.
கருத்தரங்கின் தொடக்கத்தில் வழக்குரைஞர் பா. ஹேமாவதி அவர்கள் ஒருங்கிணைப்பில் மழலையர் மனவெளி குழந்தைகள் கலைக் குழுவின் “சாதி ஒழிப்பு” கும்மி நிகழ்ச்சி நடைபெற்றது.

”கல்வி ஒரு சமயச் சார்பற்ற செயல்பாடு. ஒரு மனிதரை சிறந்த மனிதர் ஆக்குவதே கல்வியின் நோக்கம்.சமத்துவம் மற்றும் ஒற்றுமையை இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது. இதற்கு நேரெதிராக சமூகத்தில் பிறப்பின் அடிப்படையிலான பாகுபாடும் பிரிவினையும் நிலவுகிறது. சமூகத்தின் நம்பப்படும் மரபு ரீதியான விழுமியங்களுக்கும் இந்திய அரசமைப்புச் சட்டம் முன்வைக்கும் விழுமியங்களுக்கும் மிகப் பெரும் முரண்பாடு நிலவுகிறது. இந்த முரண்பாட்டை இந்திய அரசமைப்புச் சட்டத்தை உயர்த்திப் பிடிப்போம் என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்ட மாணவர்கள் உணர வேண்டும். மாணவர்கள் தாங்கள் பெற்ற அறிவின் மூலம் சமூக மாற்றத்திற்கான வழிமுறைகளை ஆராய்ந்து இந்த முரண்பாட்டை களைவதற்கு உண்டான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்திய அரசமைப்புச் சட்டம் முன்வைக்கும் விழுமியங்களை தங்களின் வாழ்க்கை விழுமியங்களாக ஏற்றுக் கொண்டு, சமூக மாற்றத்திற்கான பங்களிப்பைச் செய்திட தேவையான நம்பிக்கையை மாணவர்கள் பெற்றார்களா என்று அறிந்திட உகந்த மதிப்பீட்டு முறையை கல்வி அமைப்புக்கள் உருவாக்கிட வேண்டும். ” என்ற மையக் கருத்தை இக்கருத்தரங்கம் முன்மொழிந்தது.
மேலும், * சமூகத்தில் நிலவும் பாகுபாடுகள் களையப்படுவதன் மூலமே பண்பாட்டு ரீதியாக ஒரு சமூகம் முன்னேற்றம் அடைய முடியும் என்பதை இந்தியர்களாகிய நாம் உணர வேண்டும். மேலிருந்து கீழ்நோக்கி ஒரு அடுக்கு முறையைக் கொண்ட சாதியக் கட்டமைப்பு பிறப்பின் அடிப்படையில் மனிதர்களை பாகுபாடுத்துகிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சமத்துவக் கோட்பாட்டிற்கு இது முரணானது.

இக்கருத்தரங்கம் சாதியை கீழ்க்கண்டவாறு வரையறை செய்கிறது –
சாதி என்பது பாகுபாடு கொண்ட சமூக நடவடிக்கை, சாதியப் பாகுபாட்டை கடைப்பிடிப்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 17யின் படி தண்டிக்கத்தக்க குற்றமாகும்.
* சாதி ஒழிப்பிற்கான செயல்திட்டத்தை பள்ளி – கல்லூரி பாடத்திட்டத்தின் வாயிலாக தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்த 11.01.2024 அன்று மாணவர்கள் அளித்த பரிந்துரைகளையும், 05.02.2024 தேதியிட்ட பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் மனுவையும் இந்த கருத்தரங்கத்தின் தீர்மானமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
* 11.01.2024 அன்று மாணவர்கள் அளித்த மனுவையும், 05.02.2024 தேதியிட்ட பொதுப் பள்ளிக்கான மாநில மேடை மனுவையும் பரிசீலித்து ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் சாதி ஒழிப்பிற்கான செயல்திட்டத்தை பள்ளி மற்றும் உயர் கல்வி பாடத்திட்டத்தில் இடம் பெறச் செய்ய தேவையான சட்டப்படியான மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்த கருத்தரங்கம் கோருகிறது.

* இந்தியாவில் உள்ள கல்விசார் அமைப்புகள் (Academic Bodies) பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டத்தில் சாதி ஒழிப்பிற்கான செயல்திட்டம் இடம் பெறச் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தொடக்கப் பள்ளி தொடங்கி உயர் கல்வி வரை சாதி ஒழிப்பு குறித்த பாடம் அந்தந்த வயதிற்கு ஏற்றவகையில் பாடத்திட்டத்தில் இடம் பெறுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று இக்கருத்தரங்கம் கோருகிறது.
* மாணவர்கள் இந்திய அரசமைப்புச் சட்டம் முன்வைக்கும் விழுமியங்களை கற்றுக் கொண்டார்களா, சகோதரத்துவத்தை தங்களின் வாழ்க்கையில் கடைப்பிடிக்கவும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்கள் படி தங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள போதிய அறிவைப் பெற்றுள்ளனரா என்று அறிந்திடும் வகையில் பள்ளி தொடங்கி பல்கலைக்கழகம் வரை அனைத்து நிலைகளிலும் மதிப்பீட்டுகள் (Evaluation) அமைந்திட கல்வி வாரியங்கள் (Board of Studies) உரிய மதிப்பீட்டு நடைமுறைகளை உருவாக்க வேண்டும் என்று இக்கருத்தரங்கம் கோருகிறது.
ஆகிய ஐந்து தீர்மானங்களை முன்மொழிந்திருக்கிறது, இக்கருத்தரங்கம்.
– அங்குசம் செய்திப்பிரிவு.