பச்சமலையில் அரசு பேருந்தை சிறைபிடித்த பள்ளி மாணவிகள் !
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த பச்சமலையில் 3 கிராம ஊராட்சிகள் உள்ளன. உப்பிலியபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட தென்புறநாடு ஊராட்சியில் 13 கிராமங்களுக்கு மேல் உள்ளது. இவற்றில் பூதக்கால், கருவங்காடு, நச்சிலிபட்டி குண்டக்காடி புத்தூர் கம்பூர், தண்ணீர்பள்ளம், கீழ்க்கரை, சோளமாத்தி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் டாப் செங்காட்டுப்பட்டியில் உள்ள பள்ளிக்கு தினசரி காலை மாலை வந்து செல்கின்றனர்.
பள்ளி மாணவ மாணவிகளின் வசதிக்காக தினசரி காலை 8 மணிக்கும், மாலை 5 மணிக்கும் இயங்கி வந்த அரசு பேருந்து தற்பொழுது போக்குவரத்து நேரம் மாற்றி அமைக்கப்பட்டதால் சுமார் 8 கிலோமீட்டர் தூரம் பள்ளி மாணவ மாணவிகள் நடந்து செல்லக்கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் நச்சிலிப்பட்டி கிராமத்தில் பள்ளி மாணவ – மாணவிகள் அரசு பேருந்தை சிறை பிடித்து எப்பொழுதும் வரும் நேரத்திற்கு பேருந்து இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன், பள்ளி மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்ல முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பேருந்தை உரிய நேரத்திற்கு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு பேருந்தை பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சிறை பிடித்து வைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) உப்பிலியபுரம் டெப்போ கிளை மேலாளரை தொடர்பு கொண்டோம். நமது அழைப்பை ஏற்கவில்லை.
மண்டல மேலாளர் (வணிகம்) சாமிநாதனை தொடர்புகொண்டோம். “எங்களது கவனத்திற்கும் வந்திருக்கிறது. பச்சைமலைக்கு அதிகாரிகள் சென்றிருக்கிறார்கள். விசாரணையின் முடிவில் என்னவென்று சொல்கிறோம்.” என்கிறார்.
பள்ளி மாணவ – மாணவிகள் பாதிக்காத வகையில் பள்ளி நேரத்திற்கு பேருந்து சேவையை தடங்கல் இன்று தொடர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பும்.
ஜோஷ்.