“என் எழுத்துக்குக் கிடைத்த அங்கீகாரம் ” சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு ரூ.20,000ம் பெற்ற – ஏகரசி தினேஷ்

- இலக்கியன்

0

“என் எழுத்துக்குக் கிடைத்த அங்கீகாரம் என பெருமை கொள்கிறேன்”

சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு ரூ.20,000ம் பெற்ற ஏகரசி தினேஷ்- உடன் நேர்காணல்

தினமலர் டிவிஆர் நினைவு சிறுகதைப் போட்டியில் திருச்சியைச் சார்ந்த தினேஷ் என்ற இயற்பெயர் கொண்டவர். அம்மாவின் பெயரை முன்னொட்டாகக் கொண்டு, ஏகரசி தினேஷ் என்னும் புனைபெயரில் எழுதிய மனையாளன் என்னும் சிறுகதைக்கு முதல் பரிசாக ரூ.20,000/- பெற்றுள்ளார். அங்குசம் செய்தி இதழ் இலக்கியப் பகுதிக்காக அவரை பாரத மிகுமின் நிறுவனத்தின் ஊரகத்தில் அவரைச் சந்தித்தோம்.

https://businesstrichy.com/the-royal-mahal/

ஏகரசி தினேஷ், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சித்தையன் கோட்டை அருகிலுள்ள சேடபட்டி கிராமம் தான் பூர்வீகம் என்றார். பள்ளி மற்றும் கல்லூரி பருவங்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் முடித்துள்ளேன். இளநிலை பொறியியலில் எந்திரப் பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். தற்போது திருச்சிராப்பள்ளி பாரத மிகுமின் நிறுவனத்தின் ஊரகத்தில் வசித்து வருகிறேன்.

தொலைந்ததைத் தேடுவதை விடுத்து, தேடலில் தொலைந்திட விரும்பும் சிலரில் நானும் ஒருவன். எத்தனை முறை தொலைந்து மீண்டாலும் மீண்டும் மீண்டும் தொலைந்திட இடம் தரும் புத்தகத்தையும் இயற்கையையும் தொடர்ந்து படித்தும், இரசித்து வியக்கும் சாமானியன் நான். பொறியியலைத்  தொழிலாகவும்,  எழுத்து மற்றும் வாசிப்பை வேட்கையாகவும் கொண்டவன் என்று தன்னை இலக்கிய ரீதியாக எளிமையாக அறிமுகம் செய்துகொண்டார். அவரோடு தொடர்ந்து பேசினோம்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

ஏகரசி தினேஷ்
ஏகரசி தினேஷ்

தற்போது என்ன பணி செய்து வருகின்றீர்கள்?

எந்திரப் பொறியாளனான நான் திருச்சியில் உள்ள சேவை நிறுவனமொன்றில் தர நிர்ணயம் மற்றும் உத்தரவாத துறையில் (Quality Control & Quality Assurance) பணிபுரிந்து கொண்டிருக்கிறேன்.

பொறியாளர்களுக்கும் இலக்கியத்திற்கும் வெகுதூரம் என்ற பொது நியதியை உடைத்து சிறுகதை எழுதுவதில் எப்படி ஆர்வம் ஏற்பட்டது?
ஆழ்ந்த வாசிப்பு பழக்கமுடைய என் தந்தையைப் பார்த்து வளர்ந்தவன். பள்ளி நாட்களில் அவர் அறிமுகம் செய்த நூலகமே முதல் படி. சூழலியல் அற்புதங்களையும் வாழ்க்கை சுவாரஸ்யங்களையும் காலத்தால் அழியாதவாறு தன்னுள் படிமமாக்கி, தேடுபவர்களுக்குள் விருட்சமாய் வளரும் வாசிப்புலகம்‌ என்னுள்ளும் பள்ளி நாட்களில் நல்லொழுக்க கதைகளால் முளைத்து, கல்லூரி நாட்களில் சிறுகதைகளால் வளர்ந்து புனைவுகளால் விரிந்தது. கருத்தியல் செறிவுகளும் தமிழ் நெடியும் வீசும் கவிதைகளும் புனைவுகளும் சமூகம் நோக்கிய பார்வையைத் திறந்திட்டது. புத்தகங்களோடு உறவாடிய ஏதோ ஒரு நொடியில் எழுதத் தொடங்கினேன். ஏன் தொடங்கினேன் என்றால் எனக்காகவே தொடங்கினேன்.

முதலில் எழுதிய கதை எது? அது எந்த இதழில் வெளிவந்தது?
நவீன சமூக கட்டமைப்பில் வளர்ந்த பெண்ணியம் பேசும்‌, பெண்ணியம் விரும்பும் ஒரு பெண் தன்னைப் போன்ற இணையைத் தேடி ஏமாற்றமடைவதைக் கருவாகக் கொண்ட “தராசு முள்” என்ற சிறுகதைதான் நான் முதன் முதலில் எழுதியது.  2019 ஆம் ஆண்டு முத்துக்கமலம் மின் இதழில் அந்தக் கதை வெளிவந்தது.

இதுவரை எவ்வளவு சிறுகதை எழுதியிருப்பீர்கள்?
சமூகத்தில் பெண்களின் நிலை, கிராமிய சூழல், வட்டார மொழி, இயற்கை அழகு, உறவுகள் என பல்வேறு தளங்களில் இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளேன்.

6. நீங்கள் எழுதிய சிறுகதைகள் இதற்கு முன் பரிசுகளைப் பெற்றுள்ளனவா?
* தராசு முள் சிறுகதையைத் தொடர்ந்து, கழிவறை இன்றி அவதியுறும் கிராமப்புற பெண்களின் நிலையை மையமாகக் கொண்டு எழுதிய “இடர்களையாய்…” என்ற சிறுகதை கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசை பெற்றது.

* விவசாயத்தை மட்டுமே தொழிலாகக் கொண்டவர்கள் நவீன மயமாக்கலில் சிக்கி படும்பாட்டை பற்றிய “விவசாயி கனவு” என்ற சிறுகதை “போடி மாலன்” நினைவு சிறுகதைப் போட்டியில் சிறந்த கதைகளில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

*சமூகத்தில் மூன்றாம் பாலினத்தவர்களின் நிலையைப் பற்றிய சிறுகதையான “உமையொரு பங்கன்” சு.சமுத்திரம் நினைவு சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது. மேலும் பல இணைய இதழ்கள் நடத்திய பல்வேறு போட்டிகளில் எனது கதைகள் பலமுறை பரிசுகளைப் பெற்றுள்ளன.

முதல் பரிசு 20,000
முதல் பரிசு 20,000

தற்போது முதல் பரிசு பெற்றுள்ள மனையாளன் சிறுகதையின் கரு யாது?
பெரும்பான்மை குடும்ப அமைப்பான வருமானம் ஈட்டும் ஆண், வீட்டைக் கட்டமைக்கும் பெண் என்று  எழுதப்படாத சமூக வரையறையைத் தாண்டி, பெண் அலுவலகப் பணியையும் ஆண் வீட்டையும் கவனிப்பதே கதையின் ‌கரு.  கிட்டத்தட்ட குடும்ப விழுமியமாகவே கருதப்படும் கட்டமைப்பிலிருந்து மாறுபடும்போது ஏற்படும் ஆணின் மனத்தவிப்பும் அவனோடு நிற்கும் மனைவியின் அன்பும் கலந்து விவரிக்கப்பட்ட கதை.

இஃது ஒரு சமூக விழிப்புணர்வு கதையா? மனித வாழ்வியல் சார்ந்த கதையா?
குடும்ப அமைப்பு என்ற பெயரில் பெண்களின் கனவுகளை மறுக்கும் சூழலுக்கு மாற்று என்ற வகையில் நான் இதை சமூக விழிப்புணர்வு கதை என்றே கருதுகிறேன்.

மனையாளன் கதையைப் போட்டிக்கு அனுப்பும்போது பரிசு கிடைக்கும் என்ற மனநிலை இருந்ததா?
பரிசு கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு படைப்பாளன் எதிர்நோக்குகின்ற ஒன்றுதானே? பரிசுகள் என் எழுத்துப் பணிகளுக்கு அளிக்கும் ஊக்கமாகவும் உந்துசக்தியாகவும் எடுத்துக்கொள்வேன்.

முதல் பரிசு ரூ.20000 என்ற அறிவிப்பைப் பார்த்தவுடன் உங்கள் மனம் எப்படி மகிழ்ச்சி கொண்டது?
ஒரு படைப்பாளியைப் பொறுத்தவரையில் அவனது எல்லா படைப்பும் சிறப்பானதே என்ற எண்ணம்தான் இருக்கும். ஆயினும் முதல் பரிசு என்ற இது போன்ற அங்கீகாரம் கிடைக்கும்போது மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் கொண்டதோர் அற்புதமான தருணம் என்றே குறிப்பிடுவேன்.

எதிர்காலத்தில் குறு நாவல், நாவல் எழுதும் எண்ணம் உள்ளதா?
சமீபத்தில் ஓர் இணைய செயலி நடத்திய குறுநாவல் போட்டியில் “பிசி” என்ற எனது குறுநாவல் பரிசு பெற்றது. இதைத் தவிர “திருக்கல்யாணம்” என்ற‌‌ குறுநாவல் ஒன்றும் சிறந்த குறுநாவல்களுள்‌ ஒன்றாகத் தேர்வானது. நாவலுக்கான  கரு ஒன்றும் இருக்கிறது. எதிர்காலத்தில் நேரமும் உழைப்பும்‌ அதைச் சாத்தியப்படுத்தும் என்று நம்புகிறேன்.

ஏகரசி தினேஷ்
ஏகரசி தினேஷ்

கதை எழுதியவுடன் மனைவியிடம் காட்டி கருத்துகளைப் பெறுவதுண்டா?
நான் எழுதும் கதைகளின்‌ முதல் வாசகி, விமர்சகர் என் மனைவியே. ஒவ்வொரு கதையையும் மனைவியோடு விவாதித்து மெருகேற்றிய பின்னரே எங்கும் அனுப்புவேன். அதனைத் தொடர்ந்து இதழ்களில் வெளிவந்த சில கதைகளைப் பற்றி விவாதித்ததுண்டு.

உங்களின் கதை ஆர்வத்தைப் படித்து ஊக்குவிக்கும் நண்பர்கள் உண்டா?
கதை ஆர்வத்தை ஊக்குவிக்கும் நண்பர்கள் நிச்சயமாக உண்டு. அதிலும் குறிப்பாக இன்றும் என்னோடு அமர்ந்து ஒவ்வொரு கதையையும் விமர்சித்து, விவாதித்து மெருகேற்றும் என் தந்தையே அந்த வரிசையில் முதன்மையானவர். அவரைத் தாண்டி, எழுதத் தொடங்கிய பின்னர் எழுத்தின் மூலமாகக் கிடைத்த சில நண்பர்கள் பல்வேறு புதிய வெளிகளை எனக்காகத் திறந்துவிட்டனர். குறிப்பாக,  தேரிக்காட்டு இலக்கியவாதி திரு.கண்ணகுமார விஸ்வரூபன், தொடுவானம் இதழின் ஆசிரியர் நெல்லை தேவன், முத்துக்கமலம் இதழின் ஆசிரியர் திரு.சுப்பிரமணியன் போன்றோர் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர்கள்.

சிறுகதை எழுதுவதில் யாரை முன்மாதிரியாகக் கொண்டு கதை இலக்கியத்தில் இயங்கி வருகின்றீர்கள்?
பல தலைசிறந்த எழுத்தாளர்களின் சிறுகதைகள் என்னைத் தொடர்ந்து செதுக்கிக் கொண்டிருந்தாலும், தமிழ்ச் சிறுகதைகளுக்கென்று இலக்கணம் வடித்துக்கொடுத்த புதுமைப்பித்தன் அவர்களும், கட்டுப்பாடுகளைத் தகர்த்தெறிந்த ஜெயகாந்தன் அவர்களும் எனது வழிகாட்டி‌ என்பதைப் பறைசாற்றி பெருமையோடு கதை இலக்கியத்தில் இயங்கி வருகிறேன்.

ஏகரசி தினேஷ் எதிர்காலத்தில் நல்லதோர் சிறுகதையாளர் என்ற பெருமையைப் பெறவேண்டும். அதன் மூலம் அவர் பிறந்த திண்டுக்கல் மாவட்டத்திற்கும் வளர்ந்து கொண்டிருக்கும் திருச்சி மாவட்டத்திற்கும் பெருமை சேரும் என்பது உண்மையே. அங்குசம் செய்தி இதழ் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்து விடைபெற்றோம். இலக்கிய வானத்தில் நம்பிக்கை நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்தன.

எங்கள் WhatsApp  சேனலில் இணைந்திடுங்கள்.. 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.