கொலைவெறி தாக்குதல் ! அடுத்தடுத்து 12 பேர் கைது ! முடிவுக்கு வந்த போராட்டம் ! பணிபாதுகாப்புக்கென தனிச்சட்டம் ?

என்ன விசயம்னே சொல்லாம அண்ணன் ஆபிசில இருந்து வர்றேன்னு சொல்வாங்க. யாருக்கோ போன போட்டு கையில

0

கொலைவெறி தாக்குதல் ! அடுத்தடுத்து 12 பேர் கைது ! முடிவுக்கு வந்த போராட்டம் ! பணிபாதுகாப்புக்கென தனிச்சட்டம் ?

திருச்சியில் மண்டல துணை தாசில்தார் பிரேம்குமார் தாக்கப்பட்ட விவகாரம், ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. துணை தாசில்தார் பிரேம்குமாரின் வாக்குமூலத்தை ஏற்று உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, திருச்சி மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்கங்களின் ஒட்டுமொத்த கூட்டமைப்பின் சார்பில் கடந்த அக்-19 முதலான ஆறுநாட்களாக நடைபெற்று வந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்த போராட்டம்
பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்த போராட்டம்

முன்னதாக, இன்று (அக்-24) நடைபெற்ற திருச்சி மாவட்டத்தில் உள்ள வருவாய்த்துறை அலுவலர் சங்கங்களின் ஒட்டுமொத்த கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூட்டத்தில், எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலும், இதனைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாவட்ட வருவாய்த்துறை அனைத்து சங்க பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட சுமுக முடிவின் அடிப்படையிலும் இந்த போராட்டத்தை வாபஸ் பெற்றிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டதன் அடிப்படையிலும் பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டும் நாளை (25.10.2023) அன்று வருவாய்த்துறை அனைத்து சங்க பிரதிநிதிகளால் மாநிலம் முழுவதும் நடத்தப்பட இருந்த பணிப்புறக்கணிப்பு போராட்த்தையும் தற்காலிகமாக ஒத்தி வைத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

இவ்விவகாரத்தில் இதுவரை 12 குற்றவாளிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதற்கும்; பிரிவு 161-இன்படி துணை தாசில்தார் பிரேம்குமாரின் வாக்குமூலத்தை முதல் தகவல் அறிக்கையின் பின்னிணைப்பாக சேர்க்கப்பட்டிருப்பதற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்திருக்கிறார்கள்.

தாக்கப்பட்ட வருவாய் துறையினர்...
தாக்கப்பட்ட வருவாய் துறையினர்…

” * பிரேம்குமார் என்பவரின் புகாரின் பேரில் இத்தாக்குதல் சம்பவத்திற்கு உடந்தையாக செயல்பட்ட மற்றும் முதல் தகவல் அறிக்கை பிரிவு 161-இன்படி  காஜாமலை விஜய் என்பவரை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

* மேலும், இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ள மீதமுள்ள குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்.

* இந்நிகழ்வில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நபர்களின் Remand Copy மற்றும் திரு. கார்த்திக் என்பவரின் முன்ஜாமீன் நகலினை உடனடியாக காவல்துறையிடம் பெற்று வழங்க வேண்டும்.” என்ற கோரிக்கைகளை தீர்மானமாக முன்வைத்திருக்கிறார்கள்.

”மேற்படி தீர்மானத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கனிவுடன் பரிசீலனை செய்து அவற்றினை உடனடியாக நிறைவேற்றித் தருவதாகவும், மேலும் சம்பந்தபட்ட நபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதாக உறுதியளித்ததை”யடுத்தே போராட்டத்தை கைவிடும் முடிவுக்கு வந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

துணை தாசில்தார் பிரேம் குமார்
துணை தாசில்தார் பிரேம் குமார்

மிக முக்கியமாக, ”இதுபோன்று வருவாய்த்துறை அலுவலர்கள் மீது தொடர்ச்சியாக நடைபெற்று வரும் தாக்குதல் சம்பவம் தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றும், வருவாய்த்துறை அலுவலர்களின் பணிபாதுகாப்புக்கென தனிச்சட்டம் இயற்ற வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்கள்.

தொடர்ச்சியாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் தாக்கப்பட்டதையடுத்துதான், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவமனை பணியாளர்களின் பணிபாதுகாப்புக்கான 2008-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தின்படி, மருத்துவமனையையோ, மருத்துவர்களையோ தாக்கினால் பிணையில் வரமுடியாத 3 முதல் 10 ஆண்டுகள் வரை தண்டனைகள் வழங்க முடியும்.

மருத்துவர்களைப்போலவே, வருவாய்த்துறையினரும் மக்களின் நேரடி தொடர்பில் அன்றாடம் இருப்பவர்கள். மிடுக்கான மனிதர்களின் மிரட்டல்களையும்; விசயம் புரியாத சாமானியனின் புலம்பலையும் அன்றாடம் எதிர்கொள்பவர்கள்.

கவுன்சிலரும் - பகுதி செயலாளருமான காஜாமலை விஜய்
கவுன்சிலரும் – பகுதி செயலாளருமான காஜாமலை விஜய்

“ஒரு அடி பெறாத வரப்பு பிரச்சினையில சொந்த தம்பியவே கொல்றாங்க. பீல்டுல இறங்கி இடத்த அளக்கப் போனா நாலு பேரு கம்ப தூக்கிட்டு வருவான். அதுல ஒருத்தன் கையெடுத்து கும்பிடுவான். அவனுக்கு கெடச்ச சந்தோசத்த பார்த்து கடந்து போறதவிட வேற வழியில்லை சார்” என்கிறார் நில அளவையர் ஒருவர்.

“ஆளும் கட்சினு இல்லை. எந்த கட்சியா இருந்தாலும், வெள்ளையும் சொள்ளையுமா பாக்கெட்ல படம் தெரியிற மாதிரி வருவாங்க. என்ன விசயம்னே சொல்லாம அண்ணன் ஆபிசில இருந்து வர்றேன்னு சொல்வாங்க. யாருக்கோ போன போட்டு கையில கொடுப்பாங்க. உப்புபெறாத சர்டிபிகேட்டா இருக்கும். சொன்னாலே செஞ்சு தரப்போறோம். ஆனாலும் அதுக்கு அவ்ளோ கெத்து காட்டுவாங்க. இப்ப எல்லாமே ஆன்லைனா மாறிடுச்சி சார்.

முன்னமாதிரி மக்களோட முகத்த பார்த்து பேசறதுக்கு வாய்ப்பு இல்லாம போச்சு. அவன் கோரிக்கை நிறைவேற கொஞ்ச லேட்டானாலும் எங்ககிட்ட கோப்படுவாங்க. என்ன ஏதுன்னு கேட்கிறதெல்லாம் இல்ல. ரூல்சா வந்து பேசிட்டிருப்பாங்க. நாங்க வார்த்தைய விட்டால், விவகாரம்னு பணிஞ்சி போறதா இருக்கு. மற்ற டிபார்ட்மெண்டு காரங்களவிட வருவாய்த்துறையினர் மக்களோட நேரடி தொடர்பில் இருக்கிறதால அன்றாடம் பிரச்சினைய சந்திச்சுட்டுதான் வர்றோம்.” என புலம்புகிறார், கிராம நிர்வாக அலுவலர் ஒருவர்.

போராட்டத்தில் வருவாய் ஊழியர்கள்
போராட்டத்தில் வருவாய் ஊழியர்கள்

”இந்த ஆறுநாள் போராட்டம் எங்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுத்திருக்கு சார். இலஞ்ச இலாவண்யத்தில திளைக்கிற அதிகாரி இப்படி அடிவாங்கியிருந்தா கூட, எங்க ஆளுங்களே ”நல்லா வாங்கட்டும்”னு கடந்து போயிடுவாங்க. பிரேம்குமார் நல்ல மனுசன் சார். அவருக்குனு ஒரு பெயர் இருக்கு. அதுதான் எல்லோரும் கொந்தளிச்சிட்டாங்க. டிரைவர் சங்கம் எல்லாம் எங்களோட ஒன்னா சேர்ந்து போராட வருவாங்கனு நினைச்சுக்கூட பார்க்கல சார். அரசியல்வாதிகளோட அட்ராசிட்டி அந்தளவுக்கு இருக்கு.” என வெடிக்கிறார், வருவாய்த்துறை அலுவலர் ஒருவர்

* கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததை வீடியோ எடுத்த தாசில்தார் காளிமுத்துவை தாக்கிய புகாரில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள்...
கைது செய்யப்பட்டவர்கள்…

* (2012) தென்காசி – செங்கோட்டையில் பட்டா மாற்றம் செய்ய தாமதப்படுத்தியதாக துணை தாசில்தார் பாலசுப்ரமணியனை கடத்திச் சென்று கொலைவெறி தாக்குதல் நடத்திய உதயசெல்வன்பட்டியைச் சேர்ந்த ரவுடி அருமைநாயகம் கைது செய்யப்பட்டது.

* (2017) நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் நடந்த மணல் கொள்ளையைத் தடுக்கச் சென்ற துணைத் தாசில்தார் ஏசுராஜன் தாக்கப்பட்டது.

* செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் துணைதாசில்தார் கார்த்திக் ரகுநாத் அதே பகுதியை சேர்ந்த மூவரால் தாக்கப்பட்டது.

* (2023 ) பழனி கிழக்கு ஆயக்குடி கிராமம் மணல் கடத்தலைத் தடுக்கச் சென்ற கிராம நிர்வாக அலுவலர் திரு. கருப்புசாமி மற்றும் அவரது உதவியாளர், காவலர் என நான்கு பேர் மீது லாரி ஏற்றிக் கொல்ல முயற்சி.

* (2023) துறையூர் பகுதி வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் மீது கொலைவெறி தாக்குதல்

* (2023) ஆற்றில் மணல் அள்ளியது தொடர்பாக புகார் அளித்ததால், தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் படுகொலை செய்யப்பட்டது. – என வருவாய்த்துறை அதிகாரிகளின் மீதான தாக்குதல்களை பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம்.

கெட்டதிலும் ஒரு நல்லது நடந்த கதையாக, வருவாய்த்துறை ஊழியர்களுக்கான பணிபாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தால் நல்லதுதானே! கசப்பான நாட்களை கடந்து, போலீசாரும் வருவாய்த்துறையினரும் வழக்கம்போல சுமுகமான மனநிலையோடு மக்கள் பணியாற்ற முன்வரவேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு!

வே.தினகரன்.

Leave A Reply

Your email address will not be published.