தமிழக அமைச்சர் சொந்த ஊரில் தீராத யானை பஞ்சாயத்து !

0

கீழன்பில் மாரியம்மனுக்கு மறுக்கப்படும் யானை சேவை ! பின்னணி என்ன ? ஆண்டாண்டு காலமாக நடைமுறையில் இருந்த ”யானை சேவை”யை எந்தவிதமான குறிப்பான காரணங்களும் இன்றி, கடந்த முப்பது ஆண்டுகளாக நிறுத்திவிட்டார்கள். மீண்டும் ”யானை சேவை”யை தொடர வேண்டும் என்ற கோரிக்கையில் விடாப்பிடியாக நிற்கின்றனர் திருச்சி மாவட்டம் – கீழன்பில் கிராமத்தை சேர்ந்தவர்கள்.

மாரியம்மன் திருக்கோயில்
மாரியம்மன் திருக்கோயில்

”திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், கீழன்பில் கிராமத்தில் வீற்றிருக்கும் மாரியம்மன் திருக்கோயில் 700 ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களுள் ஒன்று. கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் அமைந்திருக்கும் இத்திருக்கோயில், திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதன் திருக்கோயில் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவருகிறது. தமிழகத்திலுள்ள மற்ற அம்மன் திருக்கோயில்களோடு ஒப்பிடுகையில், இக்கோயிலின் தனித்துவம் அதன் தொன்மை மட்டுமல்ல; ஏழு சகோதரிகளை கொண்டவர் என்பதுதான்.

சமயபுரம், நார்த்தாமலை, தென்னலூர், கொன்னையூர், புன்னைநல்லூர், வீரசிங்கம்பேட்டை, தஞ்சை வளம்பக்குடி மாரியம்மன் என ஏழு பேரில் சமயபுரம் மாரியம்மன் தான் மூத்தவள். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி முதல் ஞாயிறு அன்று பூச்சொறிதல் விழா; பங்குனி கடைசி செவ்வாய் அன்று பங்குனித் தேர் திருவிழா; வைகாசி – 5 ஆம் நாள் பஞ்சப்பிரகார விழா என முப்பெரும் விழா வெகு விமர்சையாக பக்தர்களால் கொண்டாடப்படும்.

- Advertisement -

மாரியம்மன் திருக்கோயில்
மாரியம்மன் திருக்கோயில்

வருடத்தின் இம்மூன்று முக்கிய நிகழ்வுகளின்போதும், ஸ்ரீரங்கம் கோயிலைச் சேர்ந்த யானைக்கு தனிச்சிறப்பான கௌரவத்தோடு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வந்தது. அதாவது, பூச்சொறிதல் விழாவின்போது, 108 வைணவத் தளங்களுள் நான்காவதான அன்பில் சுந்தர்ராஜ பெருமாள் கோயிலில் இருந்து பூத்தட்டை அன்பில் மாரியம்மன் கோயிலுக்கு யானைதான் சுமந்து செல்லும். ஸ்ரீரங்கநாதரான அண்ணனே தங்கையான அன்பில் மாரியம்மனுக்கு பூக்கொடை வழங்குவதாக ஐதீகம். தேர்த்திருவிழாவின்போது அனைவரும்கூடி தேர் இழுக்க, ஸ்ரீரங்கம் கோயில் யானை அவர்களை வழிநடத்தி முன் செல்லும். இறுதி நிகழ்வான பஞ்சப்பிரகார விழாவின்போதும், ஊர் முழுக்க யானை பவனி நடைபெறும்.

கீழன்பில் விஜய்
கீழன்பில் விஜய்

இவ்விழாக்கள் அனைத்திலும், இந்து அறநிலையத்துறையின் ஜே.சி. முன்னிலை வகிப்பார். அந்த நடைமுறை தொடர்கிறது. ஆனாலும், யானை மட்டும் பங்கேற்பதில்லை. கடந்த 1990 – வரையில் இருந்த இந்த நடைமுறை, ஸ்ரீரங்கம் கோயில் யானை கோபால் இறந்து போனதையடுத்து அப்படியே கைவிடப்பட்டது. அதன்பிறகு, கோபால் யானைக்கு பதில் பல யானைகள் வந்துவிட்டாலும், கீழன்பில் மாரியம்மன் கோயில் விசேசங்களுக்கு அனுப்பி வைக்கும் வழக்கத்தை எவ்வித காரணமும் இல்லாமல் கைவிட்டுவிட்டார்கள்.

நாங்களும் கிராமத்தின் சார்பில் பலமுறை நேரில் முறையிட்டிருக்கிறோம். கடிதம் அனுப்பியிருக்கிறோம். அமைச்சர் வழியாக முயற்சி எடுத்திருக்கிறோம். ஆனால், எதற்கும் அவர்கள் இசைந்து கொடுக்கவில்லை.” என்கிறார், கீழன்பில் கிராமத்தைச் சேர்ந்த விஜய்.

கீழன்பில் மாரியம்மன் கோவில்
கீழன்பில் மாரியம்மன் கோவில்
4 bismi svs

இணைந்த கைகள் என்ற தன்னார்வலர் குழுவை நிர்வகித்து வரும் விஜய், அன்பில் மட்டுமின்றி கோயில் சார்ந்து நிகழும் திருவிழாக்களில் பங்கேற்று ஒழுங்குப்படுத்தும் பணிகளை செய்து வருகிறார். தற்போது, அன்பில் கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுடன் ஒன்றிணைந்து முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கைவிடப்பட்ட யானை சேவையை தொடர்ந்து பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிடுகிறார்.

“ஸ்தலத்தார் மற்றும் ஸ்தானிகர்களுக்கான முக்கியத்துவத்துவத்தை மட்டுப்படுத்த வேண்டும். கோயில் முழுக்க தங்களது கட்டுப்பாட்டில் உள்ளதாக காட்டிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலிருந்துதான், இதுபோன்ற காரியங்களை செய்து வருகிறார்கள். கோயில் யானைக்கும் ஸ்தலத்தார்களும் இருந்த இடத்தில் இன்று இந்து அறநிலையத்துறையின் ஜே.சி. முன்னின்று விழாவை நடத்துகிறார். நாங்கள் எங்களது உரிமையை நிலைநாட்டுவதற்காக நீதிமன்றத்தின் உதவியை நாடியிருக்கிறோம்.” என்கிறார்கள், ஸ்தானிகர் தரப்பில்.

கீழன்பில் மாரியம்மன் கோவில்
கீழன்பில் மாரியம்மன் கோவில்

கீழன்பில் மாரியம்மன் கோயில் செயல் அலுவலர் வெங்கடேசனிடம் பேசினோம், “கோயில் தரப்பில் உள்ள கோரிக்கைகளை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதும்; உயர் அதிகாரிகள் மட்டத்தில் எடுக்கும் முடிவுகளை அமல்படுத்துவது என்ற அளவில்தான் எனது அதிகார வரம்பு இருக்கிறது. என்ன காரணத்தினால் சேவையை நிறுத்தினார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால், யானை குழந்தை மாதிரி. ஏற்கெனவே பழகிய இடத்திற்கு வந்து செல்வதில் பிரச்சினை இல்லை. அதன்படிதான், இதே அன்பில் பெருமாள் கோயிலுக்கு வந்து செல்கிறது.

மாரியம்மன் கோயிலை பொருத்தவரையில் தேர்திருவிழாவில் யானையை பங்கேற்க வைப்பது என்பது சிக்கலானது தான். தேரின் பிரம்மாண்டமான அமைப்பும் கூட்டமும் மேள தாள ஓசையுமே பிரச்சினைக்கு காரணமாக அமையலாம். தேர் திருவிழா தவிர்த்து மற்ற விழாக்களில் யானையை பங்கேற்க வைக்கலாம் என்பதே எனது கருத்தும். ஆனால், அதற்கும் வனத்துறை உள்ளிட்டு பல அனுமதிகளை வாங்கியாக வேண்டும். இவர்களது கோரிக்கை தொடர்பாக ஜே.சி. மட்டத்தில்தான் முடிவெடுக்க முடியும்.” என்கிறார் அவர். இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் மாரியப்பனை அங்குசம் சார்பில் தொடர்புகொண்டோம். நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை.

கீழன்பில் மாரியம்மன் கோவில்
கீழன்பில் மாரியம்மன் கோவில்

கோயில் யானையை துன்புறுத்தும் வகையில் அமைந்திருக்கிறதா? இல்லை விழாக்களில் பங்கேற்க யானையை அனுமதித்தால் அசம்பாவிதங்கள் நடந்துவிடும் என்ற எச்சரிக்கையின் காரணமாக நிறுத்திவிட்டார்களா? இல்லை, ஆகம விதிகளுக்கு எதிரான செயல்பாடாக இருக்கிறது என்பதாலா? என்பது போன்ற குறிப்பான காரணங்கள் எதுவுமின்றி தன்னிச்சையாக சேவை நிறுத்தப்பட்டிருக்கிறது என்பது ஒரு விசயம். மீண்டும் யானை சேவை வேண்டும் என்ற கிராம மக்களின் கோரிக்கைக்கு பொறுப்பான முறையில் பதில்கூட சொல்லாமல், காலம் தாழ்த்தி அலைக்கழிப்பது மற்றொன்று. இவையிரண்டுக்கும் இந்து அறநிலையத்துறைதான் உரிய பதிலும் தக்க நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும்.

கீழன்பில் மாரியம்மன் கோவில் (3)
கீழன்பில் மாரியம்மன் கோவில் (3)

தற்போதைய திமுக அரசில் கௌரவமான இடத்திலும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகவும் இருந்துவரும் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் சொந்த ஊரில்தான் தீராத இந்த யானை பஞ்சாயத்து என்பது வேதனையானதுதான்.
ஒன்று யானை சேவையை வழங்குவதற்கான வழிமுறைகளை காண வேண்டும்; அல்லது,  இன்ன காரணங்களுக்காகத்தான் யானை சேவை மறுக்கப்படுகிறது என்பதையாவது தெளிவுப்படுத்த வேண்டும் என்பதே அன்பில் கிராம மக்களின் ஏக்கமும் எதிர்பார்ப்புமாக அமைந்திருக்கிறது.

– ஆதிரன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.