அரசுப் பள்ளிகளுக்கு தாவும் மாணவர்கள்
தமிழகத்தில் இந்த ஆண்டில் தனியார் பள்ளிகளிலிருந்து சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு இடம் மாறியுள்ளது தெரியவந்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்குப் போதிய வசதிகள் இல்லை எனவும், கல்வித் தரம் மந்தமாக இருப்பதாகவும் கூறி பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளைத் தனியார் பள்ளிகளுக்குக் கல்வி பயில அனுப்புகின்றனர். அரசுத் துறை அதிகாரிகள் கூடத் தங்களது பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கத் தயங்குகின்றனர். தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் அதிகமாக இருந்தாலும் கல்வித் தரத்தைக் கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகளை நோக்கியே பெற்றோர்கள் படையெடுக்கின்றனர். இந்தப் பழக்கம் தற்போது மாறியுள்ளது. 2019-20ஆம் ஆண்டில் மட்டும் 2 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கு ஒரு லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிகளுக்கு இடம் மாறியுள்ளனர். தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் அளவுக்கு அதிகமான கட்டணங்களால்தான் இவ்வாறு மாணவர்கள் இடம் மாறுவதாகத் தலைமை ஆசிரியர்களும் கல்வித் துறை நிபுணர்களும் கூறுகின்றனர்.
2018-19ஆம் ஆண்டில் மொத்தம் 3.93 லட்சம் பேர் ஒன்றாம் வகுப்பு படித்த நிலையில் இந்த ஆண்டில் இரண்டாம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை 4.16 லட்சமாக உயர்ந்துள்ளது. தனியார் பள்ளிகளிலிருந்து 23,032 பேர் இரண்டாம் வகுப்பில் இணைந்துள்ளனர். மூன்றாம் வகுப்பில் 30,744 மாணவர்களும், நான்காம் வகுப்பில் 27,868 மாணவர்களும், ஐந்தாம் வகுப்பில் 23,859 மாணவர்களும் புதிதாக இணைந்துள்ளனர். இரண்டு முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டில் ஒரு லட்சம் வரையில் உயர்ந்துள்ளதாகக் கல்வித் துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மாறாக, 2018-19ஆம் ஆண்டில் சுமார் 2 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளிலிருந்து தனியார் பள்ளிகளுக்கு இடம் மாறியிருந்தனர். சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டில் ஒன்றாம் வகுப்பில் இணைந்த மாணவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட சமமாகவே இருக்கும் நிலையில், 2 முதல் 5 வரையிலான வகுப்புகளில் புதிதாக இணைந்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.