சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் சன் டி.வி. ஊழியர் மணிகண்டன் தூக்கிட்டு தற்கொலை !
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் சன் டி.வி. ஊழியர் மணிகண்டன் தூக்கிட்டு தற்கொலை !
சென்னை ஓமாந்தூரார் பகுதியில் உள்ள சென்னை பிரஸ் கிளப் வளாகத்தில், சன் டி.வி. ஊழியர் மணிகண்டன் நேற்று (17.07.23) இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாரம்பரியமிக்க பத்திரிகையாளர் மன்றத்திற்கு ஆண்டு கணக்கில் முறையான தேர்தலே நடத்தாமல் சங்க செயல்பாடுகளே முடங்கிக்கிடப்பதோடு, பாரதிதமிழன் என்கிற பெருமாள், ஜேக்கப், அசதுல்லா ஆகிய மூவரின் கட்டுப்பாட்டில், அந்தக் கட்டிடம் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருக்கிறார், மூத்தப்பத்திரிகையாளரும் சென்னை பிரஸ் கிளப் அமைப்பின் கௌரவ ஆலோசகருமான N.செல்வராஜ்.
முதல்முறையல்ல, இதற்கு முன்னர் இதே பத்திரிகையாளர் மன்றத்தில் யு.என்.ஐ. குமார் இறந்துபோனதாகவும், பத்திரிகையாளர் மன்றத்தில் குடித்துவிட்டு வீட்டுக்கு சென்ற நிலையில் பாக்யா மாரடைப்பால் உயிரிழந்ததாகவும் குறிப்பிடுகிறார்.
தற்போது, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சன் டிவி ஊழியரை பொறுத்தமட்டில், பணிச்சுமை காரணமாக இருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள் அவரது நண்பர்கள்.
சில நேரம் புகைப்படக்காரராகவும், சில நேரம் கார் ஓட்டுநராகவும், அவர் விருப்பத்திற்கேற்பத்தான் சன் டி.வி. நிறுவனத்தில் பணியாற்றி வந்திருக்கிறார். கூடவே, குடிபோதைக்கு அடிமையானவர் என்கிறார்கள். இதன் காரணமாகவே, சரிவர பணிக்கு வராமல் இருந்ததாகவும் தெரிவிக்கிறார்கள். இந்நிலையில்தான், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். சிறு வயதில் குழந்தைகள் இருக்கும் நிலையில், குடிபோதையில்தான் அவர் அந்த முடிவை எடுத்திருக்க வேண்டும் என சந்தேகிக்கிறார்கள்.
அவர் எதனால் தற்கொலை செய்துகொண்டார் என்பதும்; அதிலும் குறிப்பாக, குடிபோதையில் பத்திரிகையாளர் மன்றத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் சர்ச்சைக்குரியதாகியிருக்கிறது.
பத்திரிகையாளர்களின் மனமகிழ் மன்றமாக அல்லாமல், குறிப்பிட்ட சில பத்திரிகையாளர்களுக்கான ”பார்” ஆகவே செயல்படுவதாக பகிரங்கமாக குற்றஞ்சுமத்துகிறார், பத்திரிகையாளர் செல்வராஜ். பத்திரிகையாளர் மன்றத்தில் என்னதான் நடக்கிறது? என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது, இவ்விவகாரம்.
– வே.தினகரன்.