சுனிதா வில்லியம்ஸ் வரவை கொண்டாடிய கோவில்பட்டி நகராட்சி பள்ளி மாணவா்கள்!
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்து பூமி திரும்பியதை வரவேற்று கோவில்பட்டி நகராட்சி பள்ளியில் கொண்டாட்டம்.
சுனிதா வில்லியம்ஸ் பற்றி அழகாக எடுத்துக் கூறிய மாணவர். சுனிதா வில்லியம்சுக்கு பிடித்த உணவான சமோசா மாணவர்களுக்கு வழங்கப்பட்டதால் மகிழ்ச்சி.
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனையான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் புட்ச் வில்மோர், கடந்தாண்டு ஜூன் 5ம் தேதி, சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்று தங்களது ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். சர்வதேச விண்வெளி மையத்தில் ஒன்பது மாதங்களாக இருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் நேற்று அதிகாலை பூமிக்கு திரும்பினர்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியிலிருந்து பாதுகாப்பாக வந்ததை, தொடர்ந்து நாடு முழுவதும் பட்டாசு வெடித்தும், நடனமாடியும் மக்கள் கொண்டாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புது ரோட்டில் உள்ள நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியிலிருந்து பாதுகாப்பாக வந்ததை, கொண்டாடும் வகையில் கோவில்பட்டி வட்டார ஸ்ரீ ராகவேந்திரா அறக்கட்டளை சார்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் மேற்கொண்ட ஆய்வுகள் பற்றியும், அவருக்கும் இந்தியாவிற்கும் தொடர்புகள் குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்துரைத்தனர். அதேபோன்று அந்தப் பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவர் சுனிதா வில்லியம்ஸ் குறித்து அழகாக எடுத்துக் கூறிய அனைவரின் கவனத்தினையும் ஈர்த்தார்
இறுதியாக சுனிதா வில்லியம்ஸ்க்கு பிடித்த உணவாக கூறப்படும் சமோசா மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
— மணிபாரதி.