“ஜவான் மூலம் தமிழ் சினிமாவில் எனக்கு கிடைத்த நட்பு வட்டம் பெருசு” – ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் ஷாருக்கான் உருக்கம் !
ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘ஜவான்’ திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முன்னதான விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.
சென்னையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் அமைந்திருக்கும் கலை அரங்கில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் மற்றும் ரசிகர்களுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, யோகி பாபு, அனிருத், சான்யா மல்ஹோத்ரா, பிரியாமணி, பாடலாசிரியர் விவேக், சண்டை பயிற்சி இயக்குநர் அனல் அரசு, படத்தொகுப்பாளர் ரூபன், கலை இயக்குநர் முத்துராஜ், நடன இயக்குநர் ஷோபி, ‘ஜவான்’ படத்தை தமிழகம் மற்றும் கேரளாவில் வெளியிடும் விநியோகஸ்தரான ஸ்ரீ கோகுலம் கோபாலன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவிற்கு வருகை தந்திருந்த அனைவரையும் விநியோகஸ்தரான ஸ்ரீ கோகுலம் கோபாலன் வரவேற்றார்.
ஷாருக்கான் பேசுகையில் , ” தமிழ் திரையுலகில் இதற்கு முன் மணிரத்னம், சந்தோஷ் சிவன் ஆகிய இருவரை மட்டுமே எனக்கு தெரியும். ஜவான் படத்தின் மூலம் ஏராளமான தென்னிந்திய திரையுலக கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளின் அறிமுகமும், நட்பும் கிடைத்திருக்கிறது. நான் தமிழ் மற்றும் தென்னிந்திய திரையுலகத்திலிருந்து நிறைய விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்.
விஜய் சேதுபதி என் ரசிகையை பழி வாங்கி விட்டதாக சொன்னார். அது நிச்சயம் நடக்காது. ஏனென்றால் அவர் என் ரசிகை. நான் ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டேன். எங்கள் பட தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே இயக்குநர் அட்லீ சொந்தமாக ஒரு படைப்பை உருவாக்கி இருக்கிறார். அவருக்கும் என் வாழ்த்துக்கள். பெற்றோர்களாகியிருக்கும் அட்லீக்கும் பிரியாவிற்கும் வாழ்த்துக்கள்.
இந்தப் படத்தின் நடனத்திற்காக நான் பட்ட பாடு.. மறக்க இயலாது. இயக்குநர் அட்லி மரண மாஸ்- ஒளிமயமான விஷ்ணு- கம்பீரமான முத்துராஜ்- விறுவிறுப்பான ரூபன்-அட்டகாசமான விஜய் சேதுபதி- வித்தைக்காரன் அனிருத் என இளம் திறமையாளர்களின் கூட்டணியில் தயாராகி இருக்கிறது ‘ஜவான்’.
இயக்குநர் அட்லீ ‘ஜவான்’ படத்தில் வித்தியாசமான கோணத்தில் என்னை காட்சிப்படுத்தி இருக்கிறார். படத்தில் விஜய் சேதுபதியின் தோற்றம் நீங்கள் திரையில் பார்க்கும்போது தான் புரியும். சென்னை எக்ஸ்பிரஸ் படத்திற்கு பிறகு மீண்டும் பிரியாமணி இப்படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் அனைத்து ரசிகர்களையும் கவரும். இந்த திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது ” என்றார்.
ஜவான் திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கௌரி கான் தயாரித்திருக்கிறார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றிருக்கிறார். இயக்குனர் அட்லி இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.