6.50 கோடி இழந்த கதை… பணமோசடியை அடுத்து நிலமோசடியிலும் நியோமேக்ஸ்!

0

6.50 கோடி இழந்த கதை…

பணமோசடியை அடுத்து நிலமோசடியிலும் நியோமேக்ஸ்!

https://businesstrichy.com/the-royal-mahal/

நியோமேக்ஸ் நிறுவனத்தின் தில்லாலங்கடி பிசினஸ் குறித்து, இம்மோசடி விவகாரம் அம்பலத்திற்கு வந்த நாள் முதலாக நமது அங்குசம் இதழ் தொடர்ந்து பல்வேறு கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறது. முன்னணி செய்தி ஊடகங்களே மேலோட்டமான செய்தி போடுவது என்ற அளவில் வரம்பிட்டுக் கொண்ட இவ்விவகாரத்தை, செய்தியாளர்கள் குழுவின் பங்களிப்போடு, அதுவரை எந்த ஒரு ஊடகத்திலும் வெளிவராத பிரத்யேக செய்திகளாக முதன்முறையாக நமது அங்குசம் இதழ் அவற்றையெல்லாம் வெளிக்கொண்டு வந்திருக்கிறது.

இதுவரை, போலீசிடம் முறையிடலாமா? நியோமேக்ஸ் சொல்வது போல பொறுத்திருந்து காரியம் சாதித்துக் கொள்ளலாமா? மீடியாவுக்கு முகம் காட்டலாமா? அதனால், போட்ட முதலுக்கு மோசம் வந்துவிடுமா? என்ற பணம் கட்டி ஏமாந்தவர்களின் பயமும் பீதியும் இணைந்த தயக்கங்களே நியோமேக்ஸ் நிறுவனத்தின் மோசடி அதன் முழுப்பரிமாணத்தில் வெளி உலகிற்கு அம்பலம் ஆகாமல் தடுக்கும் கேடயமாக இருந்து வருகிறது.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்திருப்பவர்களுள் பெரும்பாலோனோர் சில இலட்சங்களில் முதலீடு செய்தவர்கள்தான் என்றும்; கோடிகளில் முதலீடு செய்த பெரும்புள்ளிகள் எல்லாம் போலீசு, கோர்ட் என அலையாமல் மேல்மட்டத்தில் உள்ள தங்களது தொடர்புகள் – நட்புகள் – உறவினர் களைப் பிடித்து அவர்கள் வழியாக சுமுகமாகப் பேசி எப்படியாவது காரியம் சாதித்துக் கொள்ள வேண்டும் என்ற ”ரூட்” டில் முயற்சித்து வருவதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிட்டியிருக்கின்றன.

இந்தக்கூற்றுகளையெல்லாம் உறுதிப்படுத்தும் வகையிலும், நியோமேக்ஸ் நிறுவனத்தின் தில்லாலங்கடி கதைகளை சுக்கு நூறாக்கும் வகையிலும் பல்வேறு விசயங் களை அங்குசம் இதழோடு பகிர்ந்திருக்கிறார், நியோமேக்ஸ் நிறுவனத்தில் நம்பி பணம் கட்டி ஏமாந்தவர்களுள் ஒருவரான, சிவகாசியை சேர்ந்த ராமமூர்த்தி.

ராமமூர்த்தி
6.50 கோடி இழந்த ராமமூர்த்தி

நியோமேக்ஸ் நிறுவனத்தின் தில்லாலங்கடி பிசினஸ் குறித்த செய்திகளோடு வெளியான அங்குசம் இதழை தொடர்ந்து வாசித்த ராமமூர்த்தி, தானும் நியோமேக்ஸிடம் 6.5 கோடி இழந்து நிற்பதாகவும் தங்களுக்கென்று ஒதுக்கிய நிலத்தையும் மோசடி செய்து நியோமேக்ஸ் நிறுவனமே அபகரித்துக் கொண்டதாகவும் இவற்றுக்கெல்லாம் போதுமான ஆதாரங் களை கைவசம் வைத்திருப்பதாகவும், அங்குசம் வழியே இவற்றையெல்லாம் அம்பலப்படுத்த வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பியிருந்தார் ராமமூர்த்தி.

தன்னைப்போலவே, தனது மாமனாரும் நியோமேக்ஸ் நிறுவனத்தை நம்பி 39 இலட்சத்தை பணத்தை கட்டி ஏமாந்துவிட்டதாகவும், மதுரை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிப்பதற்காக அவருடன் மதுரை வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து, மதுரை செய்தியாளர் ஷாகுல் அவர்களை நேரில் சந்தித்து அவர் வழியே விரிவான நேர்காணல் ஒன்றையும் வழங்கியிருக்கிறார், ராமமூர்த்தி.

வீடியோ லிங்

சவுதி அரேபியாவில் பெட்ரோலிய நிறுவனம் ஒன்றில் பொறியாளராக 34 ஆண்டுகள் பணி செய்தவர் ராமமூர்த்தி. மாதம் ஒன்றுக்கு நான்கு இலட்சங்களுக்கு குறையாமல் சம்பளம் பெற்றவர். தங்களது குடும்பத் தேவை போக சேமித்து வைத்திருந்த தொகையிலிருந்து, 2010-ல் ஒரு கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறார். அன்றிலிருந்து 2023 வரையிலான இந்த கால இடைவெளிக்குள் பல்வேறு தவணைகளில் ஆக மொத்தம் இதுவரை 6.5 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறார்.

தலா 2 கோடி வீதம் மூன்று கம்பெனிகளின் பெயரிலும் தனியே 50 இலட்சம் மற்றொரு கம்பெனியின் பெயரிலுமாக, நியோமேக்ஸ் உள்ளிட்ட அதன் துணை நிறுவனங்களில் முதலீடு செய்ததற்கான ஆவணங்களை கையில் வைத்திருக்கிறார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ராமமூர்த்தியின் மாமனார்
 39 இலட்சத்தை இழந்தராமமூர்த்தியின் மாமனார்
தலைமறைவாக உள்ள நியோமேக்ஸ் நிர்வாகிகள் பாலசுப்ரமணியன், வீரசக்தி, கமலக்கண்ணன்
தலைமறைவாக உள்ள நியோமேக்ஸ் நிர்வாகிகள் பாலசுப்ரமணியம், வீரசக்தி, கமலக்கண்ணன்

2010 முதலாக இன்றுவரையில் மூன்றாண்டு களின் முடிவில் முதிர்வுத்தொகையையும் வழங்கவில்லை; மாதந்தோறும் வழங்குவதாக சொன்ன வட்டிப்பணமும் வந்து சேரவில்லை; போட்ட முதலீட்டுக்கு ஆதாரமாக எழுதிக் கொடுத்திருந்த நிலத்தையும் தற்போது அவர்களே அபகரித்துக்கொண்டார்கள் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார், சிவகாசி ராமமூர்த்தி. நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசில் முதன் முதலாக புகார் கொடுத்த்தவரும் சிவகாசி ராமமூர்த்திதானாம்.

இதுபோல புகார் கொடுத்தவர்களை சரிகட்டி அவர்களுக்கு மட்டும் கணக்குத்தீர்த்து அப்பிரச்சினை வெளியே வராமல் பார்த்துக்கொள்வதை ஒரு உத்தியாகவே கடைபிடித்து வந்திருக்கிறது, நியோமேக்ஸ் நிறுவனம். அதன்படி, ராமமூர்த்தி விவகாரத்திலும் எவ்வளவு செட்டில்மென்ட், எப்படி செட்டில் செய்யப்போகிறார்கள் என்பதை விரிவான டாகுமெண்டாக எழுதிகொடுத்து பிரச்சினையை கமுக்கமாக முடித்திருக்கிறது. ஆனாலும், வாக்குறுதி அளித்தபடி இன்றுவரையில் செட்டில் செய்யவில்லை என்கிறார், ராமமூர்த்தி.

மிக முக்கியமாக இதில் கவனிக்கத்தக்க விசயமே, 2010லிருந்து 2023 வரையிலான இந்த 13 ஆண்டுகால இடைவெளியில், ஒருமுறைகூட அவர் முதலீடு செய்து முதிர்வு பெற்ற காலத்தில் பணமாகவோ, நிலமாகவோ நியோமேக்ஸ் திருப்பித் தரவில்லை. 2010 இல் போட்ட பணம் 2013 இல் முதிர்வு பெற்றபோது, இப்போது பணம் இல்லை என்று சொல்லி அப்படியே அடுத்த மூன்றாண்டுக்கு நீட்டிப்பு செய்து அதற்கென்று தனியே பத்திரம் கொடுத்திருக்கிறது, நியோமேக்ஸ். 13 வருசமாக, இன்று தருகிறேன். இதோ நாளை தருகிறேன் என்று இன்றுவரை நியோமேக்ஸ் நிறுவனம் தனக்கு போக்கு காட்டி வருவதாக சொல்கிறார், ராமமூர்த்தி.

இவற்றையெல்லாம்விட, அதிர்ச்சி ரகம் இதுதான். அவர் போட்ட முதலீட்டுக்கு ஏற்ப குறிப்பிட்ட நிலத் தை ராமமூர்த்தியின் மனைவியின் பெயரில் ஒதுக்கீடு செய்திருக் கிறார்கள். நிலத்தை நேரடியாக கிரையப்பத்திரம் செய்யாமல், கிரய ஒப்பந்தமாக பதிவு செய்திருக்கிறார்கள். அதாவது, நியோமேக்ஸ் நிறுவனத்தை சார்ந்த இயக்குநர்கள் மற்றும் ராமமூர்த்தியின் மனைவி உள்ளிட்டு கூட்டுரிமை அடிப்படையில் அந்த ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலை யில், மோசடியாக ராமமூர்த்தியின் மனைவி யின் கையெழுத்தையும் அவர்களாகவே போட்டுக்கொண்டு, மோசடியான முறையில் அந்த இடத்தையும் வேறு நபருக்கு விற்றுவிட்டார்கள் என்று குற்றஞ்சாட்டுகிறார் ராமமூர்த்தி.

 போலீஸ் கஸ்டடி முடிந்து ஜாமீனில் வெளிவந்த நியோமேக்ஸ் நிர்வாகிகள் கபில், சைமன், பத்மநாதன்
போலீஸ் கஸ்டடி முடிந்து ஜாமீனில் வந்த நியோமேக்ஸ் நிர்வாகிகள் கபில், சைமன், பத்மநாதன்

இதுவரை நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக, பணமோசடி புகார் மட்டுமே எழுந்துவந்த நிலையில் தற்போது நில அபகரிப்பு புகாரும் சேர்ந்திருக்கிறது. நியோமேக்ஸ் நிறுவனம் போலி கையெழுத்துபோட்டு நில அபகரிப்பில் ஈடுபட்டதற்கு எதிராக திருநெல்வேலி எஸ்.பி. ஆபிசில் புகார் கொடுத்திருப்பதோடு, மாவட்ட நீதிமன்றத்தில் தனியே வழக்கும் பதிவு செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடுகிறார், ராமமூர்த்தி. போட்ட முதலீட்டுக்கு ஆதாரமாக எழுதிகொடுத்த நிலத்தை மீட்டுத்தருமாறு கோரிக்கை விடுக்கிறார், ராமமூர்த்தி. அந்த நிலத்தை தரமுடியாது, பணமாக வேண்டுமானால் தருகிறோம்.

அதுவும் எங்களுக்கு எப்போது பணம் கிடைக்கிறதோ அப்போதுதான் தருவோம் என்கிறது நியோமேக்ஸ். வேடிக்கையாகவும், மட்டுமல்ல; நியோமேக்ஸை நம்பி பணத்தை போட்டு ஏமாந்து நிற்போரை பைத்தியக்காரனுக்கும் செயல் என்றே தோன்றுகிறது. பணமாக தரமுடியாது, வேண்டுமானால் நிலமாக பிரித்துக்கொடுக்கிறோம் இதற்காக தனி நீதிபதியை நியமித்து எங்கள் பஞ்சாயத்தை முடிவுக்கு கொண்டுவாருங்கள் என நீதிமன்றத்தில் மன்றாடும் இதே நியோமேக்ஸ்தான், ராமமூர்த்திக்கு அதுவும் அவருக்கென்று ஒதுக்கப்பட்ட நிலத்தைக்கூட தர மறுக்கிறது. பணமாக வேண்டுமானால், வாங்கிக்கொள் என்கிறது.

இதிலிருந்து, வெளிச்சத்திற்கு வந்திருக்கும் உண்மை என்னவெனில். போனியாகாமல் ஊருக்கு ஒதுக்குப்புறமாக, பொட்டல் காடாக கிடக்கும் சுடுகாட்டு நிலம் நியோமேக்ஸை நம்பி ஏமாந்த வாடிக்கையாளர்களுக்கு  மதுரை, திருநெல்வேலி, சிவகாசி உள்ளிட்ட நகரின் இதயப்பகுதிக்குள் அமைந்திருக்கும் பல கோடி ரூபாய் மதிப்புவாய்ந்த நிலம் எல்லாம், நியோமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களுக்கு. இன்னும் சொல்லப்போனால், மதுரை உயர்நீதிமன்றத் திற்கு பின்னால், ரிங் ரோடு அருகே என மதுரை சிட்டிக்குள்ளேயே நிறைய இடங்களை நியோமேக்ஸ் நிறுவனம் வளைத்துப் போட்டிருக்கிறது. இவையெல்லாம், அதன் முன்னணி இயக்குநர்களுள் ஒருவரான பாலசுப்பிரமணியன் பெயரிலும் அவரது மனைவியின் பெயரிலும் பதிவு செய்யப் பட்டிருக்கிறது.

மதுரையில் உள்ள இந்த இடங்களை விற்றாலே, குறைந்தபட்சம் 400 கோடி வரையில் விற்பனை செய்ய முடியும். இதைவைத்தே, வாடிக்கையாளர்களின் பிரச்சினையை எளிதாக தீர்த்துவிடலாம் என ஆலோசனை கூறுகிறார், சிவகாசி ராமமூர்த்தி.

நியோமேக்ஸ் குறித்து செய்தி வெளியான முதல் இதழில் “தில்லாலங்கடி பிசினஸ்” என்று குறிப்பிட்டிருந்தோம். பிசினஸ் மட்டுமல்ல; நியோமேக்ஸ் நிறுவனமே ”தில்லாலங்கடி” அண்ட் கோ தான் போல.

-வீடியோ லிங்

– வே.தினகரன், ஷாகுல், படங்கள்:ஆனந்த்.

 

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.