என்ன… நிகழ இருக்கிறது இந்திய மண்ணிலே….???
பாரதிய ஜனதா கட்சி ஆளுகின்ற மத்தியப்பிரதேச மாநிலம். கன்ஞ் மாவட்டம், சத்தர்பூரில் உள்ளது கதா கிராமம். அங்கு பிரசித்தி பெற்ற “பாகேஷ்வர் தாம்” என்கிற ஹனுமன் கோயில் அமைந்துள்ளது. அந்தக் கோயிலின் தலைமை அர்ச்சகர் தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி. மேலும் அவர் தான், “பாகேஷ்வர் தாம் ஜன சேவா சமிதி” எனும் இந்து சமூக நல அமைப்பின் தலைவராவார்.
அந்த மேற்கண்ட அமைப்பின் சார்பில் ஹனுமன் கோயில் அருகில் பரந்திருக்கும் பகுதியில், முழுதான “இந்து கிராமம்” உருவாக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்கான பூமி பூஜை செய்து கட்டிட வேலைகளையும் தொடங்கி விட்டார் அந்த தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி. இதற்கான பத்திரிகைச் செய்தி, 6.04.2025 ஞாயிறு தமிழ் இந்து தினசரியில் வெளியாகி உள்ளது).

மத்தியப்பிரதேச மாநிலம் கன்ஞ் மாவட்டத்தில் உருவாகிடப் போகிற அந்த இந்து கிராமம் தான், இந்தியாவின் முழுதான முதல் “இந்து கிராமம்” எனக் குறிப்பிடப்பட இருக்கிறது. 2௦25 – 2௦27 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்குள் குறிப்பிட்ட “இந்து கிராமம்” கட்டி முடிக்கப்பெற்று முழுமையடைந்திட திட்டம் இடப்பட்டுள்ளது.
இந்து சனாதனத்தைப் பின்பற்றாதவர்கள், இந்து கிராமத்தின் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனப்படுகிறது. மேலும், ஆயிரம் இந்து குடும்பங்கள் மட்டும் இந்த இந்து கிராமத்தில் வசிக்கும் அளவுக்கு வீடுகள் கட்டித் தந்திடவும் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்து மற்றும் சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்களுக்கு மட்டுமே, இந்த இந்து கிராமத்தில் நிலம் வழங்கப்படுகிறது. சமிதியின் சார்பில் இதற்காக இலவசமாக வழங்கப்படும் நிலத்தினை வேறு யாரும் விலைக்கு வாங்கவோ, வேறு யாரிடமும் விலைக்கு விற்கவோ முடியாது. இந்த இந்து கிராமத்தின் உள்ளே, இந்துக்கள் அல்லாதவர்கள் நுழையக் கூடாது. நுழைய முடியாது. தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெளி நபர்களே ஆகினும் இந்துவாகவும் சனாதனத்தில் நம்பிக்கை உள்ளவர்களாகவும் இருந்தால் மட்டுமே இந்த இந்து கிராமத்தின் உள்ளே சென்று வரலாம்.
“இந்து தேசத்தின் கனவு என்பது ஓர் இந்து வீட்டில் இருந்து தொடங்குகிறது. அது எவ்விதமெனில், ஓர் இந்து வீடு. இந்து கிராமம். இந்து மாவட்டம். இந்து மாநிலம் மற்றும் இந்து அரசு என அமைப்பு ரீதியாக உருவான பின்னரே நம்முடைய “இந்து தேசம்” என்கிற கனவு நிறைவேறும்.” என்று அழுத்தம் திருத்தமாகப் பேசுகிறார் மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கன்ஞ் மாவட்டத்தின் சத்தர்பூர் அருகே பாகேஷ்வர் தாம் ஹனுமன் கோயில் பகுதியில் அமைந்திடவுள்ள இந்து கிராமம் உருவாக்கி வரும் தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இது ஏதோ மத்தியப்பிரதேசத்தில் எங்கோ ஒரு கிராமத்தில் அமைய இருக்கிற புதிய ‘இந்து கிராமம்” என்கிற நிகழ்வாக மட்டுமே இதனைக் கருதி விட முடியாது. மதச்சார்பின்மை என்கிற மத நல்லிணக்கத்தின் மீதாகக் கொட்டிக் கவிழ்த்து விடப்படும் கொடிய விஷ விதைகளில் முதல் விஷ விதை இது.
இந்துவா, இஸ்லாத்தா, கிறிஸ்துவா என்பதைக் காட்டிலும் மதச்சார்பின்மை எனும் மத நல்லிணக்கமா என்பது தான் நம் அனைவர்க்கும் உயிர் மூச்சாகும். மானுடம் காக்கப்பட வேண்டும். மனிதம் தழைத்தோங்க வேண்டும்.
— ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு.