அங்குசம் பார்வையில் ‘தில்ராஜா’ திரைப்படம் திரைவிமா்சனம்
தயாரிப்பு : ‘கோல்டன் ஈகிள் ஸ்டுடியோஸ்’ கோவை பாலசுப்பிரமணியம். டைரக்ஷன் : ஏ.வெங்கடேஷ். நடிகர்—நடிகைகள் : விஜய் சத்யா, ஷெரின், சம்யுக்தா, இமான் அண்ணாச்சி, ஏ.வெங்கடேஷ், வனிதா விஜகுமார், கு.ஞானசம்பந்தம், விஜய் டிவி, பாலா, அம்மு, சிஸர் மனோகர், கராத்தே ராஜா, மூக்குத்தி முருகன், தணிகைவேல். ஒளிப்பதிவு: மனோ வி.நாராயணா, இசை : அம்ரிஷ், எடிட்டிங் : சுரேஷ் அர்ஸ், நடனம் : செந்தாமரை, ஸ்டண்ட் மாஸ்டர் : சூப்பர் சுப்பராயன். பி.ஆர்.ஓ. : புவன் செல்வராஜ்.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் அதிதீவிர ரசிகர், ரஜினி [ ஹீரோ விஜய் சத்யா] கார் மெக்கானிக்காக இருந்தாலும் பிரபல கன்ஸ்ட்ரஷன் நிறுவனத்தில் ஆர்க்கிடெக்டாகவும் வேலை செய்கிறார். மனைவி ஷெரின் மற்றும் ஐந்து வயது பெண் குழந்தையுடன் வசிக்கும் ரஜினி, ஒரு நாள் குடும்பத்துடன் ஷாப்பிங் போய்விட்டு வரும் போது, அமைச்சர் ராஜவேலு [ ஏ.வெங்கடேஷ் ]வின் மகனும் அவனது நண்பர்களும் குடிபோதையில் வம்பிழுக்கின்றனர். ஷெரினையும் பலாத்கார பண்ண வெறியுடன் பாய்கிறார் அமைச்சர் மகன்.
இதனால் ஆவேசமாகும் ரஜினி அந்த குடிகார கும்பலுடன் மோதுகிறார். இதில் எதிர்பாராதவிதமாக அமைச்சர் மகன் கொல்லப்படுகிறான். இதனால் குடும்பத்துடன் தலைமறைவாகிறான் ரஜினி. ஒரு கட்டத்தில் தனது மகனைக் கொன்றது ரஜினி தான் என அமைச்சருக்குத் தெரிந்துவிடுகிறது. அமைச்சரிடமிருந்து ரஜினியும் அவனது குடும்பமும் தப்பித்ததா? என்பதன் க்ளைமாக்ஸ் தான் இந்த ‘தில்ராஜா’.
படத்தின் தலைப்புக்கேற்ப ஆளு சும்மா தில்லா ஆறடியில் ஆஜானுபாகுவாகத்தான் இருக்காரு ஹீரோ விஜய் சத்யா. ஸ்டண்ட் சீன்களிலும் இந்த ஆஜானுபாகு உடல்வாகு கை கொடுக்கிறது. ஆனால் நடிப்பில் பாடிலாங்குவேஜும் வசன உச்சரிப்பும் தான் ரொம்பவே திணறுகிறது. இந்த இரண்டு விசயங்களில் கவனம் செலுத்தி சிரத்தையுடன் பயிற்சி எடுத்தால் தமிழில் ஒரு ரவுண்ட் வர வாய்ப்பு இருக்கு. பார்ப்போம் கவனம் செலுத்துகிறாரா? சிதறுகிறாரான்னு.
விஜய் சத்யாவுக்கு ஜோடியாக, மாஜி ஹீரோயின் ஷெரின். இதற்கு முன் சில படங்களில் தளுக் மொழுக்குன்னு இருந்த ஷெரின் இதில் ரொம்பவே இளைத்திருக்கார். அமைச்சராக ஏ.வெங்கடேஷ் வருகிறார், சில சீன்களில் மகன் சாவை நினைத்து உறுமுகிறார், க்ளைமாக்சில் கப்சிப்பாகிவிடுகிறார். இவரது மனைவியாக வனிதா விஜயகுமார் வந்து போகிறார். போலீஸ் அதிகாரியாக சம்யுக்தா முக்கால்வாசி சீன்களில் மஃப்டியில் தான் வருகிறார், அதான் அவருக்கு மேட்ச் ஆகிறது. க்ளைமாக்ஸ் ட்விஸ்டுக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லாக இருக்கிறார் சம்யுக்தா.
இசை அம்ரிஷ். பின்னணி இசையில் பெரும்பாலான சீன்களில் இரைச்சலும் சத்தமும் தான் அதிகம்.
டைரக்டர் ஏ.வெங்கடேஷின் ஸ்டைல் இதில் மிஸ்ஸிங். டைட்டிலில் இருந்த தில் படத்தில் இல்லை.
–மதுரை மாறன்