“தீ”- க்கு இரையான டெங்கு பணியாளர் சாவில் விலகாத மர்மம் !

வழக்கமான பணிகளை வழங்குவதற்குப் பதிலாக, மருத்துவக் கழிவுகளை எரிக்கச் சொல்லி உத்தரவிட்டது யார்? மற்ற பணியாளர்களை வழக்கமான....

0

“தீ”- க்கு இரையான டெங்கு பணியாளர் சாவில் விலகாத மர்மம் !

”எம்புள்ளதான் சாகுமா, வேலைக்குப்போனா? புள்ளைக்கு ஏதாவது ஒன்னுன்னா வேலைக்கு கூட்டிட்டு போனவங்களதானே கேட்கமுடியும்? அவங்களை எஃப்.ஐ.ஆர்.ல போடனுமா இல்லையா? ஏன் போட மாட்டேங்கறீங்க? தமிழ்நாட்டுல நீதியே இல்லையா?”னு கேட்போர் கண்கலங்கிட, அலற்றிப் புலம்புகிறார் அர்ச்சுணன்.

டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர் கலையரசன். கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக, மணப்பாறை ஒன்றியத்தில் பணிபுரிந்து வந்தவர். எப்போதும்போல, பணிக்கு கடந்த ஜூன்-26 அன்று கிளம்பியிருக்கிறார். அவருடன் சென்ற மற்ற ஆறு பேருக்கு வழக்கமான பணிகளை ஒதுக்கியவர்கள்; கலையரசனுக்கு மட்டும் மணப்பாறை பழைய அரசு மருத்துவமனையில் காலாவதியான மருந்து மாத்திரைகளை எரியூட்டும் பொறுப்பை வழங்கியிருக்கிறார்கள்.

கலையரசன்.
கலையரசன்.

- Advertisement -

கலையரசனும் மணப்பாறை பழைய அரசு மருத்துவமனையின் பின்புறம் மருத்துவக் கழிவுகளை கொட்டி அதற்குத் தீயிட்டிருக்கிறார். எதிர்பாராத விதமாக, அவர் மேல் தீ பற்றிய நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஜூன்-26 அன்று காலை 11 மணியளவில் தீக்காயமடைந்த கலையரசன், 4 நாட்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஜூலை 29 அன்று இறந்தும் போனார்.

தனக்குத்தானே தீயிட்டு கொண்டு கலையரசன் மாண்டுபோனதாக வழக்கை முடிக்க நினைத்திருக்கிறார்கள். கலையரசனின் அநியாயச் சாவுக்கு நீதி கேட்டு, அவரது உடலை வாங்க மறுத்து இரண்டு நாட்களாக போராடியிருக்கின்றனர், கலையரசனின் உறவினர்கள் மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் சங்கத்தினர்.

கலையரசன்
கலையரசன்

”சம்பவம் கேள்விபட்ட உடனேயே, எங்க சங்கத்திலிருந்து எல்லோரும் வந்துட்டோம். டெங்கு கொசு ஒழிப்புப் பணியாளரான கலையரசனுக்கு, வழக்கமான பணிகளை வழங்குவதற்குப் பதிலாக, மருத்துவக் கழிவுகளை எரிக்கச் சொல்லி உத்தரவிட்டது யார்? மற்ற பணியாளர்களை வழக்கமான பணிகளுக்கு அனுப்பி வைத்துவிட்டு, கலையரசனை மட்டும் குப்பையை எரிக்க அனுப்பியது ஏன்? அந்த வேலையை செய்யச்சொல்லி அனுப்பிய அதிகாரிகள்தான் கலையரசன் மரணத்துக்குப் பொறுப்பேற்க வேண்டும்.

கடைசி வரைக்கும் அதிகாரிங்க இதை மூடி மறைக்கத்தான் பார்த்தாங்க. தொடர்ச்சியான போராட்டம் நடத்துனதுக்கு அப்புறம்தான், ஒவ்வொரு அதிகாரியா வந்து பேசுனாங்க. கடைசியா பேசின சப்-கலெக்டர் மேடம், ”உரிய நடவடிக்கை எடுக்கிறேன்”னு சொன்னதாலதான் நாங்க உடலை வாங்கவே ஒத்துக்கிட்டோம்.” என்கிறார், டெங்கு கொசு ஒழிப்புப் பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவி ஜெ.நித்யா.

”ஆனா, இவ்ளோ போராட்டம் நடத்தியும் எஃப்.ஐ.ஆர்.ல அதிகாரிங்க பெயரைக்கூட குறிப்பிடல. அவரு என்ன வேலை வெட்டி இல்லாம இருக்கோம்னு பொழுதுபோக்குக்காக ஹாஸ்பிடல் குப்பைங்கள எரிக்கப்போனாரா? இல்லை, பொதுச்சேவையா செய்வோம்னு செஞ்சாரா? அதிகாரிகளோட அலட்சியத்தால அநியாயமா ஒரு உயிர் போயிடுச்சேனு நினைக்கிறப்போ ரொம்ப வேதனையா இருக்கிறது…” என்கிறார்கள், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் பாலமுருகன் மற்றும் தூய்மை பணியாளர் சங்கத்தின், மாநில செயலாளர், வெங்கடேசன் ஆகியோர்.

தம்பி தர்மர், அப்பா அர்ச்சுணன், தங்கை புவனேஷ்வரி.
தம்பி தர்மர், அப்பா அர்ச்சுணன், தங்கை புவனேஷ்வரி.

”ஒரு உயிர்ப்பலி போன பிறகும்கூட, என்ன ஏதுன்னு எட்டிக்கூட பார்க்கலை. இதுபோன்று மனசாட்சியே இல்லாத… தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தால்தான், இதுபோல் இன்னொரு உயிர்பலி ஏற்படாமல் தடுக்க முடியும்.” என்கிறார், தமிழ்நாடு அரசு அலுவலக அடிப்படை பணியாளர் சங்கத்தின் மாநில பொருளாளரும், சேலம் மாவட்டத் தலைவருமான முனியப்பன்.
”எங்க அண்ணன் கலையரசனுக்கு இன்னும் கல்யாணம்கூட ஆகலை.

4 bismi svs

ஆறு மாசத்துக்கு முந்திதான் எங்க அம்மா இறந்து போனாங்க. உடம்பு சரியில்லாம இருந்த அம்மாவ பார்த்துக்கிடனும்னு என் தங்கச்சி புவனேஸ்வரி 12-ஆவது படிப்ப பாதியில நிறுத்திட்டு வீட்டோடதான் இருக்காங்க. அப்பாவுக்கு வயசாயிடுச்சி, அவரால வேலை வெட்டிக்கெல்லாம் போக முடியாது. நான், டிப்ளமோ முடிச்சிட்டு கோயம்புத்தூர்ல ஒரு கம்பெனிலதான் வேலை செஞ்சிட்டு இருக்கேன். எங்க அண்ணன்தான், எங்க குடும்பத்துக்கு எல்லாமுமா இருந்தான். இன்னைக்கு அவனையும் இழந்துட்டு நிக்கிறோம்.” என கண்கலங்கினார், கலையரசனின் தம்பி தருமர்.

”சேலத்துல இருந்து வந்த சங்கத்து காரங்கதான் கடைசி வரைக்கும் கூட நின்னாங்க. எனக்கு தெரிஞ்சி பதினைஞ்சி வருசமா எங்க அண்ணன் இந்த வேலைக்கு போயிட்டு இருக்கான். அவன் சாவுக்குகூட, எந்த அதிகாரியும் வரலை. கூட வேலைக்கு போன உள்ளூர் ஆளுங்கக்கூட வரலைங்கிறது எவ்ளோ வேதனை தெரியுமா?”னு உடைந்து அழுத தருமரை தேற்ற வார்த்தைகளில்லை.
”உன் புள்ள தானா தீவச்சிக்கிட்டானு சொன்னாங்க. என் புள்ள அவ்ளோ கோழையெல்லாம் இல்ல. ரொம்ப பொறுப்பானவன். அவனுக்கு கல்யாணத்தை பன்னி வச்சிடனும்னுதான் ஏற்பாடெல்லாம் பன்னிகிட்டிருந்தோம்… சானிடைசர் இருந்த கேன் வெடிச்சிருச்சு… சானிடைசர் மேல பட்ருச்சி… அதான் புடுச்சிருச்சினு சொல்றாங்க. வீட்ல எது ஒன்னு இருந்தாலும் அது டையம் முடிஞ்சிருச்சானுதான் முதல்ல பார்ப்பான். அதுவும் மருந்தோட டப்பாவ தூக்கிப்போடாம, மருந்த கீழ ஊத்திட்டுதான் காலி டப்பாவ தூக்கிப்போடுவான். என் புள்ள ஊருக்கே சொல்வான்யா… அவனுக்கா ஒன்னும் தெரியாது? அவன் சாவுல ஏதோ இருக்கு?” எனும் தந்தை அர்ச்சுணனின் கேள்விக்கும் நம்மிடம் நிச்சயமாக விடையில்லை.

போராட்ட களத்தில் டெங்கு பணியாளர் சங்கத்தினர்.
போராட்ட களத்தில் டெங்கு பணியாளர் சங்கத்தினர்.

“எங்க பிளாக்ல மொத்தம் டெங்கு கொசு ஒழிப்புப் பணியாளர்கள் 20 பேர் இருக்காங்க. அதுல ஒருத்தர் கலையரசன். அவர் நல்ல ஒர்க்கர். அன்னைக்கு நான் கலையரசனை பார்க்கவே இல்லை. அவருக்கு நான் வேலையை ஒதுக்கவும் இல்லை. தனிப்பட்ட முறையில், நானாக யாருக்கும் வேலையை ஒதுக்கவும் முடியாது. பிளாக்கில் 4 ஹெல்த் இன்ஸ்பெக்டர்கள் இருக்கிறோம். டீம் ஒர்க்காகத்தான், வேலையை பிரித்துக்கொடுப்போம்.” என்கிறார், சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன்.

“டெங்கு கொசு ஒழிப்புப் பணியாளர்களை நிர்வகிப்பது ஹெல்த் டிபார்ட்மென்ட்தான். அவங்க கொடுக்கிற ரிப்போர்ட் வச்சி, அவங்களுக்கான சம்பளத்தை கொடுப்பது மட்டும்தான் எங்களது வேலை.” என்கிறார், மணப்பாறை வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) ஞானப்பிரகாசம்.

மணப்பாறை இன்ஸ்பெக்டரை தொடர்புகொண்டோம், விடுமுறையில் இருக்கிறேன். உதவி ஆய்வாளரிடம் பேசுங்கள் என்றார். உதவி ஆய்வாளரும், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியுமான பி.லியோனியா அவர்களை தொடர்புகொண்டோம். ”அவர்கள் என்ன எழுதிக்கொடுத்தார்களோ அதைத்தான் எஃப்.ஐ.ஆர்.ஆக போட்டிருக்கிறோம்.

அடுத்து, நாங்கள் விசாரித்த வகையில், அன்றைக்கு கொசு மருந்து எடுக்கத்தான் மணப்பாறை ஜி.எச்.க்கு போயிருக்கிறார். மருத்துவமனையை இடம் மாற்றுவதற்காக காலாவதியான மருந்துகளை தனியே எடுத்து வைத்திருக்கிறார்கள். குப்பையை எரித்தால் பணம் கொடுப்பார்கள் என்று, அவராகவே நான் குப்பையை எரிக்கிறேன் என்று கேட்டு அந்த வேலையை செய்திருக்கிறார். சானிடைசரை ஊற்றி பற்ற வைத்திருக்கிறார். அப்போதுதான் அவர்மீதும் தீப்பற்றியிருக்கிறது.” என்கிறார்.

மாவட்ட வருவாய் அலுவலர், அபிராமி.
மாவட்ட வருவாய் அலுவலர், அபிராமி.

மாவட்ட வருவாய் அலுவலர் (DRO) அபிராமி அவர்களை தொடர்பு கொண்டோம். “இந்த விவகாரம் தொடர்பாக, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநரிடம் அறிக்கை கேட்டிருக்கிறோம். அதேசமயம், அவரது குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறோம். ஏதேனும் உதவி தேவைப்பட்டால் என்னை நேரடியாக தொடர்பு கொள்ளுமாறு, எனது தனிப்பட்ட தொலைபேசி எண்ணையும் கலையரசனின் குடும்ப உறுப்பினர்களிடம் கொடுத்துள்ளேன்.” என்றார்.

பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறையில், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றிய ஒரு தற்காலிகப் பணியாளர் கலையரசன். அன்றையதினம் அவருக்கான பணி ஒதுக்கீடு செய்ததே சர்ச்சைக்கு உரியதாகியிருக்கிறது. அதேசமயம், அவர் பணியின் பொழுதுதான் இறந்திருக்கிறார். மாவட்ட நிர்வாகம் பொறுப்பேற்றுக் கொண்டதைப்போல, கலையரசன் மரணத்திற்கான நீதியும் அக்குடும்பத்திற்குமான நிவாரண நிதியையும் விரைந்து வழங்க வேண்டுமென்பதே நம் வேண்டுகோள்.

– வே.தினகரன்.

படிக்க மேலும் சில செய்திகள் 

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.