யுத்தமொழி பேசும் குரலும் ! விரலும்

0

யுத்தமொழி பேசும் குரலும்! விரலும்

யுத்தமொழி பேசும் குரலும்! விரலும்
யுத்தமொழி பேசும் குரலும்! விரலும்

1945 அல்லது 1946 ஆக இருக்கலாம்.

https://businesstrichy.com/the-royal-mahal/

காரைக்குடிக்கு அருகிலுள்ள புதுவயல் என்னும் கிராமத்தில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் உரையாற்றினாா். அதைக் கேட்பதற்கு சுற்று வட்டாரத்தில் இருந்து பலரும் கூடினா். அந்தக் கூட்டத்திற்கு காரைக்குடியிலிருந்து 36 வயதுள்ள ஒருவரும் 18 வயதுள்ள ஒரு இளைஞரும் சென்றிருந்தனா். அப்போதெல்லாம் இரவு 8 மணிக்கு மேல் பேருந்து கிடையாது. இரவு உணவும் கிடைக்காது. புரட்சிக்கவிஞரின் உரையைக் கேட்ட அந்த இரவில் கிடைத்த கடலைப்பருப்பை கொறித்துக் கொண்டே 16 கிலோமீட்டர் நடந்து காரைக்குடி வந்து சேர்ந்திருக்கிறார்கள் அந்த இருவரும்.

காரைக்குடி வருகிறவரை அவா்கள் பேசியது பேருந்து இல்லையே… நடந்து செல்கிறோமே… பசிக்கிறதே… என்பதை பற்றி அல்ல. நாட்டு நடப்பை – பெரியாரின் கருத்துக்களை – அண்ணாவின் சிந்தனைகளை – பாவேந்தரின் உரையை – பகுத்தறிவுப் பண்பாட்டு முழக்கங்களை – இன்று நாம் குறிப்பிடுகிறோமே திராவிடம் மாடல் என்று. அந்த திராவிட மாடலின் தொடக்கத்து உணர்வுகளை… இப்படியான பேச்சு 16 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க வைத்தது.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

36 வயது உடைய அந்த மனிதரின் பெயா் காரைக்குடி இராம.சுப்பையா. அந்த 18 வயது இளைஞரின் பெயா் கவிஞர் சாமி.பழனியப்பன். அன்றைக்கு அவர்கள் நினைத்திருக்க வாய்ப்பில்லை; அந்த இருவரின் குழந்தைகளும் ஒரே அரங்கில் தமிழக அரசின் விருதுகளை பெறுவார்கள் என்று. ஆம்… காரைக்குடி இராம சுப்பையா அவர்களின் மகன்தான் பேராசிரியர் சுப வீரபாண்டியன். கவிஞா் சாமி பழனியப்பன் அவர்களின் மகன்தான் கவிஞர் பழநிபாரதி. 13.01.2024 நாளன்று பேராசிரியர் சுப.வீ தந்தை பெரியார் விருதையும் கவிஞர் பழநிபாரதி மகாகவி பாரதியார் விருதையும் தமிழக முதலமைச்சரின் கரங்களால் பெற்றிருக்கிறார்கள்.

தந்தை பெரியார் விருது பெற்றுள்ள பேராசிரியர் சுப.வீ:

சுபவீ
சுபவீ

சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என அரை நூற்றாண்டிற்கும் மேலாகத் தொடர்ந்து அரசியலில் இயங்கி வந்த குடும்பப் பின்னணி என்பதால் இளமையிலேயே அரசியல் ஆர்வம் ஏற்பட்டது. கல்லூரியில் காலத்தில் திராவிட இயக்க ஆதரவாளராக வளர்ந்தார். எழுபதுகளில் மக்களிடம் செல்வாக்குப் பெறத் தொடங்கிய தமிழ் தேசியக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டார். கல்லூரிப் பேராசிரியராக இருந்தபொழுதே சுட்டி, விடுதலை, உண்மை, தென்மொழி உள்ளிட்ட பல இதழ்களில் கட்டுரைகளும் கவிதைகளும் எழுதினார். பின்னர் இனி, நந்தன் வழி, தாயகம் ஆகிய இதழ்களின் சிறப்பாசிரியராகப் பொறுப்பு வகித்தார்.

தமிழர் இயக்கம் என்னும் அமைப்பை உருவாக்கிச் செயல்பட்டார். தமிழ் தேசியத் தந்தை பெருஞ்சித்திரனாரின் கருத்துக்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு அவரது தென்மொழி, தியாகு நடத்திய திலீபன் மன்றம் உள்ளிட்ட தோழமைக் களங்களில் இளையோரை சந்தித்தார் சிந்திக்க வைத்தார். பிறகு தோழர் தியாகுவின் அமைப்போடு தனது தமிழர் மன்றத்தை இணைத்து தமிழ் – தமிழ்த்தேசிய இயக்கத்தைத் தொடங்கி அதன் பொதுச்செயலாளராக இருந்தார். பின்னர் சான்றோர் பேரவை என்னும் அமைப்பில் இயங்கினார்.

பிறகு, “ஆரியத்தால் வீழ்ந்தோம்; திராவிடத்தால் எழுந்தோம்; தமிழியத்தால் வெல்வோம்!” என்னும் முழக்கத்தோடு திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்னும் அமைப்பை 2007 ஆம் ஆண்டில் உருவாக்கி அதன் பொதுச்செயலாளராக இயங்கி வருகிறார். பெரியாரைப் போற்றி, பெருஞ்சித்திரனார் வழி தமிழ்த்தேசியவாதியாகவே திகழ்கிறார். தற்பொழுது கருஞ்சட்டைத் தமிழர் என்னும் மாதமிருமுறை இதழின் ஆசிரியராகப் பொறுப்பு வகிக்கிறார்.

தனது தந்தை இராம. சுப்பையாவிடம் உரையாடி, அவரது திராவிட இயக்க அனுபவங்களை “எனது வாழ்க்கையும் திராவிட இயக்க அனுபவங்களும்” என்னும் நூலாகத் தொகுத்து வெளியிட்ட பேராசிரியர் சுப.வீ கவிதை நூல்கள், தமிழ் கவிதை ஆய்வுகள், குடும்பமும் அரசியலும், திராவிடத்தால் எழுந்தோம், இளமை எனும் பூங்காற்றே உள்ளிட்ட கட்டுரை நூல்களையும், புதுத் தென்றல் என்ற கவிதை நூலையும், அது ஒரு பொடா காலம், வந்ததும் வாழ்வதும் உள்ளிட்ட தன் வரலாற்று நூல்களையும் தமிழ் பொருள் தந்தவர்.

கலைஞர் தொலைக்காட்சியில் “ஒன்றே சொல் நன்றே சொல்” என்கிற நிகழ்வின் மூலம் என் சமுதாய பரந்த வாசிப்பு அனுபவத்தை தமிழ் மக்களோடு பகிர்ந்து கொள்பவர். ஒரு நிமிட செய்தி மூலம் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக உறங்கிக் கொண்டிருக்கிற தமிழர்களை விழித்தெளச் செய்யும் பெருந்தகை.

27 ஜூலை 2021 முதல், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விப் பணிகள் கழகத்தின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும், 22 அக்டோபர் 2021 அன்று முதல், தமிழ்நாடு சமூக நீதி கண்காணிப்புக் குழுவின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். எண்ணற்ற அரங்குகளில் இளையோரை ஆற்றுப்படுத்தி நாளைய சமூகத்தை தாங்குவதற்கான நம்பிக்கை உள்ள தூண்களாக அவர்களை உருவாக்கி வருகிறார் பேராசிரியர் சுப.வீ. சுருக்கமாகச் சொன்னால் சுப.வீ உரத்த குரலுடையவா் மட்டுமல்ல… குரலால் சமூகத்தை உயா்த்தியவா்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

மகாகவி பாரதியார் விருது பெற்ற கவிஞர் பழநிபாரதி :

பழனிபாரதி
பழனிபாரதி

எத்தனை வரிகள் இதுவரை எழுதப்பட்டனவோ, அத்தனை வரிகளுக்குள்ளும் அக உணர்வைப் பந்திப்பரிமாற்றம் செய்த விரல்களுக்குச் சொந்தக்காரர். தண்ணீரில் விழுந்த இளம் வெயிலாக எண்ணற்றோரைத் தொட்டெழுப்பிய சூரியவரிகளை இதயங்களுக்குள் விதைகளாக ஆழப்புதைத்தவர். சொற்களற்ற வெளிகளில் நுரையீரல்களைத் திணறடிக்கும் கடற்காற்றுப்போல அக்கிரமங்கள் எதுதெரியினும் நெருப்புப் பொறிகளைச் சொற்களினூடே புதைத்துக் கவிதைகளாக வீசி எறிந்தவர். அவர்.தான் கவிஞர் பழநிபாரதி.

போதிமரத்திலிருந்து ஞானம் கிடைப்பது உண்மையெனில் அரசமரத்திற்கடியில் அமர்கிற எல்லோருமே ஞானம் பெற்றிருக்க வேண்டும். துன்பத்திற்குக் காரணம் என்ன? எனத்தேடிய புத்தரின் தேடலுக்கான விடை போதிமரத்தடியில் கிடைத்தது. அதைப்போல அன்றாடம் நம்மில் எழுகிற ஆயிரமாயிரம் வினாக்களுக்கான பதில் நம்மைச் சுற்றியுள்ள சமூகத்திடமே இருக்கிறது என்கிற உண்மையைத் தம் எழுத்துக்களில் தந்து சூழலைப் போதிமரமாக்கியவர் கவிஞர் பழநிபாரதி.

பாரதிதாசனின் மாணவரும், பாரதிதாசன் பரம்பரைக்கவிஞருமான அய்யா சாமி.பழனியப்பன் அவர்கள் பாரதியின் மீதிருந்த அதீத அன்பின் காரணமாகக தம் மகனுக்குப் பாரதி எனப் பெயர் வைத்தார். பாரதி… அது பெயர்ச்சொல் அல்ல… எழுதுகோலால் உழுதுகாட்டிய வினைச்சொல் அல்லவா? காலத்தால் முந்தி, வானமென விரவி, கடலெனப் பரவி உயர்ந்தும், உள்ளம் நிறைந்தும் இருக்கும் செம்மொழித்தமிழின் சீர்மிகுக்கவிஞனான பாஞ்சாலியின் வழக்கறிஞன் பாரதியின் பெயர் இத்தமிழ்க்கவிஞனுக்குப் பொருந்திப்போனது வியப்பின் குறியீடு அன்றி வேறென்ன?

தொடக்கக்காலங்களில் பழ.பாரதி என்று அழைக்கப்பட்ட கவிஞர், தன் தந்தையின் பெயரே முன்னொட்டாகி “பழனிபாரதி” என்றாக விரியத்தொடங்கினார். மனத்துக்குள் மழைபொழிய வைக்கும் வசீகரம் தெரிந்த வார்த்தைச்சித்தர் வலம்புரிஜான் அவர்கள் ஆசிரியராகப் பணியாற்றிய “தாய்” இதழில் உதவி ஆசிரியராகத் தன் எழுத்துப்பணியைத் தொடங்கினார்.

பெரும்புள்ளி என்ற திரைப்படத்தில் பாடல் எழுதித் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். உவமைக் கவிஞர் சுரதா, “இதோ ஒரு மகாகவி புறப்பட்டு விட்டான்” என்றார் ஒருமுறை. உண்மைதான் 1500க்கும் மேற்பட்ட திரைப்பாடல்களைப் பிரசுவித்து ஒரு ஏகாந்த பயணியாகத் தன்னைத் தகவமைத்துக் கொண்ட ஆளுமை பழநிபாரதி என்றால் அது மிகையாகாது.

எந்த மதக்கொடிகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள் அதை இரத்தத்தில் கழுவி அழுக்காக்காதர்கள் என்று சொல்லி மனிதாபிமான கவிஞர்கள் விரும்பிய சமய நல்லிணக்கத்தை, ”பாபர் மசூதி சுவரில் ஓடிப்பிடித்து விளையாடுகின்றன இராமர் அணில்கள்” என்ற ஒற்றை வரியில் இதயத்துடிப்பாக்கியவர் கவிஞர்.

“இராமேஸ்வரத்தின் கடலில் இந்தக் காகிதத்தால் ஒரு படகு செய்து அனுப்பலாம் இலங்கை இராணுவத்தால் கொல்லப்படும் மீனவரோடு இது கரையொதுங்கினால் நான் என்ன செய்ய முடியும்?” உள்ளிட்ட வினாக்களை எழுப்பும் வெள்ளைக்காகிதம் போன்ற இவரது கவிதைகள் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞரின் வாரிசு என்பதை மிண்டும் மீண்டும் நிருபிக்கிறது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம். நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், புத்தனாம்பட்டி, நேரு தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, குற்றாலம் பராசக்தி மகளிர் தன்னாட்சிக் கல்லூரி, கோவை டாக்டர் எஸ்.என்.எஸ். இராஜலட்சுமி கலை அறிவியல் தன்னாட்சிக் கல்லூரி மற்றும் கேரள மாநில அரசின் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்புத் தமிழ்ப்பாடநூல்கள் உட்பட பாடத்திட்டங்களில் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

புதுவைப் பல்கலைக்கழக கீதம் ஹார்வர்டு பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைக் கீதம் ஆகிய இரண்டு கீதங்களும் இவரால் இயற்றப்பட்டவை என்பதை அறிகிறபோது எப்போதோ விழுந்த மழைச்சாரலில் இப்போது நனைவதுபோல இருக்கிறது. இதுவரை 13 கவிதைத் தொகுதிகள். ஒரு கட்டுரைத் தொகுதி, ஒரு நேர் உரைத் தொகுப்பு வெளிவந்துள்ளன. எண்ணற்ற திரைப்பாடல்களைத் தந்த இவருக்கு சினிமா எக்ஸ்பிரஸ் விருது, காதலுக்கு மரியாதை திரைப்படத்திற்கான சிறந்த பாடலாசிரியர் விருது, கலைமாமணி விருது, கலைவித்தகர் கண்ணதாசன் விருது, பிதாமகன் திரைப்படத்திற்கு சர்வதேச தமிழ்ப்பட விருது, சிற்பி இலக்கிய விருது, இசைஞானி இளையராஜா விருது, கவிதை உறவு விருது, பகுத்தறிவாளர் கழகத்தின் புரட்சிக்கவிஞர் விருது ஆகியன வழங்கப்பட்டுள்ளன.

விருதுகளின் தொடர்ச்சியாக இந்த ஆண்டுக்கான கவிக்கோ விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. “நீ சிறிய விதைதான்… உனக்குள் ஒளிந்திருக்கிறது பிரமாண்ட மரம” என அந்த ஞான உழவன் அப்துல்ரகுமான் எவரை நினைத்து எழுதினார் எனத் தெரியவில்லை. ஆனால் இன்று பழநிபாரதியே பிரமாண்ட மரமாகி எண்ணற்ற இளம் எழுத்தாளர்கள் கூடு கட்டிக்கொள்ள தம் மனத்தைத் திறந்துவைத்திருக்கிறார். ஒரு இலட்ச ரூபாய் பரிசுத்தொகைக் கொண்ட கவிக்கோ விருது முதன்முதலில் கலைஞர் மு.கருணாநிதிக்கு வழங்கப்பட்டது. அந்த வரிசையில் கவிஞர் அறிவுமதியைத் தொடர்ந்து, 21வது விருதாளராகக் கவிஞர் பழநிபாரதி தெரிவு செய்யப்பட்டார்.

பழநிபாரதி… சேறுகளைத் தூர்வாரிய சீர்திருத்தன் ; புதுமைகள்தேடிய புரட்சிக்காரன் ; கயமைகளுக்கெதிராய் களமாடிய கலகக்காரன் . வாழ்க்கையில் கவிதை தந்த கவிஞர்களுக்கிடையில் வாழ்க்கையையே கவிதையாகத் தந்தவன்தான். வீணையிலே கிடந்த தமிழை வில்லாக்கி, அதிலிருந்து அம்பெய்தி மறுமலர்ச்சி செய்த அசாத்தியன். மின்னலிலிருந்து எடுத்த ஒளியை மின்சாரமாக்கி மானுடர் அகத்தில் ஒளியாய்பாய்ச்சிய மறுமலர்ச்சியாளன். குறிலெழுத்தை நெடிலெழுத்தாக்கி குரலெழுப்பிய அற்புதன். உயிர்பறவையொன்றைத் தம் எழுத்துக்களினூடேவைத்துப் பெரிதினும் பெரிது கேட்ட பெருங்கவிஞன் பாரதியின் சுவடாய் ஒளிா்பவா் கவிஞர் பழநிபாரதி. நறுக்கென்று சொன்னால் பழநிபாரதி – காற்றிலிருந்து சொற்களைப் பெற்றவா் அல்ல… தம் சொற்களால் காற்றைக் குளிரவைத்தவா்.

ஜா.சலேத்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.