“என் அப்பாவின் வாழ்க்கை தான் இந்தப்படம்” – ஸ்டார்’ டைரக்டர் இளன் உருக்கம்!

0

*”என் அப்பாவின் வாழ்க்கை தான் இந்தப்படம்” -ஸ்டார்’ டைரக்டர் இளன் உருக்கம்! ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பி வி எஸ் என் பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஸ்டார்’ திரைப்படம் மே பத்தாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

இதை முன்னிட்டு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன் போது தயாரிப்பாளர் சாகர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா நிறுவனத்தின் பாபின், இணை தயாரிப்பாளர் தீபக், இயக்குநர் இளன், படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ. ராகவ், நாயகன் கவின், நடிகைகள் அதிதி பொஹங்கர் மற்றும் ப்ரீத்தி முகுந்தன்,  நடிகர்கள் ‘ராஜா ராணி’ பாண்டியன், தீப்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

https://businesstrichy.com/the-royal-mahal/

இயக்குநர் இளன் பேசுகையில், ‘ எனக்கு’ மிகவும் எமோஷனலான தருணம் இது. நம் எல்லோரிடத்திலும் கனவு ஒன்று இருக்கும். ஒரு வீடு வாங்க வேண்டும்… ஒரு கார் வாங்க வேண்டும்… கடை ஒன்றை திறந்து வியாபாரம் செய்ய வேண்டும்.. என ஏதாவது ஒரு கனவு இருக்கும் தானே.. அந்த கனவை நோக்கி பயணிக்கிற அனைவருமே ஸ்டார் தான். இதைத்தான் இந்த படம் சொல்கிறது. அந்தப் பயணத்தில் நாம் யாரையும் காயப்படுத்தி விடக் கூடாது. அன்புடன்.. அந்த கனவை விட்டுக் கொடுக்காமல்… பிடிவாதமான மனதுடன்.. அந்தப் பயணம் இருந்து கொண்டே இருக்கும் அல்லவா..! அதைத்தான் இந்த படம் பேசுகிறது.

1980 களில் ஒரு பையன்.. அவனுக்கு 20 வயது இருக்கும். பெரிய நடிகராக வேண்டும் என்ற கனவுடன் மதுரையிலிருந்து சென்னைக்கு வருகிறார். எண்பது 90 ஆகிறது. 2000 ஆகிறது. 2010யும் கடக்கிறது. கடந்து போகிறது. கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு மேல் இந்த பயணம்  தொடர்கிறது. இப்போது அவருக்கு 55 வயதாகிறது. இந்த வயதில் அவருக்கு ‘ராஜா ராணி’ எனும் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. பல வருஷமாக தேக்கி வைத்திருந்த அவருடைய கனவு நனவாகிறது. திரையரங்கில் அவருடைய நடிப்பிற்கு ரசிகர்கள் கைதட்டுகிறார்கள். அவர்தான் என்னுடைய அப்பா ‘ராஜா ராணி’ பாண்டியன்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

இந்தப் படத்தை அவருக்காக அர்ப்பணிப்பதைத் தான் நான் விரும்புகிறேன். இந்தப் படத்திற்கு இன்ஸ்பிரேஷன்.. என்னுடைய அப்பா தான். அவருடைய இந்த பயணத்தில் ஏராளமான அனுபவங்களை சந்தித்திருப்பார். அவமானங்களை எதிர்கொண்டிருப்பார்.‌

ஒரு முறை என் அப்பா என்னிடம், ‘இந்த முகத்தை வைத்துக்கொண்டு எப்படி நடிக்க வந்தாய்?’ என ஒருவர் கேட்டுவிட்டதாக வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டார். அந்த நபர் கேட்ட அந்த கேள்விதான் என் அப்பாவிற்கு மிகப்பெரிய மோட்டிவேஷனாக இருந்திருக்கிறது. ஒருத்தர் முகத்துக்கு நேராக இப்படி கேட்டுவிட்டாரே..! என்ற ஒரே காரணத்திற்காக, எப்படியாவது நடித்து விட வேண்டும் என்ற உறுதி அவர் மனதில் ஏற்பட்டு விட்டது.  அந்த மனவுறுதியை விவரிப்பதுதான் இந்த ஸ்டார் திரைப்படம்.

ஒரு கனவை நாம் எப்போதும் தனியாக வென்று விட முடியாது. அதற்கு ஆதரவளிக்க நிறைய பேர் தேவை. உதவி செய்வதற்கும் ஆட்கள் தேவை. அதைவிட மற்றவர்களின் ஆசியும் முக்கியம்.‌ இந்தப் படத்தின் முன்னோட்டத்தில் கவின், ‘காசு இல்ல சார்..!’ என டயலாக் பேசுவார். அது எங்க அப்பா வாழ்க்கையில் நடைபெற்ற உண்மை சம்பவம். அப்போது எங்க அம்மா தான் அவருக்கு ஆதரவாக இருந்து அவரையும் பார்த்துக் கொண்டார். எங்களையும் பார்த்துக் கொண்டார். எங்களை பொறுத்தவரை அவரும் ஒரு ஸ்டார் தான்.

அடிப்படையில் நம்மை சுற்றி ஏராளமான ஸ்டார்கள் இருக்கிறார்கள். இவர்களை நினைவுபடுத்தும் வகையில் தான் இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இதனால் இந்த திரைப்படத்திற்கு அனைவரும் அவர்கள் குடும்பத்தினருடனும், காதலருடனும், நண்பர்களுடனும், உறவுகளுடனும் வருகை தந்து ரசிக்கும் ஒரு அழகான படமாக ‘ஸ்டார்’ இருக்கும் என நான் நம்புகிறேன்.

தயாரிப்பாளர் சாகரிடம் இந்த கதையை சொல்லிவிட்டு இரண்டு நாட்களில் பதிலை சொல்லி விடுங்கள் என நிபந்தனை விதித்தேன். அவர் ஒரே நாளில் இந்த படத்தை தயாரிக்கிறேன் என பதிலளித்தார். அந்தத் தருணத்தில் அவர் எடுத்த விரைவான முடிவு  தான் இன்று வரை எனக்கு சாதகமாகத்தான் இருக்கிறது. ஒவ்வொரு தருணத்திலும் அவர் எடுக்கும் வேகமான முடிவு இப்படத்தை நேர்த்தியாக உருவாக்குவதற்கும் உதவி இருக்கிறது.

அவர் மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்திற்காக பொறுப்பேற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் தங்களது பணியை முழு அர்ப்பணிப்புடன் செய்து ஒத்துழைப்பு வழங்கினர்.‌ அனைவரும் தங்களின் மனமார்ந்த பங்களிப்பை இப்படத்திற்காக அளித்துள்ளனர். இதற்காக இந்த தருணத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் திரைப்படத்தை நான் ஒரு அழகான காதல் கதையாக தான் பார்க்கிறேன். லவ் என்றதும் ஒரு அப்பாவின் அன்பு… ஒரு அம்மாவின் அன்பு… ஒரு நண்பனின் அன்பு… ஒரு மனைவியின் அன்பு… ஒரு காதலியின் அன்பு… என ஏகப்பட்ட அன்பு இப்படத்தில் இருக்கிறது.

இந்தப் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள் என அனைவருக்கும் இந்த தருணத்தில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பாக யுவன் தற்போது துபாயில் இருக்கிறார். நான் என்ன கேட்டாலும் எனக்காக அவர் செய்வார். அவர் என்ன கேட்டாலும் அவருக்காக நான் செய்வேன்.‌ அந்த அளவிற்கு எங்களுக்குள் நட்பு இருக்கிறது. எனக்கு அவர் ஒரு சகோதரர்.. நலம் விரும்பி.. நண்பன்.. ஆன்மீக வழிகாட்டி.. இப்படி அவரைப் பற்றி பட்டியலிட்டு கொண்டே செல்லலாம்.‌  இந்த உலகத்தில் எனக்குப் பிடித்தமானவர்களின் பட்டியலில் யுவன் முதலிடத்தில்  இருக்கிறார். அவரைப் போல ஒருவரை என் வாழ்க்கையில் சந்தித்ததை நான் பாக்கியமாக கருதுகிறேன்.‌ அவர் எப்போதும் அன்பாகவும், இனிமையாகவும், எளிமையாகவும் பழகக்கூடியவர்.‌

இவரைத் தொடர்ந்து கவின். ஸ்டார் ஆகி இருக்கும் கவினை, ‘டாடா’ படத்திற்கு பிறகு தான் அவரை சந்திக்கிறேன். இப்படத்தின் கதையை அவரிடம் சொல்லும் போது, முழுக் கதையையும் கேட்டுவிட்டு… ‘இந்தக கதையில் வரும் பல சம்பவங்கள் என் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது’ என்றார்.  படத்தின் கதை தான் கவினை நாயகனாக தேர்ந்தெடுத்திருக்கிறது. படப்பிடிப்பு தளத்தில் கவின் நடிக்கும் போது எங்களை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருப்பார்.  ஒரு நடிகராக என்னை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த பட குழுவினரையும் தன் நேர்த்தியான நடிப்பால் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருப்பார். இதற்கு சாட்சி படத்தின் முன்னோட்டம். இதற்காக கவினுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.‌

இந்தப் படத்தில் ரசிகர்களுக்கு சிறிய அளவிலான எதிர்பாராத இன்ப அதிர்ச்சிகள் இருக்கிறது. அதை படம் பார்த்த ரசிகர்கள்.. மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என அன்பாக வேண்டுகோள் விடுக்கிறேன்.” என்றார் .

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.