கட்டிங் பற்றி கவலைப்படும் அரசு … மணல் தட்டுப்பாடு பற்றியும் யோசிச்சா தேவலை … ! வண்டல் மண் கடத்தல் விவகாரம் !
அப்பவும்கூட, டிராக்டர் ஓனர் வந்து உங்களாலதான் என் டிராக்டர் மாட்டிக்கிச்சு. நைட் புல்லா லோடு அடிச்சி நீ தப்பிச்சிருவ. விடிஞ்சி ஒரு லோடு....
கட்டிங் பற்றி கவலைப்படும் அரசாங்கம் … மணல் தட்டுப்பாடு பற்றியும் யோசிச்சா தேவலை … !
சர்ச்சைக்குள்ளாகும் வண்டல் மண் கடத்தல் விவகாரம் !
”சட்டவிரோதமான முறையில் வண்டல் மண் கடத்தலில் ஈடுபட்ட வாகனத்தை கையும் களவுமாக பிடித்துக் கொடுத்தும் வருவாய்த்துறையினரும் போலீசும் உரிய நடவடிக்கை எடுக்காமல், மணல் கடத்தியவர்களுக்கு சாதகமாக செயல்படுகிறார்கள்.” என்பது நமக்கு கிடைத்த தகவல்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், ஓலைப்பாடி கிழக்கு வருவாய் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் உரிய அனுமதியின்றி தனது பட்டா இடத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட வண்டல் மண்ணை TN 46 X 8949 என்ற பதிவெண் கொண்ட டிராக்டரில் வேப்பூருக்கு எடுத்துச் சென்றிருக்கின்றனர்.
இதனை, அதே பகுதியைச் சேர்ந்த தேன்மொழி உள்ளிட்ட அவரது உறவினர்கள், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததோடு, மணல் கடத்தலில் ஈடுபட்ட டிராக்டரை வழிமறித்து வழக்கு போடுமாறு கிராம நிர்வாக அலுவலரை நிர்ப்பந்தித்துள்ளனர்.
வி.ஏ.ஓ., ஆர்.ஐ., மற்றும் தாசில்தார் வரையில் இந்த விவகாரம் எடுத்துச் செல்லபட்டதையடுத்து, வேறுவழியின்றி கிராம நிர்வாக அலுவலர் ஞானசேகரன் குன்னம் போலீசில் புகாராக கொடுத்திருக்கிறார். குன்னம் போலீசாரும் சட்டப்பிரிவு 379-இன்படி திருட்டு வழக்காக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.

“தாசில்தார் அறிவுறுத்தியபடி போலீசில் புகார் கொடுத்துவிட்டேன்.” என்கிறார், கிராம நிர்வாக அதிகாரி ஞானசேகரன். ”வி.ஏ.ஓ. புகாரின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர். போட்டிருக்கிறோம்.” என்கிறார், குன்னம் போலீசு இன்ஸ்பெக்டர்.

“கனிம வளக் கொள்ளை பிரிவில் வழக்குப் பதியாமல், பெயருக்கு திருட்டு வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். சம்பவம் நடந்தது ஜூலை 30-ஆம் தேதி. ஆனால், 5-ந்தேதிதான் சம்பவம் நடந்தா மாதிரி எஃப்.ஐ.ஆர்.ல போட்டிருக்காங்க.அதுவும், தாசில்தார் வரைக்கும் அழுத்தம் கொடுத்ததால் தான் இந்த நடவடிக்கையும் எடுத்திருக்கிறார்கள். சங்கர் என் உறவுக்கார பையன்தான். அவருக்கும் எங்களுக்கும் இடத்தகராறு இருக்கிறது. எங்களுக்குச் சொந்தமான இடத்திலிருந்துதான் மண்ணை வெட்டி எடுத்திருக்கிறார். வருசத்துக்கு ஒரு முறை இந்த மாதிரி எங்களுக்கு தலைவலி கொடுக்கிற மாதிரி ஏதாவது ஒன்னு செய்துவிடுகிறார்.
இன்னும் சொல்லப்போனால், சம்பவம் நடந்த அன்னைக்கு இரவு முழுவதும் ஜேசிபியை வச்சி லாரி லாரியா மண் அள்ளியிருக்காங்க. காலையில, அவசரமா ஒருத்தருக்கு மண் தேவைப்பட்டதால, நைட் ஓடுன லாரி டிரைவர் அசந்து தூங்கிட்டிருக்கவும், வேப்பூர்ல இருந்து டிராக்டர வரவழைச்சி மண் அள்ளியிருக்காங்க. மண்ணோட இருந்த டிராக்டர மட்டும்தான் பிடிச்சி வழக்கு போட முடியும்னு வி.ஏ.ஓ. சொல்லிட்டதால, லோடு இல்லாம இருந்த லாரிய அனுப்பி வச்சிட்டாங்க.
அப்பவும்கூட, டிராக்டர் ஓனர் வந்து உங்களாலதான் என் டிராக்டர் மாட்டிக்கிச்சு. நைட் புல்லா லோடு அடிச்சி நீ தப்பிச்சிருவ. விடிஞ்சி ஒரு லோடு அடிச்ச என் வண்டி கேசுல மாட்டனுமானு, லாரி சாவியை பிடுங்கிட்டு போயிட்டதாகவும்; அப்புறம் ஸ்டேஷன்ல வச்சி சமாதானம் பேசிதான் சாவியை வாங்கினதாகவும் சொல்லிக்கிறாங்க.” என்கிறார், நெடுஞ்செழியன்.
வருவாய்த்துறை அதிகாரிகள் தரப்பில் பேசினோம். “வண்டல் மண் எடுக்கிற விவகாரம் எங்களுக்கு பெரிய தலைவலிதான். லோக்கல் கட்சி காரங்கதான் டிராக்டர், டிப்பர் வண்டிய வச்சி மண்ணு எடுக்கிறாங்க. பகலில் கெடுபிடி இருக்கிறதால, பெரும்பாலும் நைட்லதான் திருட்டு மணல் எடுக்கிறாங்க. அதுவும், அவங்களுக்குள்ளேயே இருக்கிற போட்டியில ஒருத்தர மாத்தி ஒருத்தர் போட்டு கொடுக்கிறாங்க.

நாங்க சட்டப்படி நடவடிக்கை எடுத்தா, கட்சி காரங்க அழுத்தம் கொடுத்து, மேலதிகாரிங்க மூலமா வார்ன் பண்ணிட்டு வண்டிய ரிலீஸ் பண்ணுங்கனு சொல்றாங்க. மீறி, விறைப்பா நடவடிக்கை எடுத்து அவங்கள பகைச்சிக்கவும் முடியாது. மேலதிகாரிங்க சொல்றபடி, வண்டியை விடுவிச்சிட்டா, ஆதாரத்தோட புகார் கொடுத்தும் ஏன் வண்டிய விட்டீங்கனு எதிர் தரப்பு கேள்வி கேட்டு டார்ச்சர் பன்றாங்க. இத எப்படி சமாளிக்கிறதுன்னே தெரியலை. பெரிய தலைவலி புடிச்ச விவகாரம்.” என தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக புலம்புகிறார்கள்.
”கட்டிங்”காக டாஸ்மாக் வாசலில் மணிக்கணக்காக காத்திருக்கும் ’குடிமகனின்’ வேதனையையும்; காலையில் வேலைக்கு போகும் முன்னரே ஒரு ’கட்டிங்’ போட்டுவிட்டு போவதற்கு தோதாக காலையிலேயே கடையை திறப்பது குறித்து பரிசீலிக்கும் அரசாங்கம் … கட்டுமானம் உள்ளிட்ட அடிப்படை தேவைக்கு தட்டுப்பாடின்றி வண்டல் மண் கிடைப்பதற்கு ஒரு வழிவகை செய்துவிட்டால், திருட்டுத்தனமாக மணல் அள்ளுவதற்கான தேவை இருக்காது. கனிம வளத்துறையும் வருவாய்த்துறை அதிகாரிகளும்தான் அரசாங்கத்திடம் கேட்டு, இதற்கு ஓர் நல்ல முடிவை சொல்ல வேண்டும்.
– ஆதிரன்.
