திருச்சி மத்திய சிறை பெண் தையல் டீச்சருக்கு நடந்த பாலியல் தொல்லை !
திருச்சி மத்திய சிறை பெண் தையல் டீச்சருக்கு நடந்த பாலியல் தொல்லை !
திருச்சி மத்திய சிறையில் சிறை கைதிகளுக்கு தையல் பயிற்சி அளிக்க சென்ற பெண் பயிற்றுநருக்கு, தண்டனை கைதி ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சிறையில் தண்டனை கைதிகள் தங்களது தண்டனை காலத்தை ஆக்கப்பூர்வமாக கழிக்கும் விதமாகவும் எதிர்கால நலனை கருத்திற் கொண்டும் சிறைக்குள்ளேயே அவர்களுக்கு தொழிற்பயிற்சி உள்ளிட்டு பல்வேறு வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்பட்டிருக்கிறது.
அந்த வகையில்தான், திருச்சி மத்திய சிறையிலும் ஐ.டி.ஐ. உள்ளிட்டு தையல் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. சிறைக்கைதிகளுக்கு தையல் கற்றுக் கொடுப்பதற்காக, 45 வயதுடைய பெண் பயிற்றுநர் ஒருவர் ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
வழக்கம் போல், ஜூன்-01 அன்று சிறைகைதிகளுக்கு வகுப்பு எடுத்த அவர், மதிய உணவு இடைவேளையில் வகுப்பறையில் இருந்துள்ளார். வகுப்பறையில் தனியே இருந்த அப்பெண் பயிற்றுநரை, அவரிடமே தையல் பயின்று வந்த கோவையைச் சேர்ந்த திருமூர்த்தி என்பவர் அவர் மீது மூர்க்கத்தனமாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளான். தற்காப்புக்காக கையில் கிடைத்த கத்தரிக்கோலை எடுத்துக்காட்டி அவனிடமிருந்து தப்பியிருக்கிறார்.
அவரது கூச்சல் கேட்டு போலீசு அதிகாரிகள் சக சிறை கைதிகள் ஓடிவரவே, திருமூர்த்தி அருகிலுள்ள கழிவறையில் பதுங்கிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதில் கொடுமை என்னவென்றால், திருமூர்த்தி ஏற்கெனவே போக்சோ வழக்கில் கைதாகி சிறைக்குள் வந்திருக்கிறான், என்பதுதான். சிறையிலும் தனது சீண்டலை தொடர்ந்ததுதான் வேதனை.
”பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை கடுங்குற்றமாக கருதி, குற்றவாளிகள் சட்டத்தின் ஓட்டைகளிலிருந்து தப்பிவிடக்கூடாது என்பதற்காகத்தான் போக்சோ சட்டமே கொண்டு வரப்பட்டிருக்கிறது.
போலீசின் கடுமையான கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய, ஒரு மத்திய சிறையிலேயே, சிறை நிர்வாகத்தால் பயிற்சிக்காக நியமிக்கப்பட்ட ஒரு பெண் ஊழியருக்கே பாலியல் வன்முறை ஏவப்பட்டிருக்கிறது என்பது வெட்கக்கேடானது.
ஆண் தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் சிறைக்குள் பயிற்றுநராக பெண் நியமிக்கப்பட்டதே பிரச்சினைக்குரிய விசயம். தேவையின் கருதி நியமிக்கப்பட்டிருந்தாலும், அப்பெண் ஊழியரின் பாதுகாப்பை சிறைத்துறை அதிகாரிகள்தான் உத்திரவாதப்படுத்தியிருக்க வேண்டும்.
மாறாக, தவறு நிகழ்ந்த பிறகும்கூட, ”வழக்கு போட்டால் உனக்குதான் அசிங்கம்; வெளியில் சொல்லாமல் ஓடிவிடு” என்று விரட்டியடிக்காத குறையாக, அப்பெண் பயிற்றுநர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.
இத்துணைக்கும், திருச்சி மத்திய சிறையின் கண்காணிப்பாளராக இருக்கக்கூடியவர் ஆண்டாள்; டி.ஐ.ஜி. ஜெயபாரதி ஆகிய இருவருமே பெண்கள்.
பெண் உயரதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு மத்திய சிறைக்குள்ளேயே, அவர்களது சார்பில் பணியாற்றிய ஒரு பெண் ஊழியருக்கே பாதுகாப்பு இல்லை என்பது பெருங்கொடுமை.” என வெடிக்கிறார், சீனியர் சிட்டிசனரான சமூக நல ஆர்வலர் ஒருவர்.
நடந்தது, என்ன? டி.ஐ.ஜி. ஜெயபாரதி அவர்களை தொடர்புகொள்ள முயற்சித்தோம். இரண்டுமுறை முயற்சித்தபோது, வேறொருவருடன் பேசிக்கொண்டிருந்த அவர் மூன்றாவது முறை நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை. சிறைக்கண்காணிப்பாளர் ஆண்டாள் அவர்களை தொடர்புகொண்டோம், “மேடம், ரவுண்ட்ஸ்ல இருக்காங்க. எதுவாக இருந்தாலும் நேரில் வந்து கேட்டுக்கொள்ளுங்கள்” என்றார், அழைப்பை ஏற்று பேசிய காவலர்.
சிறையின் சுவர்களுக்குள்ளாகவே, கமுக்கமாக முடிக்க முயன்றார்கள். விசயம் வெளியில் வந்துவிட்டது. நடந்த தவறுக்கும், இனி இதுபோன்று நிகழாமல் இருப்பதற்குமான தீர்வை காண முயற்சிக்க வேண்டுமென்பதே நம் எதிர்பார்ப்பு