“வாரிசால்”ஏற்பட்ட சிக்கல்… கல்லா கட்டும்”வாரிசு”
முக்கிய பண்டிகை தினங்கள் தோறும் பிரபல நடிகர்கள் நடித்த திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி ரசிகர்களை குதூகலப்படுத்தும். எம்ஜிஆர் ,சிவாஜி காலம் தொட்டே ரசிகர்களுக்குள் போட்டி மனப்பான்மை உண்டு. எங்கள் நடிகர் தான் டாப் என்று ஒவ்வொரு நடிகரின் ரசிகர்களும் போட்டி போட்டுக் கொண்டு திரையரங்குகளில் அமர்க்களம் புரிவது வழக்கம்.
கட்டவுட்டுகளுக்கு பால் அபிஷேகம், பட்டாசு வெடித்தல், இனிப்பு வழங்குதல் என்று தியேட்டர்கள் அல்லோகலப்படும். எம்ஜிஆர், சிவாஜி காலம் முடிந்த பிறகு ரஜினி, கமல் என்ற ஒரு அத்தியாயம் தொடங்கியது. அதற்குப் பிறகு அஜித், விஜய் என்ற போட்டி ஓடிக்கொண்டே இருக்கிறது . அந்த போட்டியின் உச்சகட்டமாக சமீபத்தில் ஒரு பிரச்சனை எழுந்தது. வரும் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. அதே நாளில் நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு என்ற திரைப்படமும் வெளியாகிறது.
இருவரும் ஸ்டார் அந்தஸ்து நடிகர்கள் என்பதால் படம் குறித்து இப்போது ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடிகர் அஜித்தின் படத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொந்த நிறுவனமான ரெட் ஜெயன்ட் என்ற நிறுவனம் விநியோக உரிமையை பெற்றுள்ளது . வாரிசு விநியோக உரிமையை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ என்ற நிறுவனம் வாங்கியுள்ளது. தமிழகத்தில் பொதுவாக புதிய திரைப்படங்கள் வெளியானால் அதை பெரும்பாலும் திமுக சார்ந்த விநியோகிஸ்தர்களால் மட்டுமே வெளியிடப்படுவது வழக்கம்.
பெரும்பாலான தியேட்டர்கள் அவர்கள் கட்டுப்பாட்டில் தான் இயங்கும் . இந்த நிலையில் துணிவு படத்துக்கு அதிக அளவில் தியேட்டர்களை ஒதுக்க ரெட் அண்ட் நிறுவனம் தயாராகி வருகிறது . இது குறித்து தகவல் அறிந்த வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜி என்பவர் ஆந்திராவில் பேட்டி ஒன்றை அளித்து சிக்கலில் மாட்டினார். தமிழகத்தை பொறுத்தவரை தற்போதைய நம்பர் ஒன் ஸ்டார் விஜய் தான். அஜித் அவருக்கு பிறகுதான் . எனவே விஜய் நடித்த படத்துக்கு தான் அதிக அளவில் தியேட்டர்கள் கிடைக்க வேண்டும் . இது தொடர்பாக உதயநிதியை நான் சந்தித்து பேசுவேன் என்று ஏடா கூட பேட்டி அளித்தார் .
இந்த பேட்டியால் அஜித்- விஜய் ரசிகர்கள் இடையே மோதல் ஏற்படும் சூழல் உண்டானது. இது குறித்து அஜித்- விஜய் ஆகிய இருவருமே எந்த கருத்தையும் சொல்லாமல் ஒதுங்கிக் கொண்டனர். இந்த நிலையில் தயாரிப்பாளர் தில்ராஜ் சரண்டர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அரை மணி நேரம் அளித்த பேட்டியை ரெண்டு நிமிடத்திற்கு ஒளிபரப்பி என்னை சிக்கலில் மாட்டி விட்டனர் என்று புலம்பினார். அவரது புலம்பலுக்கு காரணம் அவர் உயதநிதி ஸ்டாலினை யாரென்று தெரியாமல் பேட்டி கொடுத்தது தான் . மு .க. ஸ்டாலின் தமிழக முதல்வர், உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சர் . அவரது சொந்த நிறுவனம் தான் ரெட் ஜெயன்ட் நிறுவனம்.
இந்த நிறுவனத்துக்கு அதிக அளவில் நெட்ஒர்க் உள்ளன. திரைப்பட விநியோக உரிமைகளை இந்த நிறுவனம்தான் . பெரும்பாலான தியேட்டர்கள் இவர்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றன போன்ற உண்மைகள் மிகத் தாமதமாக தில் ராஜிக்கு தெரிய வந்தது. இதையடுத்து தான் அவர் எனது பேட்டியை தவறாக ஒளி பரப்பி விட்டனர் என்று ஜகா வாங்கிக் கொண்டார். அஜித் ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் இடையே ஏற்பட்டுள்ள குழப்பங்கள் உதயநிதி ஸ்டாலின் பார்வைக்கும் சென்றது.
ஏற்கனவே திரைப்பட நடிகர் உரியோகஸ்தர் என்ற நிலைகளில் இருந்த உதயநிதி தற்போது அமைச்சராகி விட்டதால் தன்னுடைய தயாரிப்பில் வெளியாகும் திரைப்படங்களில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் பெருமையுடன் வழங்கும் என்ற வாசகத்தை நீக்க உத்தரவிட்டார் அதேபோல சினிமாவில் நடிப்பதில்லை என்றும் அறிவித்து விட்டார் தற்போது அஜித் -விஜய் ரசிகர்கள் குழப்பத்தை புரிந்து கொண்ட அவர் மாற்று ஏற்பாடாக அஜித்தின் துணிவு பட விநியோக உரிமையை தானே வைத்திருப்பது போலவே விஜயின் வாரிசு திரைப்படத்தின் விநியோக உரிமையில் குறிப்பிட்ட சில மாவட்டங்களை மட்டும் தன்னுடைய கைக்கு எடுத்துக் கொண்டார்.
இதனால் துணிவு திரைப்படம் மற்றும் வாரிசு திரைப்படம் ஆகிய இரண்டு திரைப்படங்களையுமே ரெட் ஜெயன்ட் மூவிஸ் தான் வெளியிட உள்ளது. வாரிசு திரைப்படத்தால் நடிகர் விஜய்க்கு சிக்கல் வந்தது இல்லையோ வாரிசால் “வாரிசு” “கல்லா “கட்ட போகிறார் என்பது நிதர்சனம்…
-அரியலூர் சட்டநாதன்