நெல்லை மாவட்ட செய்தியாளர் முத்துக்குமாரசாமி சாலை விபத்தில் உயிரிழப்பு !
முத்துக்குமாரசாமி அவர்களுக்கு நேர்ந்ததை போல் எந்த ஒரு செய்தியாளருக்கு நடந்தாலும், அவர்களுடைய குடும்பத்தினருக்கு சட்டப்பூர்வமாக எந்த ஒரு நிவாரணமும் கிடைப்பதில்லை
நெல்லை மாவட்ட பாலிமர் தொலைக்காட்சி செய்தியாளர் முத்துக்குமாரசாமி சாலை விபத்தில் உயிரிழப்பு!
மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் ஆழ்ந்த இரங்கல்!!
பாலிமர் தொலைக்காட்சியின் திருநெல்வேலி மாவட்ட செய்தியாளராக பணியாற்றிய முத்துக்குமாரசாமி, தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் என்.ஜி.ஓ காலனி பகுதியில் வசித்து வந்தார். (21.11.23) இரவு செய்தி சேகரிப்பு தொடர்பாக சென்றுவிட்டு, வீடு திரும்பும்போது தாழையூத்து என்ற இடத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தார்.
முத்துக்குமாரசாமியை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினர் மற்றும் சக பத்திரிகையாளர்களுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
பொதுவாக மாவட்ட மற்றும் தாலுகா செய்தியாளர்களை செய்தி நிறுவனங்கள் எந்த நேரத்திலும் வேலை வாங்கும் ஒரு போக்கு உள்ளது. இரவு நேரங்களிலும் கூட அவர்கள் செய்தி சேகரிக்கச் செல்ல வேண்டும் என்று பணிக்கப்பட்டாலும், அதற்கான வாகனம் போன்ற வசதிகளை பெரும்பாலான செய்தி நிறுவனங்கள் செய்து தருவதில்லை. ஆகவே, நாள் முழுவதும் பணியாற்றி விட்டு, பல நேரங்களில் இரவு நேரங்களிலும் கூட இருசக்கர வாகனத்தில் பயணித்து மாவட்ட மற்றும் தாலுகா செய்தியாளர்கள் செய்தி சேகரிக்கின்றனர்.
மாவட்ட மற்றும் தாலுகா செய்தியாளர்களை பெரும்பாலும் நேரடி ஊழியராக இல்லாமல் ஒப்பந்த பணியாளராகவே செய்தி நிறுவனங்கள் நியமிக்கின்றன என்பது மிகப்பெரிய அவலம். அவர்கள் எத்தனை ஆண்டுகள் பணிசெய்தாலும் நிரந்தரம் செய்யாத செய்தி நிறுவனங்கள், அவர்களுடைய ஒப்பந்தத்தை ஒவ்வொரு முறையும் புதுப்பித்தும், சட்டத்திற்கு புறம்பான செயலில் ஈடுபடுகின்றன. ஒப்பந்த தொழிலாளர் என்ற அடிப்படையில் நிரந்தர தொழிலாளர்களுக்கு கிடைக்கும் தொழிலாளர் சேம நலநிதி போன்ற சமூக பாதுகாப்பு திட்டங்கள் கீழான பயன்கள் இவர்களுக்கு கிடைப்பதில்லை. அத்துடன் மிக சொற்பான சம்பளத்திற்கு அதிக அளவு வேலை செய்யவும் நிர்பந்திக்கப்படுகின்றனர்.
ஒரு சில நிறுவனங்களைத் தவிர மற்ற எந்த நிறுவனங்களும் செய்தியாளர்களுக்கு மருத்துவக் காப்பீடோ அல்லது ஆயுள் காப்பீடோ வழங்குவதில்லை. ஆகவே, இன்று முத்துக்குமாரசாமி அவர்களுக்கு நேர்ந்ததை போல் எந்த ஒரு செய்தியாளருக்கு நடந்தாலும், அவர்களுடைய குடும்பத்தினருக்கு சட்டப்பூர்வமாக எந்த ஒரு நிவாரணமும் கிடைப்பதில்லை. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அந்த நிறுவனம் தனது தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் நிவாரணத்தொகையை வழங்குகிறது.
ஆகவே, மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதுபோல், மாவட்ட மற்றும் தாலுகா செய்தியாளர்களை ஒப்பந்த தொழிலாளர்களாக நியமிக்கும் போக்கை அனைத்து செய்தி நிறுவனங்களும் உடனே கைவிட வேண்டும் என்று கோருகிறோம்.
அவர்களுக்கு, குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் அடிப்படையில் ஊதியம் நிர்ணயம் செய்வதுடன், ஒவ்வொரு ஆண்டும் ஊதிய உயர்வு மற்றும் இதரப் பணப்பலன்களை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.
மாவட்ட மற்றும் தாலுகா செய்தியாளர்கள் உட்பட, அனைத்து ஊழியர்களுக்கும் செய்தி நிறுவனங்கள் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
உயிரிழந்த முத்துக்குமாரசாமியின் குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கி உத்தரவிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
பாலிமர் தொலைக்காட்சி நிறுவனம் முத்துக்குமாரசாமியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுத்துகிறது.