யார் இந்த கொம்பன் ஜெகன் ! தமிழக கேங் ஸ்டார்களின் செல்ல பிள்ளை… திக் .. திக்.. ரிப்போர்ட் !

0

யார் இந்த கொம்பன் ஜெகன் ! தமிழக கேங் ஸ்டார்களின் செல்ல பிள்ளை… திக் .. திக்.. ரிப்போர்ட் !

திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி கொம்பன் ஜெகன் என்கிற ஜெகதீசன் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் தழுவிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜெகன் மீது அடிதடி, ஆட்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, கொலைமுயற்சி, கொலை வழக்கு என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், போலீசாரால் தேடப்பட்டு வந்த நிலையில் இந்த என்கவுண்டர் சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

சம்பவம் நடந்த இடம்
சம்பவம் நடந்த இடம்

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூரையடுத்து அமைந்துள்ள சனமங்கலம் வனப்பகுதியில்  வழிபறி கொள்ளை தொடர்ந்து நடப்பதாக புகார் வந்த நிலையில் அந்த இடத்தில் தொடர் ரோந்து பணிக்கு தனிப்படை    இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் எஸ்.ஐ.வினோத்குமார் உள்ளிட்ட  போலீசார் சென்ற நிலையில்  அங்கிருந்த   கொம்பன் ஜெகனை பிடிக்க முயன்ற போது எஸ்.ஐ. வினோத் குமாரை கத்தியால் தாக்கி தப்ப முயன்றதாகவும், அப்போது தற்காப்புக்காக இன்ஸ்பெக்டர் கருணாகரன் இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டதில் சம்பவ இடத்திலேயே கொம்பன் ஜெகன் பலியாகி விட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கிறார்கள். அந்த வனப்பகுதியில்.   ஏராளமான சணல் குண்டுகளை தயார் செய்து பதுங்கியிருந்ததையும் கண்டறிந்து கைப்பற்றியிருக்கிறார்கள்.

எஸ்.ஐ. வினோத்குமார்
எஸ்.ஐ. வினோத்குமார்

என்கவுண்டரில் பலியான கொம்பன் ஜெகனின் உடல் இலால்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கிறது. தாக்குதலில் காயமடைந்த எஸ்.ஐ. வினோத்குமார் சிகிச்சைக்காக இலால்குடி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, எஸ்.பி.வருண்குமார், வருவாய் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணையை நடத்தி வருகின்றனர்.

வீடியோ லிங்:

யார் இந்த கொம்பன் ஜெகன் !

கொம்பன் ஜெகன்
கொம்பன் ஜெகன்

”பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக” தகவல் கிடைத்தவுடனே, அங்குசம் புலனாய்வு குழு விசாரணையில் களமிறங்கியது. சுட்டு வீழ்த்தப்பட்ட ரவுடி கொம்பன் ஜெகனை பற்றி போலீசு வட்டாரத்திலும், அவனது நண்பர்கள் வட்டாரத்திலும், நம்பகமான சோர்ஸ்கள் சிலரிடமும் பேசியதிலிருந்து கிடைத்த தகவல்கள் நம்மை கிறுகிறுக்க வைக்கின்றன.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர், சர்க்கார்பாளையத்தையடுத்த பனையக்குறிச்சியை சேர்ந்த முத்துக்குமார் – சரஸ்வதி தம்பதியினரின் இரண்டாவது மகன்தான் 30 வயதேயான ஜெகன் (எ) ஜெகதீசன். மிகக்குறுகிய காலத்திலேயே தொடர் ரவுடியிச நடவடிக்கைகளால், ”கொம்பன்” ஜெகனாக உருவெடுத்திருக்கிறான்.

திருச்சி யு.டி.வி. பள்ளி மாணவனும், சிறந்த கபாடி வீரருமான ஜெகன், முதன்முறையாக அடிதடி வழக்கு ஒன்றில் கைதானபோது, அவனது வயது வெறும் 17. நண்பர்களுக்காக யாராக இருந்தாலும் கை வைப்பதற்கு அஞ்சாதவன் என்று பெயரெடுத்தவனாம்.

 ரவுடி குணா - சுந்தரபாண்டியன்
ரவுடி குணா – சுந்தரபாண்டியன்

திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடிகளான மண்ணச்சநல்லூர் குணாவின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்திருக்கிறான். 2010 – இல் ஒரு கொலை முயற்சி வழக்கில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான். இதனைத் தொடர்ந்து, 2011 இல் ஒரு கொலை முயற்சி வழக்கில் பிரபல ரவுடிகளான சுந்தரபாண்டியன், பிரவீன், மணி உள்ளிட்டவர்களுடன் கைதாகியிருக்கிறான். 2012 – இல் ஒரு அடிதடி வழக்கு; 2013-இல் ஒரு கொலை முயற்சி வழக்கு என ஆண்டு தோறும் க்ரைம் ரேட் கூடியிருக்கிறது.

காதல் விவகாரம் ஒன்றில் திருச்சி புத்தூர் சீனிவாசநகரை சேர்ந்த கல்லூரி மாணவரை கொன்றதாக, முதன்முதலாக 2014 – இல் கொலை வழக்கில் கைதாகியிருக்கிறான். இதனைத்தொடர்ந்து, 2015 – இல் ரவுடி சக்திவேல் கொலை வழக்கு; 2016 – இல் திருச்சி ரவுடி சந்துருவை கொலை செய்ய முயன்றதாக வழக்குகளில் சிக்கியிருக்கிறான்.

டையூ மணியை கொன்றதற்காகவே அடுத்தடுத்து 3 கொலைகளை அரங்கேற்றிய நிலையில், 2017 – இல் கீழச்சிந்தாமணி ஓடத்தெருவைச் சேர்ந்த ரவுடி சசியை கொடூரமாக கொன்ற வழக்கில் குண்டாஸில் சிறையிலடைக்கப்பட்டிருக்கிறான்.

மீண்டும், 2018 – இல் ஆட்கடத்தல் மற்றும் கொலைமுயற்சி வழக்கு; 2019 இல் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரவுடி ஒருவனை கொலை செய்த வழக்கு; 2021 இல் உறையூர் அரிசி வியாபாரியை கடத்திய வழக்கு என தொடர்ச்சியாக சிறை – குண்டாஸ் என அசராமல் இயங்கியிருக்கிறான் ஜெகன்.

பட்டபகலில் பங்க் பாபு கொலை
பட்டபகலில் பங்க் பாபு கொலை

சிறையில் ஏற்பட்ட பழக்கத்தின் அடிப்படையில், வேலூரை சேர்ந்த வசூல் ராஜாவுக்காக, 2020 – இல் திருவண்ணாமலையைச் சேர்ந்த தொழிலதிபர் பங்க் பாபுவை வெட்டி சாய்த்ததைத்தான் இவனது ரவுடிகள் வட்டாரத்திலேயே கூட, பிரமிப்பாக பார்க்கிறார்கள்.

பட்டப்பகலில் பலர் பார்க்க டீ கடை ஒன்றில் நின்று கொண்டிருந்த பங்க் பாபுவை நடு மண்டையில் ஒரே போடாக போட்டு வீழ்த்தியிருக்கிறான், ஜெகன். இதனையடுத்து அடுத்த சில நாட்களிலேயே, சேலத்தை சேர்ந்த செல்வத்துரை என்பவரை கொலை செய்த வழக்கில் சிக்கியிருக்கிறான்.

கொம்பன் ஜெகன்
கொம்பன் ஜெகன்

திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர், மதுரை, வேடசந்தூர்   அரவக்குறிச்சி, திருவண்ணாமலை, திண்டுக்கல், சேலம், சிவகங்கை , நாகப்பட்டினம் என தமிழகத்தின் 23 மாவட்டங்களில் கொம்பன் ஜெகன் மீது 60-க்கும் அதிகமான வழக்குகள் பதியப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.

திருச்சி மாவட்டத்தில் மட்டும் 5 முறை, சேலம், பெரம்பலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் தலா ஒரு முறை என இதுவரை 8 முறை குண்டாஸில் அடைக்கப்பட்டிருக்கிறான். முப்பது வயதை முடிப்பதற்குள்ளாக, ஏறத்தாழ எட்டு ஆண்டுகளை சிறைகளுக்குள்ளேயே கழித்திருக்கிறான், ஜெகன்.

பத்திரிகையில் வெளியான செய்தி 

 

ஜெயிலுக்குள்ளேயேயும் கெத்து காட்டுவதில் குறைவைக்காத ஜெகன், சக கைதிகளுடன் அடிதடி தகராறில் ஈடுபட்டதற்காக சிறைக்குள்ளேயேயும் வழக்கு வாங்கிய பெருமைக்குரியவன் ஜெகன். இதற்காகவே, சென்னை பூந்தமல்லி சிறைக்கு மாற்றப்பட்டிருக்கிறான். அங்கிருந்து வழக்கு விசாரணைக்காக ஒருமுறை திருச்சிக்கு அழைத்து வந்தபோது, அதற்கடுத்த நாளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டிய நிலையில் ஒருநாள் மட்டும் திருச்சி சிறையில் அடைக்க முயற்சித்திருக்கின்றனர். அப்போது, போலீசாருடன் தகராறு செய்ததற்காகவே ஒரு வழக்கு இவன் மீது பதியப்பட்டிருக்கிறது.

சுந்தரபாண்டியன்
சுந்தரபாண்டியன்

மதுரை ஜெயிலில் இருந்தபோது, அதே ஜெயிலில் திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி சுந்தரபாண்டியனும் அடைக்கப்பட்டிருக்கிறான். அப்போது, செருப்பு போட்டபடியே சுந்தரபாண்டியன் தங்கியிருக்கும் பிளாக்கில் நுழையக்கூடாது, என அவனது ஆதரவாளர்கள் ஜெகனை தடுத்து நிறுத்த, ”ஏன் செருப்பு போட்டுக்கொண்டு பிளாக் உள்ளே வரக்கூடாதா? நான் யார் தெரியுமா?” என அவர்களிடமே நெஞ்சை நிமிர்த்தியிருக்கிறான் ஜெகன்.

கூடவே, நேராக சுந்தரபாண்டியனிடமே சென்று, “நீங்கதான் ஆளனுமா? நாங்க ஆளக்கூடாதா?” எனக் கேள்வி கேட்டிருக்கிறான். ஜெகனின் தில்லை பார்த்து மெர்சலான சுந்தரபாண்டியனே, “திருச்சிய நீயே உன் கண்ட்ரோல்ல வச்சிக்கடா” என சொல்லி அனுப்பியிருக்கிறான், என்கிறார்கள்.

பத்திரிகையில் வெளியான செய்தி 

 

கடைசியாக, மதுரை ஜெயிலில் இருந்து வெளியே வந்த போதுகூட, ”திருச்சி ஜெகனோட கோட்டை” என கொக்கரித்து விட்டு தான் வந்திருக்கிறான். ரவுடிகளுக்குள்ளாக நடக்கும் தொழில் தகராறில், ஒரு குரூப்புக்காக மற்றொரு குரூப் ஆட்களை அடிப்பதற்காகவே பெரும்பாலும் களமிறக்கப்பட்டிருக்கிறான் ஜெகன்.

பணத்துக்காக கொலை செய்யும் கூலிப்படையாக செயல்பட்டதோடு, தனது ஏரியாவில் மாமூல், கட்டப்பஞ்சாயத்து என சகல விசயத்திலும் செல்வாக்கு செலுத்தியிருக்கிறான். இல்லீகல் பிசினஸ் செய்யும் கும்பலை குறிவைத்து பணம் பறிப்பது இவனது வாடிக்கை என்கிறார்கள். ஸ்பா என்ற பெயரில் இல்லீகல் பிசினஸ் பன்னும் அவன் நண்பர்களின்  இடங்களில் புகுந்து தனக்கு இஷ்டமான பெண்களை தூக்கிச்செல்வதும் வாடிக்கை என்கிறார்கள். சமீபத்தில் ஒயின்ஷாப்புக்குள் புகுந்து பணத்தை கொள்ளையடித்த வழக்கில் சிக்கி, ஜாமீனில் வெளியே வர பெரும்பாடு பட்டான் என்கிறார்கள்.

மோகன்ராம் - சாமிரவி
மோகன்ராம் – சாமிரவி

பிரபல ரவுடிகளான சாமிரவி, திண்டுக்கல் மோகன்ராம், சுந்தரபாண்டியன், மண்ணச்சநல்லூர் குணா உள்ளிட்டோரின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருப்பதை காட்டியே, ”கல்லணை வரைக்கும் என் கண்ட்ரோல்; கல்லணைக்கு அந்த பக்கம் கிளியூர் கண்ட்ரோல்” என ஏரியாவை பிரித்துக்கொண்டு தனது ஏரியாவுக்கு நான் தான் தாதா என கெத்து காட்டுவதில் மிக ஆர்வம் காட்டியிருக்கிறான்.

சமீபத்தில் தனது பிறந்த நாளில், பட்டாக்கத்தியுடன் கேக் வெட்டி, கறி விருந்து கொடுத்து அலப்பறை செய்ததற்காக வழக்கு பதியப்பட்டு சிறை சென்று திரும்பியிருக்கிறான். என்கவுண்டரில் கொல்லப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு வரையில், விதம் விதமாக கெத்து காட்டிய வீடியோக்களை, புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அதில் முடிஞ்சா என்னை புடிச்சு பாரு ! சிபிஐ கூட என்னை தொட முடியாது என்ற குரலோடு  சினிமாவில் வரும் தீம் மியூசிக் போட்டு மிரட்டி இருக்கிறான் ஜெகன்.

கைக்கட்டி....
கைக்கட்டி

யாருக்கு கொடுத்த அலர்ட் !

ஜெகனோட அப்பா கள்ளர் சமூகத்தை சேர்ந்தவர். அம்மா வெள்ளாளர் சமூகம். ஜெயிலுக்குள்ள கள்ளன்னு சொல்லிக்கிறது. வெளியில் வந்தால் வெள்ளாளன்னு சொல்றது, ஜெகனோட வாடிக்கையாம். இதில் எந்தக் கணக்கில் இவனை வைத்து போலீசார் என்கவுண்டரில் முடித்திருக்கிறார்கள் என இரு சமூகத்தினரை சேர்ந்த ரவுடிகள் மத்தியிலேயே குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

தங்கம் கடத்தலில் தொடர்புடைய  மேலசிந்தாமணியை சேர்ந்த சகோதரர்களை மிரட்டி டீலிங் பேசின இடத்தில் தான், ஜெகன் சிக்கிவிட்டதாக சொல்கிறார்கள். போலீசாரின் கண்ணில் சிக்காமல் இன்ஸ்டாகிராமில் கெத்து காட்டி வீடியோக்களை பதிவிட்டபடியே, தலைமறைவாக இருந்து வந்த ஜெகனை மேல சிந்தாமணி சகோதர்கள் தான் போலீசுக்கு போட்டு கொடுத்து விட்டார்கள் என அவர்களிடம் ஜெகன் ஆதரவாளர்கள் கொதிக்கிறார்கள் என்கிற தகவலும் பரவி வருகிறது.

பிரபாகரன் - பிரபு
பிரபாகரன் – பிரபு

ராமஜெயம் கொலை வழக்கில் வெர்ஷா காரை தேடிய பயணத்தில் ஆம்புலன்ஸ் பிரபாகரன் வழியே, சாமி ரவி, திண்டுக்கல் மோகன்ராம் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் சந்தேக பார்வை விழுந்திருக்கும் நிலையில் தான், திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த டிரைவர் வி.எஸ்.எல். குமார் (எ) முருகையன் கொலை வழக்கில்  சாமிரவி சொல்லி தான் என் கணவரை‌ கொலை செய்திருக்கிறார்கள் என போலீசில் புகார் கொடுத்திருக்கிறார் அவர் மனைவி. இந்த பரபரப்பு அடங்குவதற்குள்,  பிரபல ரவுடி சாமிரவி, திண்டுக்கல் மோகன்ராம் இருவருக்கும் நெருக்கமான கொம்பன் ஜெகன் என்கவுண்டரில் சுட்டு வீழ்த்த்தப்பட்டிருக்கிறான்.

கொம்பன் ஜெகனுக்கு வைத்த குறியா? இல்லை, இவன் வழியே ”வேறு யாருக்கோ” கொடுத்த ரெட் அலர்ட்டா ? என்ற பீதியில் உறைந்து கிடக்கிறார்கள், ஏரியா ரவுடிகள் !

17 வயதில் கத்தியை பிடித்த கை, கட்டிய  நிறையமாத மனைவியையும்  கைவிட்டதோடு, வெறும் முப்பது வயதில் அவன் வாழ்க்கையும் முடித்து வைத்திருக்கிறது.. இளம் ரத்தம் தரும் திமிரில் தலைகால் புரியாமல் சாகசம் என்பதாக கருதி, கெட்ட சாகவாசத்தால் தடம் மாறி செல்லும் இளைஞர்களுக்கு எதிர்மறை முன்னுதாரணமாக அமைந்துவிட்டான், கொம்பன் ஜெகன்.

– அங்குசம் புலனாய்வு குழு.

 

வீடியோ லிங்:

Leave A Reply

Your email address will not be published.