நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டி!
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வெற்றி பெற்றனர். இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் சென்னை பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து வெற்றி பெற்ற நிர்வாகிகளை சந்தித்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட வேண்டும் என்று பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து புஸ்ஸி ஆனந்த், நடிகர் விஜயிடம் ரசிகர்களின் கோரிக்கையை தெரியப்படுத்தி இருந்தாராம். இந்த நிலையில் நடிகர் விஜய் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி கவுன்சிலர், நகராட்சி கவுன்சிலர் சேர்மன் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் நிர்வாகிகள் விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையும், கொடியையும் பயன்படுத்தி போட்டியிட ஒப்புதல் வழங்கியுள்ளார்.
நடிகர் விஜயிடம் இருந்தே அனுமதி கிடைத்துள்ளதால் ஒவ்வொரு மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் உற்சாகத்தில் இருக்கின்றனர். மேலும் ஒவ்வொரு பகுதியிலும் செல்வாக்குமிக்க விஜய் ரசிகர்களை தேர்வுசெய்ய தொடங்கியிருக்கும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் செல்வாக்கு மிக்க விஜய் ரசிகர்களை சந்தித்து, மக்கள் இயக்கத்தின் கொடியையும், பெயரையும், விஜயின் புகைப்படத்தையும் பயன்படுத்தி தேர்தலில் போட்டியிடுங்கள் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலிலையே விஜய் மக்கள் இயக்கத்தின் வெற்றி தமிழ்நாட்டு அரசியலில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் போட்டியிட இருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நகர்வாக பார்க்கப்படுகிறது.