சமீப காலமாக மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படும் 2 விஷயங்கள்….
1) ஃபேஸ்புக் ஒரு வெட்டி பொழுதுபோக்கு. இதுனால பிரச்சனை தான் அதிகம்.
2) தமிழ்நாடுல இருக்குற கட்சிகளால மக்களுக்கு எந்த பிரோஜனமும் இல்ல.
இந்த கருத்துக்கள் எந்தளவிற்கு உண்மை ?
நேத்து ராத்திரி 12.50 க்கு ஃபேஸ்புக்கில் இருந்தேன்.
மருத்துவர்.Mariano Anto Bruno Mascarenhas அவர்களிடம் இருந்து இன்பாக்ஸ்கு ஒரு செய்தி வந்தது:-
“அவசர உதவி தேவை. உத்ராகண்ட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் டெல்லியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறது. டெல்லியில் தமிழக மருத்துவர்கள் யாராவது இருக்கிறார்களா? உடனே தெரியப்படுத்தவும்”.
(ஃபேஸ்புக்கில் உள்ள பலருக்கு இந்த செய்தி கிடைத்திருக்கும்.)
மருத்துவர். ப்ரூனோ அவர்களை ஃபேஸ்புக் மூலம் மட்டுமே அறிவேன். அவரிடம் பேசியதில்லை, பழகியதில்லை. ஆனால், அவரது ஃபேஸ்புக் பதிவுகளை படித்ததன் மூலம் அவர் மீது பெரிய மதிப்பு வைத்திருந்தேன். என் செல்ஃபோன் நம்பரை உடனே அவருக்கு அனுப்பினேன். அடுத்த நொடி செல்ஃபோனில் பேசினார்.
மருத்துவர் ப்ரூனோ : தமிழக மருத்துவ டீம் காலை ஃப்ளைட்டில் சென்னையிலயிருந்து கிளம்பி மதியத்துக்குள் டெல்லி வந்திருவாங்க. அதுவரைக்கும் நீங்க கொஞ்சம் பாத்துக்கோங்க சார்.
நான் : சார், இப்ப டெல்லியில தான் இருக்கிறேன். நான் பாத்துகுறேன் சார். கவல படாதீங்க.
“பாலாஜி என்கிற தமிழக டாக்டர் campக்கு போகிறார்” என்ற தகவலை ப்ரூனோ சார் தமிழக சுகதாரத்துறை உயர் அதிகாரிக்கு (Addl. Director Dept.Public Health) தெரியப்படுத்திவிட்டு, மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் ஃபோன் நம்பரை எனக்கு அனுப்பி வைத்தார். காலை 1.10 க்கு தமிழ்நாடு இல்லத்திற்கு தொடர்பு கொண்டேன். எடுத்த எடுப்பிலேயே,”சார் சொல்லுங்க. இப்ப தான் தமிழ்நாட்டுலயிருந்து (மேலதிகாரி) பேசினாங்க. இங்க தங்கியிருக்குறவங்களுக்கு ஹிந்தி தெரியல, டெல்லி டாக்டர்ஸுக்கு தமிழ் தெரியல பிரச்சனையா இருக்கு சார். நீங்க வாங்க”னு சொன்னாங்க.
தங்கவைக்கப்பட்டிருந்த தமிழர்கள் அனைவரும் ஹரித்வாருக்கு யாத்திரையாக சென்றவர்கள். அனைவருக்கும் வயது 50+. தமிழ் மட்டுமே தெரிந்த நம் வீட்டு பாட்டி தாத்தா மாதிரி தான் இருந்தாங்க. பெரும்பான்மையானவர்களுக்கு ரத்த அழுத்தம், சக்கிரை வியாதி, இதய தொந்தரவு இருந்தது. நான் அவர்கள பரிசோதிச்சேன். யாருமே emergency நோயாளிகள் கிடையாது. சின்ன சின்ன தொந்தரவு தான். ஆனா எல்லோருக்கும் பயம். உயிர் தப்பி வந்த பயம்.
ஒவ்வொருத்தர்கிட்டயும் 5, 10 நிமிஷம் பொறுமையா பேசினேன். மருந்து எழுதி கொடுத்தேன். எல்லாரும் ஓரளவு அமைதியடைஞ்சாங்க. தமிழக மருத்துவ குழு வந்தடைந்தாங்க. தேவைப்படுற மருந்துகள அவங்களே ஃப்ளைட்ல கொண்டு வந்திருந்தாங்க. பி.பி அப்பரட்டஸ் மட்டும் விமானத்துல எடுத்து வர அனுமதி கிடையாதுங்குறதால, எய்ம்ஸ் அழைச்சிட்டு போய் தனியார் ஸ்டோரில் வாங்கிக்கொடுத்தேன். எல்லா செலவும் தமிழக அரசுடையது.
இந்த பதிவின் மூலம் நான் சொல்ல வருவது 3 கருத்துக்கள் :-
1) மருத்துவர்.ப்ரூனோ அவர்களை நான் இதுவரை பார்த்ததில்லை. நேற்று இரவு வரை என் ஃபோன் நம்பர் கூட அவரிடம் கிடையாது. ஆனால் அவர் செய்தி அனுப்பியதற்கும்,எங்கோ டெல்லியில் உள்ள நான், தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு ஃபோன் மூலம் தொடர்பு கொண்டு பேசியதற்கும் சரியாக 20 நிமிடம் மட்டுமே இடைவெளி. அதுவும் உலகம் உறங்கிக்கொண்டிருக்கும் இரவு 1 மணிக்கு !
இது எப்படி சாத்திமானது ?
பதில் :- ” ஃபேஸ்புக் ”
இந்த ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் ரொம்ப சக்தி வாய்ந்தது. சரியாய் பயன்படுத்தினால் மனிதயினம் முன்னேற பெரும் உதவியாய் இருக்கும். ஆனா இது ஒரு Double edged weapon. இதனை பலர் தவறாய் பயன்படுத்தி தவறு இழைப்பதும், பயன்படுத்த தெரியாமல் வீணடிப்பதும் தான் வேதனையா இருக்கு .
2) தொலைதொடர்பு வளர்ச்சி
18 வருஷம் முன் தேசிய அளவிலான ட்டோர்னமெண்ட் ஒன்றிற்காக தமிழ்நாட்டில் இருந்து மைசூர் போனோம். திடீர் கலவரம். இரவு நேரம். அப்ப ஃபோன் வசதி கிடையாது. நாங்க போன குழு தனித்தனியா பிரிஞ்சு ஓடினோம். 5 பேர் மட்டும் ஒரு கல்யாண மண்டபத்தின் சமையல் அறையில் ராத்திரி முழுக்க இருட்டில் தங்கினோம். அடுத்த நாள், நாங்கள் தங்கியிருந்த லாட்ஜுக்கு வந்ததும் தான் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். நெய்வேலியில் இருந்த பெற்றோர்கள், குழந்தைகளை மைசூருக்கு அனுப்பிவெச்சுட்டு பயந்து போயிருந்தாங்க. எங்களை பற்றிய எந்த வித செய்தியும் அவங்களுக்கு தெரியவில்லை.

காரணம் ? அன்றைய காலகட்டத்தில் தூர்தர்ஷன் மட்டுமே. அதுவும் ஊரில் சிலர் வீட்டுல மட்டுமே தொலைகாட்சி இருக்கும்.
ஆனா, இப்ப நடந்திருக்கும் உத்திராகண்ட் வெள்ள பாதிப்பு பற்றி, எல்லா செய்தி ஊடகங்களும் நிமிஷத்துக்கு நிமிஷம் செய்தி வெளியிடுது. ஹெலிகாப்டரில் போய் செய்தி சேகரிக்குறாங்க. பாதிக்கப்பட்ட உறவினர்களை பற்றி தெரிந்து கொள்ள Helpline கொடுத்திருக்காங்க. இந்த தொலைதொடர்பு வளர்ச்சியை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம்.
3) பெருமை கொள்ள வைக்கும் தமிழகம்
“உத்திராகண்டில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களை, பத்திரமாக அழைத்து வர தமிழக அரசு உடனடியா நடவடிக்கை எடுக்க வேண்டும்” என திமுக உட்பட பல அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தன. தமிழக முதல்வர் உடனடியா செயல்பட்டு அத்துனை உதவியையும் செய்துள்ளார்.

கடந்த 15 ஆண்டுகளாக, எதிர்கட்சியை சேர்ந்த தொலைகாட்சிகளில், மக்களின் குறைகளை எடுத்துச் சொல்கிறார்கள். ஆள்பவர்களுக்கு அதை சரி செய்தாக வேண்டிய காட்டாயம். தமிழக அரசியல் கட்சிகளிடையே உள்ள இந்த ஆரோக்கியமான அரசியலை பாராட்டத்தான் வேண்டும். ஹரியானா, மத்திய பிரதேசம் போன்ற வடமாநிலங்களில் மக்கள் பிரச்சனையை 2 கட்சிகளுமே கண்டுகொள்ளாது.
தமிழ்நாடு பவனில் தங்கியிருந்த தமிழக மக்கள், மனநிறைவு அடைஞ்சு சந்தோஷமாய் தமிழக மருத்துவர்களையும் தமிழக அரசையும் பாராட்டினாங்க. வந்திருந்த அத்தனை தமிழர்களுக்கும் இலவசமா அறை ஒதுக்கி, உணவு அளித்து, மருத்துவ வசதியையும் செய்து கொடுத்து, இலவசமா விமானத்தில் தமிழகம் அழைத்து போகிறது தமிழக அரசு.
இது சிலருக்கு சாதாரண விஷயமா தெரியலாம். ஆனா, ஒரிசா, பீகார் மருத்துவ நண்பர்கள் இத கேட்டதும்,” உங்க கவர்ன்மெண்ட் இவ்ளோ செஞ்சு கொடுத்திருக்கு. எங்க ஸ்டேட்லயிருந்து எத்தன பேர் போனாங்கனு கூட யாருக்கும் தெரியாது. யூ ஆர் லக்கி பீப்பிள்”னு தமிழ்நாட்ட பாத்து பொறாமையா பேசுனாங்க. உண்மை தான்.
இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களையும் ஒப்பிடுகையில் தமிழக மருத்துவத்துறை மிகச்சிறப்பாக செயல்படுகிறது. பெரும்பாலான health indicatorகளில் தமிழகம் முதலிடத்தில் இருக்கும் (சிலவற்றில் கேரளாவிற்கு அடுத்தபடியாக).
இந்த பெருமைக்கு யார் காரணம் ?
தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் சுகாதாரத்துறைக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். தமிழக மக்களின் படிப்பறிவு, விழிப்புணர்வு. “தமிழ் நாட்டு மருத்துவர்களுக்கு தான் அதிக பொறுப்புணர்வு இருக்கு” என்பது எய்ம்ஸில் உள்ள பல்வேறு துறைகளிலும் உள்ள துறைத்தலைவர்களின் கருத்து.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தமிழ்நாடு இல்லத்தின் வாசலில் உள்ள இந்த தமிழக அரசு முத்திரையை ஃபோட்டோ எடுத்தேன். அதில் உள்ள 4 தலை சிங்கத்தை பல இடங்களில் பார்த்துள்ளேன். ஆனா அதில் உள்ள கோபுரத்தை இன்று பார்த்ததும் ஏதோ ஒரு ஈர்ப்பு, சந்தோஷம்,பெருமை.
தமிழ்நாட்டை சேர்ந்தவன் என்ற பெருமை.
— பாலாஜி.