பாப்பிரெட்டிப்பட்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களின் அவலம் மாறுமா ?

0

பாப்பிரெட்டிப்பட்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களின் அவலம் மாறுமா ? கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்களின், மிகவும் முக்கியமான அன்றாட அடிப்படைத் தேவையாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் திகழ்கின்றன. குக்கிராமங்களில் வசிக்கும் மக்கள், தங்களது அவசர மருத்துவ உதவிக்கு, நீண்ட தூரம் பயணித்து, நகர்ப்புறங்களில் உள்ள மருத்துவமனைக்குச் செல்ல முடியாத நிலை இருப்பதால், ஆரம்ப சுகாதார நிலையங்கள்தான் இவர்களின் உயிர் காப்பான் ஆகத் திகழ்கின்றன.

தருமபுரி மாவட்டம் பொம்மிடிமல்லாபுரம், வத்தல் மலை, பி முத்தம்பட்டி, பூத நத்தம், பைரநத்தம், முக்காரெட்டிப்பட்டி, காளிப்பேட்டை, சித்தேரி ஆகிய 8 ஆரம்ப சுகாதார நிலையங்களையும் உள்ளடக்கிய பாப்பிரெட்டிப்பட்டி ப்ளாக்கின் பொறுப்பு அதிகாரியாக செயல்பட்டுவரும் டாக்டர் கௌரி சங்கர், தருமபுரி மாவட்ட மருத்துவ அலுவலர் ஜெயந்தி, கடந்த 22 ஆண்டுகளாக பொ.மல்லாபுரத்தில் மருத்துவராக பணிபுரிந்த டாக்டர் வாசுகி ஆகியோரின் அதிகார துஷ்பிரயோகங்களை சுட்டிக்காட்டி இலஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்டு உயர் அதிகாரிகளுக்கு முறையிட்டும் எந்த பலனும் இல்லை என வேதனை தெரிவிக்கிறார், அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சண்முகம்.

சண்முகம் . சமூக ஆர்வலர்
சண்முகம் . சமூக ஆர்வலர்

இந்த விவகாரம் தொடர்பாக, அங்குசம் சார்பில் சண்முகத்திடம் பேசினோம். ”பிரசவம் ஆகும் ஒரு கர்ப்பிணி பெண்களுக்கு இலவச தாய் சேய் நல ஊர்தியில் அனுப்பி வைத்தது போல் கையெழுத்து வாங்கிவிட்டு ஆட்டோவில் போக சொல்லி அனுப்பி வைக்கிறார்கள். கர்ப்பிணிகளுக்கு உணவு வழங்கியது போல் வட்டார மருத்துவ அலுவலர் கௌரி சங்கர் மற்றும் பொ மல்லாபுரம் சுகாதார நிலைய பொறுப்பு டாக்டர் பிரகாஷ் அம்பேத்கார் பொய் கணக்கு எழுதி வைத்து காசு பார்க்கிறார்கள். பொ மல்லாபுரத்திற்கு வழங்கிய தாய் சேய் நல ஊர்தியை (TN 29 CZ 2135) டாக்டர் கௌரி சங்கருக்கு சொந்தமான தினம் தினம் காபி பாருக்கும், விவசாய நிலங்களில் உரங்கள் வாங்க ஆட்களை அழைத்து வரவும் பயன்படுத்தி வருகிறார்.

- Advertisement -

மேலும் டாக்டர் கௌரி சங்கர் மற்றும் அவரது மனைவியான டாக்டர் சுதா ஆகியோர், வே முத்தம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்தான் பணிபுரிய வேண்டும். ஆனால், அங்கு செல்லாமல் இவர்களின் சொந்த கிளினிக்கில் வேலை செய்து வருகிறார்கள்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வட்டார சுகாதார அலுவலர்கள் அனைவரும் 3 மாதத்திற்கு ஒரு முறை மாவட்ட சுகாதாரத்துறை இயக்குநருக்கு தங்க நகைகளையும் ஏசி மெஷினையும் இலஞ்சமாக கொடுப்பதாக ஒரு செவிலியர் பேசிய ஆடியோ சமீபத்தில் வைரலானது. இவ்வாறுதான் இவர்களது முறைகேடுகளை தங்களது மேலதிகாரிகளை சரிகட்டி கொள்கிறார்கள் போல.

கௌரி சங்கர்
கௌரி சங்கர் –  பாப்பிரெட்டிப்பட்டி வட்டார மருத்துவ அலுவலர்

இதேபோல், பொ.மல்லாபுரம் சுகாதார நிலையத்தில் 22 வருடங்களாக தொடர்ந்து ஒரே இடத்தில் பணிபுரிந்த டாக்டர் வாசுகி என்பவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, சமீபத்தில் மாரண்டஹள்ளி மருத்துவமனைக்கு பணி மாறுதலில் சென்றார். சென்ற வேகத்தில் உயர் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்து சரிகட்டி மீண்டும் பொ. மல்லாபுரம் சுகாதார நிலையத்திற்கே வந்துவிட்டார். பின்னர், இந்த முறைகேட்டை நான் புகாராக எழுப்பியதையடுத்தே, மீண்டும் மாரண்டஹள்ளிக்கு மாறுதலாகி சென்றார்.

4 bismi svs

டாக்டர் வாசுகிக்கு எதிராக வரப்பெற்ற புகார் கடிதங்களையெல்லாம் முன்னர் இருந்த DD யிடம் தானே சென்று தீ வைத்து எரித்துவிட்டு பஞ்சாயத்து பேசி தீர்த்து வைப்பேன் என்றும் இது போல பலமுறை வாசுகிக்கு உதவி செய்திருக்கிறேன் என்பதாக கொண்டஹரள்ளியை சேர்ந்த நேரு என்பவர் பேசிய ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது அதை நீங்களும் கேளுங்கள் என போட்டு காட்டினார்

பாப்பாரப்பட்டி பிளாக்கில் உள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியமர்த்தப்பட்ட வி.சீதா என்ற செவிலியரிடம் இலஞ்சம் பெற்றுக்கொண்டு, பாப்பிரெட்டி பிளாக்கில் உள்ள பொ.மல்லபுரம் சுகாதார நிலையத்தில் 8 ஆண்டாக பணியாற்றி அனுமதித்து வருகிறார் டாக்டர் கௌரிசங்கர்.

இதே பகுதியில் கர்ப்பம் தரித்த 18 பெண்களில் ஒரே ஒரு பெண் கர்ப்பிணி மட்டுமே அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் பிரசவம் பார்த்திருக்கிறார். மற்றவர்களெல்லாம், வேறுவழியின்றி இவர் கிளினிக் உள்பட தனியார் மருத்துவமனையை நோக்கி சென்றுவிட்டார்கள்.

ஜெயந்தி. தர்மபுரி மாவட்ட சுகாதாரத்துறை இனை இயக்குனர்
ஜெயந்தி. தர்மபுரி மாவட்ட சுகாதாரத்துறை இனை இயக்குனர்

மிக முக்கியமாக, இவரது கட்டுப்பாட்டில் இயங்கும் ஆரம்ப சுகாதார மையத்திற்கு புதியதாக பணியாற்ற மருத்துவர்களையும் தங்களைப்போலவே செயல்படுமாறு கட்டாயப்படுத்திவிடுவார்கள். மீறினால், அவர்களுக்கு பல்வேறு வகைகளில் குடைச்சல்களை கொடுப்பதாகவும் என்கிறார் சண்முகம்.

இது குறித்து விளக்கமறிய டாக்டர் கௌரி சங்கரை தொடர்புகொண்டபோது, “பொ மல்லாபுரம் சுகாதார நிலையத்தில் கண்காணிப்பு செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. பொருப்பு டாக்டர்தான் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று பட்டென்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தார்.

தர்மபுரி மாவட்ட சுகாதார அலுவலர் ஜெயந்தியிடம் பேசியபோது, ”நீங்கள் சொல்வதைப்போல புகார் எதுவும் எங்கள் கவனத்திற்கு இதுவரை வரவில்லை. வந்தால் நடவடிக்கைகள் எடுப்பேன்” என்று பேசிய கையோடு அவரும் அழைப்பை துண்டித்துக் கொண்டார்.

பி.மல்லாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்டு பாப்பிரெட்டிப்பட்டி ப்ளாக்கில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரணை நடத்தி உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக அமைந்திருக்கிறது.

மணிகண்டன்.கா.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.