பில்லி சூனியம் மாந்திரீகம் செய்வதாக மோசடி ! பலே ஆசாமி ஸ்ரீரகு சிக்கியது எப்படி ?
அட இந்த காலத்திலயும் இப்படி ஒரு மோசடியா? என்று வாயைப்பிளக்க வைக்கும் வகையில் தமிழகத்தில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மோசடியில் ஈடுபட்டு வந்த ஆசாமியை கொத்தாக தூக்கி சிறையிலடைத்திருக்கிறார்கள் திருச்சி மாவட்ட போலீசார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரைச் சேர்ந்தவர் சதீஸ்பாபு. திருவெறும்பூர் பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த அவரிடம், சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த ரகு என்பவர், தான் ஒரு மலையாளி என்றும் மாந்திரீகம் செய்து வருவதாகவும் அறிமுகப்படுத்திக் கொண்டு பேசியிருக்கிறார்.
ஜோசியம் மற்றும் மாந்திரிகம் பூஜை செய்வதில் கைதேர்ந்தவர் என்றும்; உன்னை ஒரு வாரத்தில் கோடீஸ்வரனாக்குகிறேன் என்றும்; எதிர்வரும் பஞ்சாயத்து தேர்தலில் கவுன்சிலராக்குகிறேன் என்றும் அள்ளிவிட்டிருக்கிறார், மாந்திரீக ஆசாமி ரகு. கூடவே, தனது கைங்கர்யங்களுக்கு ஆதாரமாக pappalyvishnumaya என்ற யூடியூப் சேனலில் தானே தோன்றி பேசிய வீடியோக்களையும் காட்டி மயக்கியிருக்கிறார். சதீஸ்பாபுவிடமிருந்து எப்படியோ, 3000 ரூபாயை கறந்த ரகு, ஒரு மணி நேரத்தில் பூஜை செய்துவிட்டு திரும்பி வருகிறேன் என்று கூறி மாயமாகியிருக்கிறார். ஒரு மணி நேரம் ஆகியும் திரும்பி வராத நிலையில், சுற்று வட்டாரத்தில் ரகுவை தேடியிருக்கிறார் சதீஸ்பாபு.
இந்நிலையில், திருவெறும்பூரையடுத்த மலைக்கோயில் அருகே, தன்னிடம் சோப்பு போட்டதைப்போலவே, இன்னொருவரிடம் கதையளந்து கொண்டிருந்த ரகுவிடம் கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டிருக்கிறார். அதற்கு மிகவும் எகத்தாளத்துடன், “ நான் கேரளாவை சேர்ந்து மாந்திரீகன் … உன்னை மாந்திரீகம் செய்து கொன்றுவிடுவேன்” என்பதாக மிரட்டியும் இருக்கிறார்.
மேற்படி, பார்ட்டி பக்கா பிராடு என்பதை அறிந்து கொண்ட சதீஸ்பாபு, திருச்சி மாவட்ட எஸ்.பி.யின் உதவி எண் 8939146100 ணுக்கு தகவல் தட்டி விட்டிருக்கிறார். செய்தியறிந்த திருச்சி எஸ்.பி. செ.செல்வநாகரத்தினம், திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் தனிப்படை அமைத்து ரகுவை கைது செய்ய உத்தரவிட்டார். இன்ஸ் கருணாகரனின் கையில் சிக்கிய ரகு, வழக்கமான போலீசு விசாரணையையடுத்து சிறையிலடைக்கப்பட்டிருக்கிறான்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
“பாப்பாளி விஷ்ணு மாயா கருங்குட்டிசாத்தன் மாந்திரீகம்.” என்ற பெயரில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகவே, யூடியூப் சேனலை தொடங்கி, அதில் தானே தோன்றி பல்வேறு மாந்திரீகங்களை காட்டி பலரை மயக்கியிருக்கிறான்.
ஸ்ரீரகு
குறிப்பாக, “ திருமணத்தடை; குழந்தை பாக்கியம்; கடன் தொல்லைகள்; வியாபாரத்தில் லாபம்; கொடுத்த பணம் வந்து சேர; பேய் பிசாசு துஷ்ட சக்திகள் விலக; சினிமாவில் சாதிக்க; அரசியலில் சாதிக்க; பில்லி சூன்யம் ஏவல் வைக்கப்படும். எடுக்கப்படும் . நாகதோஷம் பித்ரு தோஷம் சத்ரு தோஷம் குலதெய்வவழிபாடு குடும்பப் பிரச்சினை தீராத வியாதிகள் வீட்டில் இறந்தவர்களை உங்கள் வீட்டிற்குள் கொண்டு வருதல்; அரசாங்க வேலை; வெளிநாட்டு வேலைவாய்ப்பு கணவன் மனைவி இடையே பிரச்சினை வழக்குகளில் வெற்றி பெற செய்தல் எதிரிகளால் வரும் பிரச்சனைகள் கேரளா முறைப்படி பூஜைகள் செய்து சரி செய்து தரப்படும்.
உங்கள் வீட்டிலோ கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள எங்கள் வம்சத்தின் கோவிலில் பூஜைகள் செய்து தருகிறேன். சென்னை திருவல்லிக்கேணி எனது இல்லத்தில் ஒவ்வொரு நாளும் பகல் 12மணிக்கு மற்றும் மாலை 6மணிக்கு பூஜைகள் நடைபெறும். அமாவாசை பவுர்ணமி நாட்களில் சிறப்பு பூஜைகள் மூலம் பல பிரச்சினைகள் சரி செய்து தரப்படும். ” என்பதாக தனது சாகசங்களை விளம்பரமாக அறிவித்து மோசடியில் ஈடுபட்டு வந்திருக்கிறான் ரகு.
திருச்சி எஸ்.பி. செ.செல்வநாகரத்தினம்
டி.என்.பி.எஸ்.சி.க்கே டஃப் கொடுப்பதை போல ”அரசாங்க வேலை” என்பதான வாக்குறுதி தொடங்கி, உச்சபட்சமாக, “இறந்தவர்களை உங்கள் வீட்டிற்குள் கொண்டு வருதல்” என்பது வரையில் அந்த யூடியூப் சேனலில் ரகு அள்ளிவிட்டிருக்கும் ”புருடா”க்கள் காமெடி + கிரைம் ரகங்கள்.
எஸ்.பி.யின் அவசர உதவி எண் : 8939146100 வழியே கிடைக்கப்பெற்ற தகவலை வைத்து, துரிதமாக விரைந்து பலே ஆசாமியை தட்டி தூக்கியிருக்கிறார்கள் திருச்சி மாவட்ட போலீசார்!
– அங்குசம் செய்திப்பிரிவு.