பாலின சமய பேதமின்றி அரவணைக்கும் கலைக் கூடமாக திருச்சி கலைக்காவிரி !
திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியின் பாலின மன்றம் சார்பில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது. நிகழ்வில் கல்லூரியின் செயலர் அருள்பணி. லூயிஸ் பிரிட்டோ தலைமை வகித்தார், முதல்வர் முனைவர் ப.நடராஜன் முன்னிலை வகித்தார், சிறப்பு விருந்தினராக திருச்சி மாவட்ட சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூத்த அலுவலர் ரேவதி பங்கேற்றார். மற்றும் திருநங்கை கஜோல் பங்கேற்றனர். நிகழ்வில் பங்கேற்ற ரேவதி அவர்கள் பெண்கள் தாங்கள் கற்றக் கல்வியை சிறப்பாகப் பயன்படுத்திட வேண்டும். அறிவார்ந்த பெண்களாக நாம் முன்னேற வேண்டும். அறிவாற்றல் நிறைந்தவர்கள் பெண்கள். அவர்கள் இணைந்து அறிவாற்றலுடன் செயல்பட்டால் சமூக மேம்பாடு சாத்தியமாகும். நாளுக்கு நாள் குடும்ப வன்முறை பெருகி வருவது கவலையளிக்கிறது.
அறிவும் அன்பும் சமமாக மதித்தல், பாதுகாப்பு பாராட்டு ஆகிய பண்புகள் வளர்த்தெடுக்கப்பட்டால் சமூகக் கட்டமைப்பை சரி செய்ய முடியும் என்றார். திருச்சி மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்கள் வெகுவாக குறைந்துள்ளது என்றார். அதனைத் தொடர்ந்து செயலர் தந்தை வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து திருநங்கை கஜோல் தனது உரையில் திருநங்கைகள் அறிவாற்றல் மிக்கவர்கள், கலைத்திறனில் ஆளுமைமிக்கவர்கள். அவர்களின் திறன்களுக்கு இன்னும் கூடுதலாக வாய்ப்புகள் சமூகம் வழங்கப்பட வேண்டும் என்றார். குறிப்பாக கலைத் துறையில் கூடுதலாக வாய்ப்பளித்தால் திசை மாறிப் போகாமல் தன் சமூகத்தையும் தான் சார்ந்த சமூகத்தையும் உயர்த்துவர். எல்லோரும் அவமானங்களை கடந்துதான் வந்தாக வேண்டும்.
திருநங்கைகள் பல்வேறு இன்னல்களை கடந்து வருகிறார்கள். அவ்வாறு வருபவர்களை பாலின பேதமின்றி சமய பேதமின்றி அங்கீகரிக்கும் கலைக் கூடமாக கலைக்காவிரி திகழ்கிறது என்றார். தொடர்ந்து திருநங்கைகள் வாழ்வில் மேன்மை பெற கலைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும் தமிழ்நாடு அரசு திருநங்கைகளுக்கான கல்விச் செலவை அரசே ஏற்கும் என்று வெளியிட்ட அறிவிப்பிற்கு முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.
உடன் அவருடைய மாற்றுத்திறன் திருநங்கை பவித்ரா பங்கேற்றார். முன்னதாக பாலின மன்ற ஒருங்கிணைப்பாளர் தமிழ்த் துறை முதுநிலை உதவிப் பேராசிரியர் கி. சதீஷ் குமார் ஆற்றினார்.
மாணவர்களின் “பெண்மையைப் போற்றுவோம்” விழிப்புணர்வு நடனம் பாட்டு நிகழ்வு நடைபெற்றது. நிறைவாக சமஸ்கிருதப் பேரா. முனைவர் இல. கோவிந்தன் நன்றி கூறினார். திருநங்கை பரத நடன மாணவி செல்வி. ஆயிஷா பாராட்டப் பெற்றார். குரலிசைத்துறை செல்வி. பெல்ஷியா மேரி தொகுப்புரையாற்றினார்.