யாரோட அட்ஜஸ்ட்மென்ட் செஞ்சிட்டு வர்றனு என் வீட்டுக்காரர் அசிங்கமா கேட்குறாரு.. நீதிபதியின் முன்பு குமுறிய பெண் போலீசார் ! முகம் இறுகிய யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு !

0

யாரோட அட்ஜஸ்ட்மென்ட் செஞ்சிட்டு வர்றனு என் வீட்டுக்காரர் அசிங்கமா கேட்குறாரு.. நீதிபதியின் முன்பு குமுறிய பெண் போலீசார் ! முகம் இறுகிய யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு !

பெலிக்ஸ் ஜெரால்டு - கைது -
பெலிக்ஸ் ஜெரால்டு – கைது –

சவுக்கு சங்கர் கைதுக்கு காரணமாக அமைந்த சர்ச்சைக்குரிய காணொளியை வெளியிட்ட ரெட்பிக்ஸ் யூட்யூப் சேனலின் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

”பெண்கள் அனைவரும் பதவி உயர்விற்காகவும், பாலின ரீதியாக உயர் அதிகாரிகளிடம் சமரசம் செய்து கொள்வதாகக்கூறி ஒட்டுமொத்த பெண் இனத்தையே இழிவுபடுத்தியுள்ளார்” என்பதாகக் குறிப்பிட்டு, சர்ச்சைக்குரிய முறையில் பேசிய சவுக்கு சங்கர் மீதும் சர்ச்சைக்குரிய காணொளியை வெளியிட்ட ரெட்பிக்ஸ் 24*7 யூட்யூப் சேனல் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமாரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார், முசிறி உட்கோட்ட டி.எஸ்.பி. செல்வி யாஸ்மின்.

- Advertisement -

DSP Yasmin
DSP Yasmin

இவரது புகாரின் அடிப்படையில் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு (எண் 21/24) பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். ஏற்கெனவே, கோவை சைபர் கிரைம் போலீஸில் பதியப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் கோவை சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கரை மேற்படி வழக்கில் பார்மல் அரெஸ்ட் செய்திருந்தனர். இந்நிலையில், இவ்வழக்கில் ஏ-2 வாக சேர்க்கப்பட்டிருந்த ரெட்பிக்ஸ் யூட்யூப் சேனலின் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு தலைமறைவான நிலையில் அவரை தேடி வந்தனர்.

டெல்லியில் இருந்து ரயில்...
டெல்லியில் இருந்து ரயில்…

சவுக்கு சங்கருக்கு அடுத்து கண்டிப்பாக தன்னையும் இந்த வழக்கில் கைது செய்துவிடுவார்கள் என்று கருதிய ரெட்பிக்ஸ் உரிமையாளர் ஜெரால்டு, தலைமறைவாக இருந்துகொண்டே முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்திருந்தார்.

இவரது மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ், “யூட்யூப் சேனல்களை கட்டுப்படுத்துவதற்கான தகுந்த நேரம் இது. நேர்காணல் அளிக்க வருபவர்கள் அவதூறான கருத்துக்களை தெரிவிக்கத் தூண்டும் நேர்காணல் எடுப்பவர்களை முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும்.” என்பதாகக்கூறி வழக்கை ஒத்தி வைத்திருந்தார்.

இந்நிலையில், ரெட்பிக்ஸ் பெலிக்ஸ் ஜெரால்டு டெல்லியில் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ஆய்வாளர் வீரமணி தலைமையிலான திருச்சி மாவட்ட போலீசார் டெல்லிக்கு விரைந்தனர். கடந்த மே-10 அன்று இரவு 11 மணியளவில் டெல்லியில் வைத்து பெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

ரெட் பிக்ஸ் பெலிக்ஸ் கைது
ரெட் பிக்ஸ் பெலிக்ஸ் கைது

“டெல்லியில் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா-விடம் புகார் தெரிவிப்பதற்காக சென்றவரை சட்டவிரோதமாக கைது செய்திருக்கிறார்கள். மனு கொடுத்துவிட்டு எப்படியும் தமிழகம் திரும்பி வரத்தானே போகிறார்? பழிவாங்க வேண்டுமென்றே செய்கிறார்கள்.” என்பதாக அடுத்தடுத்து ரெட்பிக்ஸ் சேனலில் தோன்றி கருத்துக்களை தெரிவித்தனர், அவர் தரப்பு வழக்கறிஞர் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள்.

மேலும், ”என் கணவர் மீது வழக்குப்போடுவதை குறையாக சொல்லவில்லை. ஆனால், சட்டவிரோதமாக அவரை கைது செய்துவிட்டார்கள். கடந்த இரண்டுநாட்களாக என் கணவர் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. அவரது உயிருக்கு ஆபத்து.” என்று கண்ணீரோடு திருச்சி எஸ்.பி. அலுவலகத்தில் இரவுப் பகலாக காத்துக்கிடந்தார், ரெட்பிக்ஸ் பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி ஜேன் ஆஸ்டின்.

பெலிக்ஸ் ஜெரால்டு - குடும்பத்தினர்
பெலிக்ஸ் ஜெரால்டு – குடும்பத்தினர்

இதற்கெல்லாம் விடையளிக்கும் வகையில், மே-13 அன்று மதியம் சுமார் 2.30 மணியளவில் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் பெலிக்ஸ் ஜெரால்ட் ஆஜர்படுத்தினர், திருச்சி மாவட்ட தனிப்படை போலீசார். திருச்சி சுப்ரமணியபுரத்தில் அமைந்துள்ள திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசு நிலையத்தில் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து, திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு, கூடுதல் மகிளா நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதியும் 3-வது கூடுதல் மாவட்ட நீதிபதியுமான ஜெயப்பிரதா முன்பாக, ரெட்பிக்ஸ் பெலிக்ஸ் ஜெரால்டை நேர்நிறுத்தினர்.

”சட்டவிரோதமான முறையில் கைது செய்திருக்கிறார்கள். குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. இரண்டு நாட்களுக்கு பிறகு இப்போது கைது செய்திருப்பதாக சொல்கிறார்கள்.” என்பதாக பெலிக்ஸ் ஜெரால்டு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

ரெட் பிக்ஸ் யூடியுபர் பெலிக்ஸ் கைது
ரெட் பிக்ஸ் யூடியுபர் பெலிக்ஸ் கைது
4 bismi svs

“எந்த சம்மனும் வழங்கவில்லை. எஃப்.ஐ.ஆர். காப்பி கொடுக்கவில்லை. என் குடும்பத்தாரோடு தொடர்புகொள்ள அனுமதிக்கவில்லை. பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவிடம் முறையிடுவதற்காக டெல்லி சென்றிருந்த என்னை சட்டவிரோதமான முறையில் அழைத்து வந்தனர்.” என்று யூடியுபர் பெலிக்ஸ் ஜெரால்டும் நீதிபதியிடம் முறையிட்டார்.

”மே-10 வெள்ளிக்கிழமை அன்று இரவுதான் அவரை கண்டுபிடித்தோம். சம்மனை வாங்க மறுத்துவிட்டார். எங்களது கைது நடவடிக்கைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை. டெல்லியில் உள்ள நபர்களை வைத்து இன்புளூயன்ஸ் செய்ய முயற்சித்தார். வேண்டுமென்றே நேரத்தை அவர் கடத்தியதால், எங்களது திட்டப்படி ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்த இரயிலில் அவரை கொண்டுவர முடியாமல் போனது. வேறுவழியின்றி கடைசி ரயிலில் முன்பதிவில்லாத பெட்டியில் பயணம் செய்து மே-13 அன்று காலை 6.30 மணியளவில் சென்னையை வந்தடைந்தோம்.

சென்னை வந்து சேர்ந்ததும் முறைப்படி அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துவிட்டோம்.” என்பதாக போலீசார் தரப்பில் நடந்த விவரங்களை எடுத்துரைத்தனர். அரசுதரப்பில் அரசுதரப்பு வழக்குரைஞர்கள் புடை சூழ வாதாட கூடவே வழக்குரைஞர்கள்  மற்றும் பெண் வழக்குரைஞர்கள்  ஆகியோரும் இந்த வழக்கில் தங்களது கருத்துக்களையும் கருத்திற்கொள்ள வேண்டுமென்று இணைந்து வாதாடினர். அவர்கள் அனைவரையும் மனுவாக தாக்கல் செய்யும் உத்தரவிட்டார்.

ரெட் பிக்ஸ் யூடியுபர் பெலிக்ஸ் கைது (2)
ரெட் பிக்ஸ் யூடியுபர் பெலிக்ஸ் கைது (2)

போலீசார் கௌரவமான முறையில்தான் நடத்தினார்கள்

போலீசார் துன்புறுத்தினார்களா? காயங்கள் ஏதும் இருக்கிறதா? என்ற நீதிபதியின் கேள்விக்கு, “கௌரவமான முறையில்தான் நடத்தினார்கள். துன்புறுத்தவில்லை. காயங்கள் எதுவுமில்லை.” என்றார், பெலிக்ஸ் ஜெரால்டு.
இதனையடுத்து, ”ரெட்பிக்ஸ் நிறுவனம் முறைப்படி பதிவு செய்யப்பட்ட நிறுவனம். தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் பதிவு செய்திருக்கிறோம். ஊடக துறையில் பல ஆண்டுகள் செயல்பட்ட அனுபவம் உடையவன். பல தலைப்புகளில் ஆயிரக்கணக்கான வீடியோக்களை பதிவு செய்திருக்கிறோம்.

அனைத்து மட்டங்களிலும் நடைபெறும் ஊழல்களை அம்பலப்படுத்தியிருக்கிறேன். இவர்கள் சொல்வதைப்போல் எல்லாம் இல்லை. நான் சரியாகவே செயல்பட்டு வருகிறேன். சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்கிவிடுகிறேன். எனது மகன் மற்றும் மகள் ஆகியோரை கல்லூரியில் சேர்ப்பது தொடர்பான கடமைகள் இருக்கிறது. ” என்பதாக பிணையில் விடுவிக்குமாறு கோரி தனது தரப்பு வாதங்களை வழக்கறிஞராகவே மாறி எடுத்துரைத்தார் பெலிக்ஸ் ஜெரால்டு. நீதிமன்றத்தில் அவருக்காக ஆஜரான வழக்கறிஞரைவிட, அதிகமாகவும் அதிலும் ஆங்கிலத்திலும் பேசினார் யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு.

அப்போது, குறுக்கிட்ட வழக்கறிஞர்கள், ”இவ்வளவு நடந்தபிறகும்கூட இது வரை சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்கவில்லை. தற்போது கைது செய்யப்பட்ட பிறகு நீக்கிவிடுகிறேன் என்கிறார். அவருக்கும் பெண் பிள்ளை இருக்கிறது. அவரது மனைவி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் இவரது செயலை ஏற்றுக்கொள்கிறார்களா? அவரது குடும்ப உறுப்பினர்களை இவர் சொன்னது போலவே சொன்னால், இவர் ஏற்றுக்கொள்வாரா? இது முதல்முறை அல்ல. வழக்கமாகவே இதுபோன்ற சர்ச்சைகளுக்குரிய காணொளிகளை பதிவிடுவதையே வழக்கமாக கொண்டிருக்கிறது, ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல்.

ஏற்கெனவே, நீதிபதிகள் தங்களிடம் பணியாற்றும் பெண்களை தவறாக பயன்படுத்திக் கொள்வதாக வீடியோ பதிவிட்டார்கள். அந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு தண்டனை வழங்கப்பட்டது. இந்த குறிப்பான சர்ச்சைக்குரிய வீடியோவில்கூட, ஒட்டுமொத்த பெண் போலீசாரும் தமது உயர் அதிகாரிகளுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்துதான் சலுகைகளை பெறுகின்றனர் என்பதாக பேசியிருக்கிறார். சவுக்கு சங்கர் பேசியதை இவரும் ஆதரித்திருக்கிறார். இவரை பிணையில் வெளியில் விடக்கூடாது. நீதிமன்றக் காவலில் வைக்க வேண்டும்.” என்பதாக வாதங்களை முன்வைத்தனர். குறிப்பாக, பெண் வழக்கறிஞர்கள் ஆவேசத்தோடு பேசினர். ஆனாலும், ”இதற்காக இவரை நீதிமன்றக் காவலில் அனுப்ப வேண்டுமா? இதனால் பாதிக்கப்பட்டவர்கள் யார்?” என்று கேள்வி எழுப்பினார் நீதிபதி.

யூடியுபர் பெலிக்ஸ் கைது
யூடியுபர் பெலிக்ஸ் கைது

அப்போது, யாரும் சற்றும் எதிர்பாராத திருப்பமாக யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு அருகே அதுவரை அமைதி காத்திருந்த பெண் போலீசார் “அம்மா, கம்ப்ளையிண்ட் கொடுத்ததே ஒரு லேடி டி.எஸ்.பி.தான். இந்த வீடியோ பார்த்ததற்கு அப்புறம், வீட்டுக்கு லேட்டா போனா என் வீட்டுக்காரர் யாரோட அட்ஜஸ்ட்மென்ட் செஞ்சிட்டு வர்றனு அசிங்கமா கேட்குறாரு.”னு ஏட்டம்மா எடுத்துவைக்க, ” இப்படி அசிங்கப்பட்டு இந்த வேலைக்கு போய்த்தான் ஆகனுமா?னு என் வீட்டுக்காரர் என்னை வேலைக்கே போகாதேன்னு சொல்றாரு. எங்களையெல்லாம் ரொம்பவே மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருச்சு”னு அருகிலிருந்த லேடி எஸ்.ஐ.யும் பேசியதையடுத்தே, அப்படி என்ன தான் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார், செக்சன் மேட்அவுட் ஆகிறதா என்று ஒருமுறை பார்த்துவிட்டு தீர்ப்பு சொல்கிறேன் என்பதாக வழக்கை சிறிது நேரத்திற்கு ஒத்திவைத்தார், நீதிபதி ஜெயப்பிரதா.

அப்போதே, மணி ஏழறையைத் தாண்டியிருந்தது. நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்புக்காக வந்திருந்த போலீசாரும் பத்திரிகையாளர்களுமாக கணிசமான கூட்டம் கூடியிருந்தது. இந்த வழக்கில் சட்டப்பிரிவுகள் 294 (ஆ), 353, 509, 67 ஐ.டி., பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச்சட்டப்பிரிவு 4 ஆகியன என்ன கூறுகிறது? அதற்கான தண்டனைகள் என்ன? இந்த சட்டப்பிரிவுகள் எல்லாம் இந்த வழக்கில் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு பொருந்துமா? என்பது போன்ற பிரதிவாதங்கள் நீதிமன்றத்திற்கு வெளியே காரசாரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

யூடியுபர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது
யூடியுபர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது

சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக காத்திருந்த நிலையில், ”மே-27 ஆம் தேதி வரையில் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடுகிறேன்” என்பதாக அறிவித்தார் நீதிபதி.

இதனையடுத்து, பலத்த போலீசு பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் யூடியூபர்பெலிக்ஸ் ஜெரால்டை நீதிமன்றக் காவலில் அடைத்தனர். இதற்கிடையில், யூடியூபர் ரெட்பிக்ஸ் ஜெரால்டு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.எஸ்.விக்னேஷ்வரனிடம் அங்குசம் சார்பில் பேசினோம். “சி.ஆர்.பி.சி. செக்சன் 57 இன்படி கைது செய்த 24 மணி நேரத்திற்குள்ளாக குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கவில்லை. அவ்வாறு தவறும் பட்சத்தில் மாற்று முறையான 167 பிரிவின் படியும் ஆர்டர் எதுவும் கொடுக்கவில்லை. இதனை முன்வைத்து இது சட்டவிரோதமான கைது நடவடிக்கை என்பதாக வாதங்களை முன்வைத்தோம். நீதிபதி நிராகரித்துவிட்டார். பெயில் பெட்டிசன் போட்டிருக்கிறோம். தனியாக மனு போட்டு 15 நிமிடம் அவருடன் பேசினேன். அப்போது, போலீசார் தன்னை கௌரவமாக நடத்தினார்கள். துன்புறுத்தவில்லை. காயங்கள் எதுவுமில்லை. நீண்டதூரம் உட்கார்ந்தபடி பயணம் செய்ததால் கால் வீங்கியிருக்கிறது. மற்றபடி எதுவுமில்லை.” என்பதாக சொன்னார்.

”சீக்கிரம் பிரஸ்மீட் வைக்கிறேன் . இந்தமுறை எனக்கு நிகழ்ந்தது தான் நாளை உங்களுக்கும் நடக்கும்; மற்ற பத்திரிகையாளர்களுக்கும் நடக்கும்” என்பதாக ஆவேசமாக அலறியபடியே, போலீஸ் வேனில் ஏறி திருச்சி மத்திய சிறைக்கு புறப்பட்டார், யூடியூபர்பெலிக்ஸ் ஜெரால்டு.

யூடியுபர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது
யூடியுபர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது

பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி, மகன், அவரது சகோதரி உள்ளிட்ட உறவினர்களும் சிறையில் அடைக்கப்படும் வரையில் உடனிருந்தனர். மிக முக்கியமாக, சென்னையிலிருந்து திருச்சிக்கு அழைத்து வந்தது முதல் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைப்பது வரையிலான பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட போலீசார் அனைவருமே, பெண் போலீசார்தான் என்பதுதான் இதில் ஹைலைட்டான விசயம்.

மிகச்சரியாக, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் சவுக்கு சங்கர் ஏராளமான சொத்துக்களை வளைத்துப் போட்டிருக்கிறார் என்ற தரவுகளும் வந்துசேர, வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த புகாரும் சேர்ந்திருக்கிறது. விஜிலென்ஸ் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். ஏற்கெனவே, சவுக்கு சங்கரை போலீசு காவலில் எடுத்து விசாரிக்க கோவை நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கும் நிலையில், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட ரெட்பிக்ஸ் பெலிக்ஸ் ஜெரால்டையும் போலீசு காவலில் எடுத்து விசாரிக்கப்போவதாக தெரிவிக்கிறார்கள், திருச்சி மாவட்ட போலீசார். பல்வேறு எதிர்பாரா திருப்பங்களுடன், பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் பயணித்துக் கொண்டிருக்கிறது, சவுக்கு சங்கர் – ரெட்பிக்ஸ் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு எதிரான வழக்கு!

ஆதிரன் –

படங்கள் – பிரபு

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.