மோசடிக் கதைகளும் … புயல் மழையும் பெருவெள்ளமும் கற்றுத்தரும் பாடங்களும் ! – Editorial (ஆசிரியர் தலையங்கம்)
மோசடிக் கதைகளும் … புயல் மழையும் பெருவெள்ளமும் கற்றுத்தரும் பாடங்களும் !
இது மோசடிகளின் காலம். திரும்பிய பக்கமெல்லாம் புதிது புதிதாக மோசடிக் கதைகளை கண்ணுற்று வருகிறோம். யு.பி.ஐ. மோசடி, டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பெயரில் மோசடி, இன்பாக்ஸில் வந்து விழுந்த மெசேஜை எடுத்து படித்த மாத்திரத்தில் பணம் திருடுபோகும் வகையிலான மோசடிகள் என டிஜிட்டல் மோசடிகள் அச்சுறுத்துகின்றன. நட்பு பட்டியலில் அல்லாமல், புதிய எண்களிலிருந்து வரும் அழைப்புகளைக்கூட ஒருவித சந்தேகத்துடனே அணுகும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். வாட்சப் வழியாகவும், முகநூல் கணக்குகள் வழியாகவும் நமது கணக்கை அப்படியே பிரதியெடுத்து, நாம் கோருவது போலவே நம் நண்பர்களிடமே பண உதவிகளை கேட்டு நடைபெறும் மோசடிகள் உண்மையில் கதிகலங்க வைக்கின்றன.
ஆண்ட்ராய்டு போனையும், முகநூல், டிவிட்டர், எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தள கணக்குகளையும் வைத்துக்கொண்டு தனிப்பட்ட முறையில் பாட்டுப்பாடி, சில நடன அசைவுகளை காட்டி வீடியோ பதிவுகள் போடுவதையோ, அதை ஒரு கூட்டம் ரசிப்பதையோ நாம் குறை சொல்வதற்கில்லை. இந்த சமூக வலைத்தள கணக்குகள் வழியே கிடைத்த பிரபல்யத்தை வைத்துக் கொண்டு, தெருவோரக் கடை தொடங்கி பிரம்மாண்டமான வணிக நிறுவனங்கள் வரையில் அவர்களின் தூதுவர்களாக மாறி ஆஹா, ஓஹோ வென்று புகழ்ந்து தள்ளி கருத்து கந்தசாமிகளாக அவதாரமெடுப்பதுதான் சிக்கலாகிறது.
இதுபோன்று சில யூடியூபர்கள் சிலாகித்து போட்ட வீடியோக்களை நம்பித்தான், திருச்சி பிரணவ் ஜூவல்லரியில் தங்க நகை சேமிப்புத் திட்டத்தில் சாமானிய மக்களும் வந்து விழுந்தார்கள். விட்டில் பூச்சியாய் சிக்கி இன்றுவரை மீள முடியாமல், சிக்கித் தவிக்கிறார்கள்.
ஆம்வே தொடங்கி அனுபவ் பிளான்டேஷன், சீட்டு கம்பெனி, குலுக்கல் கம்பெனி, ஈமு கோழி வளர்ப்பு, ஹெர்பா லைஃப், பியர்லஸ் என அடுத்தடுத்து பல மோசடிகளில் சிக்கி மக்கள் கம்பெனிக்கும் வீட்டுக்கும் அலையாய் அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையெல்லாம் அறிந்தும், சென்ட்ரியோ, நியோமேக்ஸ் போன்ற மோசடிக்காரர்களிடம் மீண்டும் சிக்குகிறார்கள்.
இவற்றுக்கெல்லாம், ”பேராசை” என்ற ஒற்றை சொல்தான் அடிநாதமாக இருந்து இயக்கி வருகிறது. கொரோனா காலமும், சமீபத்திய புயல் மழை வெள்ளமும் ”நிச்சயமற்ற வாழ்க்கை” பற்றிய பாடத்தை மீண்டும் மீண்டும் நமக்கு ஒரு விசயத்தை நெற்றி பொட்டில் அடித்தாற்போல உரைத்து வருகிறது. இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ கற்றுத்தருகிறது.
இதுபோன்ற மோசடிகளில் சிக்கி அல்லறும் மக்களின் துயரங்களை, மோசடிக்கதைகளை அங்குசம் தொடர்ந்து அம்பலமாக்கிவருகிறது. மக்களுக்கான செய்தி என்ற நோக்கிலான எமது இதழியல் பணி தொடரும். உங்களது ஊக்கமான ஆதரவோடு. அங்குசம் இதழோடு இணைந்திருங்கள் !
-Editorial (ஆசிரியர் தலையங்கம்)