ரியல் எஸ்டேட்காக நீர்நிலைகளை ஆக்கிரமிக்கும் மொராய்சிட்டி 7 பிரிவின் கீழ் வழக்கு பதிவு..
ரியல் எஸ்டேட்காக நீர்நிலைகளை ஆக்கிரமிக்கும் மொராய்சிட்டி 7 பிரிவின் கீழ் வழக்கு பதிவு..
திருச்சியை இரண்டாவது தலைநகரமாக மாற்றக் கூறியும், தலைமைச் செயலகத்தை திருச்சிக்கு கொண்டுவர வேண்டியும் அரசியல் புள்ளிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது கடந்த ஆட்சியிலேயே தொடர்ந்த பேச்சு வார்த்தையாக இருந்து வருகிறது.
இந்த செய்தியை கேட்டு திருச்சி விமான நிலைய பகுதியில் பெரும்பாலான விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட் மூலம் கூறுபோட்டு விற்க தொடங்கிவிட்டனர்.
திருச்சியை சேர்ந்த பெரிய முதலாளிகள். இதில் பெரும்பாலும் சென்னை தலைமைச் செயலகத்தை சேர்ந்த அரசு பணியாளர்கள் விமான நிலையத்தின் அருகில் நிலம் வாங்கிப் போடுவது வீடு கட்டுவது என தொடங்கி வருவதாக அப்பகுதியில் பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது.
ஒருபுறம் விமான நிலையம் விரிவாக்கம் செய்ய அரசு விவசாய நிலங்களை எடுத்துக்கொள்ள மற்றொருபுறம் ரியல் எஸ்டேட் மூலம் விவசாய நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன.
இந்நிலையில் திருச்சி விமான நிலையம் அருகே மொராய் சிட்டி அருகில் 3 ஏக்கர் விவசாய நிலத்தை வைத்து இரண்டாவது தலைமுறையாக விவசாயம் செய்து வருபவர் பொன்மலை திருநகரை சேர்ந்த பால் ஜெரால்ட் எட்வின் தா/பெ தாமஸ்.
இவருக்கு சமீப காலமாக இவருடைய 3 ஏக்கர் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் கொலை மிரட்டல் விடுவதும், தகராறில் ஈடுபடுவதுமாய் இருந்து வந்துள்ளார் மொராய் சிட்டி நிறுவனர் லேரோன் மொராய்.
மேலும் கடந்த 27/01/2021 அன்று மாலை 4 மணிக்கு வயலுக்கு சென்ற ஜெரால்ட் எட்வினை மொராய்சிட்டி நிறுவனர் லேரோன் மொராய் கொச்சை வார்த்தைகளில் திட்டி தன்னுடன் கூட இருந்த திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் மற்றும் இளைஞர் அணி பொறுப்பாளரான M.R.V மணிகண்டன் மற்றும் அவரது கூட்டாளிகளிடம் வெட்டி போடுங்கடா என்று கூறியுள்ளார்.
அதன்மூலம் அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களால் துரத்திய அக்கும்பல் பால் ஜெரால்ட் எட்வின் ஐ சரமாரியாக வெட்டி தாக்கியுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த அவரை மொராய் சிட்டி வெல்பர் அசோஷியேஷன் தலைவரான ஜெயராஜ் அவசர உதவி 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்து பால் ஜெரால்ட் எட்வின் மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டார்.
இதுதொடர்பாக
திருவெறும்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் ஆய்வாளர் ஞானவேல் மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்ட பால் ஜெரால்ட் எட்வின் புகாரினை ஏற்று விசாரணை தொடங்கி விசாரணை பேரில்
மொராய் சிட்டி நிறுவனர் லேரோன் மொராய் மற்றும் அதிமுக பிரமுகர் மணிகண்டன் மற்றும் சிலர் மீது 28/1/21 அன்று கொலை வழக்கு உட்பட 7 பிரிவின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது.
ஆனால் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பந்தப்பட்ட நபர்கள் யாரையும் அழைத்து விசாரிக்கவில்லை.. ஒரு கண்துடைப்பு வேலையாக எப்ஐஆர் பதிவு செய்து வழக்கினை மூடி மறைத்து உள்ளதாக குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.
இந்நிலையில் கடந்த 2/7/2021 அன்று மொராய் சிட்டியில் உள்ள தனது நிலத்தை பார்வையிட பால் ஜெரால்ட் எட்வின் சென்றபோது ஆயுதங்களை காட்டி என்னைக்கு இருந்தாலும் உன் சாவு என் கையில் தான் என்று மிரட்டும் தோரணையில் மொராய் சிட்டி நிறுவனர் லேரோன் மொராய்ஸ் கூறியுள்ளார். மேலும் அருகில் இருந்த அதிமுக பிரமுகர் MRV மணிகண்டன் கொச்சை வார்த்தைகளில் பேசி திட்டியுள்ளார். இதனால் பயந்துபோய் சம்பவ இடத்திலிருந்து தப்பித்து வந்து திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் தந்துள்ளார். ஆனால் வழக்கம்போல் போலீசார் புகாரினை ஏற்காமல் சுத்தலில் விட்டுள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பால் ஜெரால்ட் எட்வின் மத்திய மண்டல ஐஜி சந்தித்து புகார் அளித்துள்ளார் அதன் அடிப்படையில் மத்திய மண்டல ஐஜி சம்பந்தப்பட்ட புகாரினை ஏற்று திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டி கூறியுள்ளார் அதன்பேரில் மீண்டும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது 7 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பால் ஜெரால்ட் எட்வினை நாம் தொடர்புகொண்டு அங்குசம் செய்திக்காக பேசியபோது..
ரொம்ப நாட்களாக என்னுடைய பரம்பரை சொத்தான விவசாய நிலத்தை விலைக்கு கேட்டு வந்தார். மொராய் சிட்டி நிறுவனர் லேரோன் மொராய்.
அதனை நான் மறுக்கவே என்னிடம் தேவையில்லாமல் பிரச்சனையை சமீபகாலமாக கிளப்பி வந்தார். இதற்கு நான் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தாசில்தார் மூலம் நிலத்தை அளந்து அதற்கு வழிவகை தேடினேன். ஆனால் வரும் அதிகாரிகளை எல்லாம் மதிக்காமல் பேசி அனுப்பி விடுகிறார் இல்லையெனில் சில அதிகாரிகளை கையில் போட்டுக்கொண்டு இதுதொடர்பாக எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது என்று பணத்தை வாயில் வைத்துவிடுகிறார்.
விவசாய பாசனத்திற்காக ஓடும் வாய்க்கால்களை மூடி விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாமல் பல வயல்கள் காய்ந்து போய் கிடக்கின்றன. இப்படி அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களை அபகரிக்க தொல்லைகளைக் கொடுத்து வருவதுடன் அரசு மூலம் ஓடும் கால்வாய்களையும் மூடி சுவர் எழுப்பி உள்ளார்.
கலெக்டர், தாசில்தார், காவல்துறை என்ற அனைவருக்கும் புகார் கொடுத்தும் சம்பந்தப்பட்ட நபர் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
வந்து பார்க்கும் அதிகாரிகள் எல்லாம் அவர் செய்திருப்பது தப்பு என்று தெரிந்தும் அமைதியாக செல்கின்றனர்.
தற்போது திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் தந்துள்ளேன் இதற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் சம்பந்தப்பட்ட நபர்களிடம் வாங்குவதை வாங்கிக்கொண்டு பேசுவதை பேசிக் கொண்டும் சமரசமாக இருந்து வருகின்றனர்
நான் எனது விவசாய நிலத்திற்காக போராடுகிறேன் என்னை காப்பாற்ற வேண்டிய பாதுகாக்க வேண்டிய அதிகாரிகள் எனக்கு எந்தவித தீர்வும் வழங்காமல் இருந்து வருகின்றனர் என்றார்.
இதே போன்று அதே பகுதயில் மைக்கில் என்பவரின் நிலங்களையும் மோசடியாக அபகரித்து விட்டார் என்கிற குற்றச்சாட்டும். மொராய்சிட்டியில் உள்ளே ஏரி குளங்களுக்கு செல்லும் நீர் குழுளிகளை அடைத்துவிட்டார் என்கிற குற்றசாட்டும் வலம் வந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.
–ஜித்தன்