2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் “நாம் தமிழர் கட்சி போட்டியிடாது” சீமான் கருத்தும் – நோக்கமும்

- ஆதவன்

0

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் “நாம் தமிழர் கட்சி போட்டியிடாது” சீமான் கருத்தும் – நோக்கமும்

 

2010இல் தொடங்கப்பட்ட நாம் தமிழர், கட்சி கடந்த 2016, 2021 சட்டமன்றத் தேர்தல்களிலும் 2019 நாடாளுமன்றத் தேர்தல்களில் மட்டுமே போட்டியிட்டு ஒரு இடத்தைக்கூட பெறமுடியாமல் தோல்வியைச் சந்தித்தது. 2011 சட்டமன்றத் தேர்தலிலும் 2014 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடவில்லை. இடையில் நடந்த ஊராக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் பங்கெடுத்தது.

2 dhanalakshmi joseph

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சுமார் 30 இலட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சி தேர்தலில் போட்டியிடுவது என்ற முடிவை எடுத்தபோது தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உறுதியான குரலில்,“நாம் தமிழர் கட்சி யாரோடும் எப்போதும் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்திக்காது. தனித்தே போட்டியிடும்.

- Advertisement -

- Advertisement -

மக்களை எங்களை ஒருநாள் தேர்ந்தெடுப்பார்கள். அதுவரை எங்கள் தனித்தன்மையைப் பாதுகாத்து தேர்தலில் போட்டியிடுவோம். தனித்தன்மையை இழந்து யாருடனும் கூட்டணியை ஒருபோதும் வைக்கமாட்டோம்” என்று தமிழக அரசியல் களத்தில் தோல்விகளை நெஞ்சில் ஏந்தி, வீரத்தோடு வலம் வருகிறார் என்றால் அது மிகையில்லா, ஒப்பனையில்லா உண்மை கூற்றாகும்.

கடந்த 30.10.2021 ஒரு வார இதழுக்கு பேட்டி அளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,“திமுக, திரிணமூல் காங்கிரஸ் போன்ற மாநிலக் கட்சிகள் ஒருங்கிணைந்து (காங்கிரஸ், பாஜக போன்ற தேசியக் கட்சிகளைத் தவிர்த்து) 2024ஆம் ஆண்டு நடைபெறவிரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டால், அந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடாது. மாநிலக் கட்சிகளின் கூட்டணியை ஆதரிப்பேன். 2026ஆம் ஆண்டு நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி களமாடும்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து திராவிட கட்சிகளில் குறிப்பாக திமுகவைக் கடுமையாகத் தாக்கிப் பேசிவரும் சீமானின் இந்த கருத்து அரசியல் அரங்கில் பெரும் வியப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடக்க இன்னும் 2 ஆண்டுகள் முழுமையாக உள்ள நிலையில் சீமானின் கருத்து ‘அரசியல் முதிர்ச்சியின் வெளிப்பாடா’ அல்லது அரசியல் உள்நோக்கம் கொண்டதா? என்பதை பல அரசியல் இயக்கங்களும் ஆராய்ந்து வருகின்றன. திமுக சீமானின் இந்தக் கருத்துக்கு உடன் எதிர்வினையாற்றாது அமைதியாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.

2019 மக்களவைத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக இருந்த தங்கத்தமிழ்ச்செல்வன் (தற்போது திமுகவில் உள்ளார்) தொலைக்காட்சியின் விவாத அரங்கில் ஒரு கருத்தை வெளியிட்டார். “இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல். மத்தியில் மீண்டும் பாஜக வந்துவிடக்கூடாது. தமிழ்நாடு ஒற்றுமையாக இருந்து இந்தத் தேர்தலைச் சந்திக்கவேண்டும்.

எப்படியென்றால், கட்சி வேறுபாடுகளைக் கடந்து, அறிவு சார்ந்த சான்றோர்கள் அனைத்துத் தொகுதிகளிலும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட வேண்டும். பாஜகவின் ஆதரவு கட்சியான அதிமுகவை முழுமையாகத் தோற்கடிக்க வேண்டும். இதற்கு எங்கள் கட்சியான அமமுக பொதுவேட்பாளர்களுக்கு ஆதரவு தரும்” என்று கூறினார். தமிழ்நாட்டில் எந்தக் கட்சியும் தங்கத்தமிழ்ச்செல்வன் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. மாறாக, “அமமுக மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றிபெறமுடியாது என்பதை உணர்ந்தே தங்கத் தமிழ்ச்செல்வன் இக் கருத்தை வெளியிடுகிறார்” என்று பேசப்பட்டது. அரசியல் களத்தில் மக்களவைக்குப் போட்டியிட்டு அனைத்துத் தொகுதியிலும் அமமுக தோல்வியைத் தழுவியது. என்றாலும் தங்கத்தமிழ்ச்செல்வன் கருத்து புறந்தள்ளவேண்டிய கருத்தில்லை என்று சில சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.

4 bismi svs

2019இல் தங்கத்தமிழ்ச்செல்வன் தெரிவித்த கருத்துப் போலவே, சீமான் தற்போது.“தேசியக் கட்சிகளோடு கூட்டணி வைத்து தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் வந்துவிடவில்லை. மாநிலக் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வென்றால் உண்மையான கூட்டாட்சி இந்தியாவில் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அமையும்” என்ற ரீதியில் கருத்து தெரிவித்துள்ளார். சீமான் இக் கருத்தை மிகவும் எச்சரிக்கையாகவும் வெளியிட்டுள்ளார். காரணம் திமுக, திரிணமூல் காங்கிரஸ் போன்ற மாநிலக் கட்சிகள் என்றுதான் குறிப்பிட்டுள்ளாரே தவிர, இதில் அதிமுகவை இணைக்கவில்லை என்பதையும் பார்க்கவேண்டியுள்ளது. திமுக, திரிணமூல் காங்கிரஸ் மாநிலக் கட்சிகள் இணைந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டால், நான் ஆதரிப்பேன் என்றுதான் கூறியுள்ளரே தவிர, மாநிலக் கட்சிகளின் கூட்டணியில் நாம் தமிழர் இணைந்து தமிழ்நாட்டில் போட்டியிடும் என்று கூறவில்லை என்பதையும் பார்க்கவேண்டியுள்ளது. இந்தக் கருத்தில் சீமான் தன்னுடைய தனித்தன்மை இழக்காமலும், பாஜகவைத் தோற்கடிக்கவேண்டும் என்றும் இந்தியாவில் உண்மையான கூட்டாட்சி ஏற்படுவதற்கான முன்னெடுப்பை எடுத்துள்ளார் என்றே பார்க்கவேண்டியுள்ளது.

RahulGandhi_Jothimani

2024 மக்களவைத் தேர்தல் குறித்து கூறிய கருத்துக்கு டிவிட்டரில், கரூர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஜோதிமணி,“சீமான் தங்களின் முதலாளிகள் சொல்லிக் கொடுத்தபடி பேசியிருக்கிறார். தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியைத் தனிமைப்படுத்தவேண்டும் என்ற பாஜகவின் எண்ணத்தையே சீமான் வெளிப்படுத்தியுள்ளார். தேசிய அளவில் 3ஆவது அணி அமைந்தால், அது பாஜகவின் வெற்றியை எளிதாக்கிவிடும் என்ற பார்முலாவின் அடிப்படையில்தான் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்” என்று சீமானைக் கடுமையாகச் சாடியுள்ளார். மேலும், சீமான் தெரிவிக்கும் பல கருத்துகள் RSS இயக்கத்தின் சாயல் கொண்ட கருத்துகளாகவே இருக்கின்றன. இவர் பேசுகின்ற இனத் தூய்மை வாதத்திற்கும் இந்துத்துவத்திற்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை” என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

மதிமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஒருவர் சீமான் கருத்து தொடர்பாக, அங்குசம் செய்தி – இதழிடம் பேசும்போது,“சீமான் கருத்து வெளிப்படையாக பார்த்தால் நல்ல சிந்தனையோட்டமிக்க கருத்துதான். தேசிய கட்சிகளால் தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் இல்லை. 1976-இல் மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி, ஒன்றிய அரசின் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது.

திமுக காங்கிரஸ் ஆட்சியில் இருமுறை பங்குவகித்தும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றமுடியவில்லை. காவிரி நீர் பிரச்சனையில் தேசிய கட்சிகள் நடுநிலை என்று பேசிக்கொண்டு, கர்நாடக அரசுக்கே ஆதரவு தெரிவித்து வருகின்றன. மொழிப் பிரச்சனையில் குறிப்பாக இந்தி மொழித் திணிப்பில் தேசிய கட்சிகளின் நிலைப்பாடு ஒன்றாகவே உள்ளன. உயர்சாதியில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்பட்ட 10% இடஒதுக்கீட்டை எல்லா தேசியக் கட்சிகளும் ஆதரித்தன (வலது கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர) வட மாநிலங்களில் உள்ள மாநிலக் கட்சிகளும் ஆதரித்தன.

ஆனால் தமிழ்நாட்டில் எதிரும் புதிருமாக உள்ள திராவிடக் கட்சிகளான திமுகவும் அதிமுகவும் 10% இடஒதுக்கீட்டை ஒன்று சேர்ந்து எதிர்த்து வருகின்றன. மாநிலக் கட்சிகள் இணைந்து போட்டியிட்டால் ஆதரிப்பேன் என்று சொல்லும் சீமான், அந்தக் கூட்டணியில் போட்டியிட மாட்டேன் என்று சொல்வதன் மூலம் சீமானுக்கு உள்நோக்கம் இருக்கலாம் என்று ஐயப்பட வேண்டியுள்ளது. ஓட்டு அரசியல் கட்சியான நாம் தமிழர் 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிடாது என்பதில் 3ஆவது அணியை சீமான் உருவாக்கி பாஜகவின் வெற்றிக்கு வழிவகை செய்கிறாரோ என்ற ஐயம் எழுவது தவிர்க்கமுடியாதது” என்று கூறினார்.

தேசியக் கட்சிகளைத் தவிர்த்து, மாநிலக் கட்சிகள் ஒன்றிணைந்து மக்களவை தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால், இந்தியா முழுவதும் உள்ள மாநில கட்சிகளை 2 ஆண்டுகளில் ஒருங்கிணைப்பது யார்? ஒருங்கிணைய வேண்டும் என்று விரும்பும் சீமான் அவர்களால் செய்துமுடிக்கக்கூடிய செயலா? என்ற கேள்வியும் எழுகிறது. இந்தியாவின் பெரிய மாநிலங்களில், தமிழ்நாட்டில் திமுக, ஆந்திராவில் தெலுங்குதேசம், தெலங்கனாவில் சந்திரசேகர ராவ்-வின் டிஎஸ்ஆர் கட்சி, தில்லியில் ஆம்ஆத்மி, உபியில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, பீகாரில் லாலு கட்சி, ஒரிசாவில் பிஜூ ஜனதாதளம், அசாமில் அசாம் கணபரிஷத், மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் மேலும் கிழக்கு பகுதியில் பல சிறிய மாநில கட்சிகள் உள்ளன. இவற்றை ஒருங்கிணைக்கும் பணி நெருக்கடி மிகுந்த சவால் நிறைந்தது. ஒரு பழமொழியில் சொல்வது என்றால் “யானைக்கு வேட்டி கட்டிவிடுவது போன்றது”தான். அரசியல் தொடங்கி 10 ஆண்டுகளைத்தான் நாம் தமிழர் கட்சி நிறைவு செய்துள்ளது. இன்னும் அரசியல் களத்தில் சீமான் முதிர்ச்சி பெற்ற அரசியல் தலைவராக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

சீமானை ஒரு நகைச்சுவைப் பேச்சாளர் என்ற வகையில்தான் மக்கள் இரசித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், மக்களவைத் தேர்தலுக்கு 2 வருடம் முழுமையாக இருக்கும் நிலையில், மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் மாபெரும் திட்டத்திற்கு எந்த செயலாக்க வரையறைகளையும் அறிவிக்காமல் சீமான் தெரிவித்திருக்கும் கருத்து பாஜகவின் வெற்றிக்கு உதவும் உள்நோக்கம் கொண்டதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். சீமானுக்கு உள்நோக்கம் இல்லை என்றால் இந்தியா முழுவதும் உள்ள பாஜகவை எதிர்க்கும் மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிக்கு என்ன செயல்திட்டம் வைத்திருக்கிறார் என்பதைத் தெளிவுபடுத்தவேண்டும்.

சீமான் தெளிவுபடுத்துவரா? அல்லது வழக்கம்போல் புஹா……ஹா….. ஹா… என்று சிரித்துவிட்டு செல்வரா? சீமானுக்குக் காலம் இருக்கிறது. காத்திருப்போம்.

– ஆதவன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.