புதுக்கோட்டையில் ஒரு தமிழ்க்கோட்டை !

0

புதுக்கோட்டையில் ஒரு தமிழ்க்கோட்டை!

தமிழ்நாட்டில் வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரங்களில் ஒன்று, புதுக்கோட்டை. மன்னர்கள் ஆட்சிக் காலத்திலும் சரி, மக்கள் ஆட்சிக் காலத்திலும் சரி, புதுக்கோட்டை நகரின் மகத்துவம் கூடிக் கொண்டே தான் இருக்கின்றது. அவ்வளவு ஏன்? சங்க இலக்கியங்களிலும் புதுக்கோட்டை நகரம் சார்ந்த சுற்றுப்புற பகுதிகளின் சிறப்புகள் குறிப்புகளாக இடம் பெற்றுள்ளன. மகாகவி பாரதியின் நூற்றி நாற்பத்தி ஒன்றாவது பிறந்த நாளினை முன்னிட்டு 2023 டிசம்பர் 11ல், “புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம்” என்கிற அமைப்பு புதிதாக உருவாக்கி, புதுக்கோட்டை நகருக்கு மகுடமாக சூட்டப்பட்டுள்ளது.

https://businesstrichy.com/the-royal-mahal/

2023 டிசம்பர் 11 செவ்வாய்க்கிழமை அன்று புதுக்கோட்டை தமிழ்ச் சங்கத்தினைத் தொடங்கி வைத்தார், தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி. செயலாளர் முனைவர் மகாசுந்தர். மற்றும் சிகரம் சதீஷ்குமார், கவி முருகபாரதி. பேரா.சு.முத்தழகன் ஆகியோர் துணைத் தலைவர்கள். புதுக்கோட்டையின் பல பகுதிகளில் இருந்தும் பள்ளிச் சிறுவர் சிறுமியர் நூற்றி நாற்பத்தி ஒருவர் என அவர்கள் ஒவ்வொருவரும், ஒரே மாதிரியாக பாரதியார் உருவத்தில் வந்திருந்து விழாவினைச் சிறப்பித்தனர்.


சுதந்திரம் பெறுவதற்கு முன்பாக மன்னராட்சிக் காலங்களில் தென்னிந்திய அளவில் சிறப்பு மிக்கவை களில் ஒன்று, புதுக்கோட்டை சமஸ்தானம். அரண்மனைகள், கோட்டைக் கொத்தளங்கள், குகை ஓவியங்கள் மற்றும் பல வரலாற்றுச் சின்னங்களைத் தன்னகத்தே உள்ளடக்கியது புதுக்கோட்டை. அரண்மனைகள் கோட்டைகள் மட்டுமல்லாது கால்வாய்கள், குளங்கள், ஏரிகள் கட்டமைக்கப்பட்டதும் அந்த மன்னர்கள் காலத்தில் தான். இப்போதும் அதற்கு நேரடி சாட்சியாக “பெருமகளுர் ஏரி” இருந்து வருகிறது. அந்தப் பெருமகளுர் ஏரி உருவானதே தனி வரலாறு.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

பல எழுத்தாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் தங்களது சொந்த மண்ணாகக் கொண்டதும் புதுக்கோட்டையே. அகில இந்திய அளவில் இலக்கியத்துக்கென மிக உயர்ந்த விருதான “ஞான பீட” விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் அகிலன் ஊர் புதுக்கோட்டை. எழுத்தாளர் கந்தர்வன் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஊர். பிரபல திரைப்படப் பாடலாசிரியர் அமரர் கு,சா. கிருஷ்ணமூர்த்தி பிறந்த ஊர். அவ்வளவு ஏன்?

நிகழ் காலத்திலும் பல ஆண்டுகளாக வரலாற்றுச் சிறப்பு மிக்க நூலகம் ஒன்றினை அமைத்து தொடர்ந்து தொய்வின்றி இயங்கி வரும் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி – டோரதி தம்பதியினர் வசித்து வருவதும் இங்கு தான். கவிஞர் பாலா உட்பட சிறுகதை எழுத்தின் கனவு நாயகன் சுரேஷ் மான்யா வரைக்குமாக எண்ணற்ற படைப்பாளிகளின் காதல் மிகுந்த நகரம் தான் இந்தப் புதுக்கோட்டை. சரி. புதிதாய் உதயமாகி இருக்கும் புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்துக்கு நாம் வந்து விடுவோம். புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத் தின் செயல்பாடுகள் தான் இனி என்னென்ன…???

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

“இது எங்களின் நெடுங்கால கனவு. காரணம் தமிழ்நாட்டில் பல நகரங்களில் பலப்பல ஆண்டுகளாகவே ஆங்காங்கு தமிழ்ச் சங்கங்கள் இயங்கி வந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டுக்கு வெளியேயும் பல மாநிலங்களிலும் பல நகரங்களிலும், இந்தியாவின் தலைநகரம் டெல்லியில் கூட தமிழ்ச் சங்கம் இயங்கி வருகிறது. இந்த நிலையில் எங்கள் பூர்விக மண்ணான புதுக்கோட்டையில் ஒரு வெற்றிடம் நிலவுவதை புதுக்கோட்டை வாழ் தமிழ் உணர்வாளர்கள் அனைவருமே உணர்ந்தோம். அந்த ஒன்றுபட்ட உணர்வின் வெளிப்பாடு தான், இந்தப் புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம்.” என்கிறார் அதன் தலைவரான கவிஞர் தங்கம் மூர்த்தி.

விழாவினில் “நான் சந்தித்த மனிதர் களில் கவிஞர் தங்கம் மூர்த்தி” என்கிற தலைப்பினில் பா. வெங்கடேசன் எழுதிய நூலினை வெளியிட்டுப் பேசுகையில், “மகாகவி பிறந்த நாளினில் புதுக்கோட்டையில் புதிதாக ஒரு தமிழ்ச் சங்கம் தொடங்கப்படுவது மிக மிகச் சிறப்பானதாகும். அதனையும் நான் வந்து தொடங்கி வைப்பதில் உள்ளபடியே முதலில் எனக்கு ரொம்பவும் மன நிறைவு. என் மனதிலே அத்தனை மகிழ்ச்சி. நம் தமிழ் மொழி வளர்ச்சியில் நமது திராவிட இயக்கங்களின் பங்களிப்பு மிகவும் மகத்தானது. மறுக்கவே முடியாதது. பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் காலந்தொட்டு தளபதி முதல்வர் ஸ்டாலின் உட்பட நம் அனைவர்க்குமே மகாகவி பாரதியார் மீது மிகுந்த ஈர்ப்பும் மதிப்பும் மரியாதையும் என்றென்றும் உண்டு.” எனக் குறிப்பிட்டார் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

“புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தில் இனி மாதந்தோறும், சொற்பொழிவுடன் கூடிய ஒரு அரங்குக் கூட்டம் நடத்திட எண்ணியுள்ளோம். ஒவ்வொரு ஆண்டிலும் மகாகவி பாரதி பிறந்த நாளினை முன்னிட்டு, ஆண்டுச் சிறப்புக் கூட்டம் ஒன்றும் கூடுதல் நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடத்திடத் திட்டமிட்டுள்ளோம். அதுவொரு முக்கிய நிகழ்ச்சியாகவும் பெரிய விழாவாகவும் அமைந்திடும் என நம்புகிறோம்.” என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் புதுக்கோட்டைத் தமிழ்ச் சந்தத்தின் செயலாளர் முனைவர் மகா சுந்தர். “ஒவ்வொரு ஆண்டிலும் ஆண்டுச் சிறப்புக் கூட்டம் ஒன்றில், படைப்பாளிகளுக்கு விருதுகளும் ரொக்கப் பரிசுகளும் தந்திடத் திட்டமிட்டுள்ளோம்.

சிறந்த படைப்புகளுக்கு அதன் படைப்பாளிகளுக்கு விருதும் ரொக்கப் பரிசும், தமிழ் மொழி வளர்ச்சிக்கெனத் தன் வாழ்நாளினை அர்ப்பணித்துள்ளவர்க்கு, மொழியியல் மேம்பாட்டுக்கென மொழி பெயர்ப்பாளர்க்கு, மொழி வளர்ச்சியினை முன்னெடுத்துச் செல்பவர்களுக்கு எனவும் விருதுகளும், அவர்களுக்கு ரொக்கப் பரிசுகளும் தந்திடத் திட்டமிட்டுள்ளோம். அந்த ஆண்டு விழாவினில் சுமார் ஐந்து லட்ச ரூபாய் அளவிலான ரொக்கப் பரிசுகளைத் தந்து மகிழ்விக்க எண்ணியுள்ளோம்.” என்று பெருமிதத்துடன் சொல்கிறார் புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி.

– ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.