“எழுத்து ஆத்மார்த்தமானது; எழுத்தாளர்களின் வாழ்வு பூரணத்துவமானது!” – பேராசிரியர் முனைவர் ஜா.சலேத்

0

“எழுத்து ஆத்மார்த்தமானது; எழுத்தாளர்களின் வாழ்வு பூரணத்துவமானது!” தேனி கல்லூரி விழாவில் செயின்ட் ஜோசப் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் ஜா.சலேத் புகழாரம்

தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லூரியில் சங்கநாதம் தமிழ் இலக்கிய மன்றத் தொடக்கவிழா, படைப்பிலக்கியப் பயிற்சிப்பட்டறை, நூல் வெளியீட்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழாவை தமிழ்த்துறை நடத்தியது. தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ப.ரதிதேவி வரவேற்புரை நிகழ்த்தினார்.

தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் இணைந்து உருவாக்கியுள்ள இளநிலை வகுப்புகளுக்கும் பொதுத்தமிழ்ப் பாடநூலை தேனி கம்மவார் சங்கத் தலைவர் சு.நம்பெருமாள்சாமி வெளியிட்டு தொடக்கவுரை நிகழ்த்தினார். சங்கப் பொருளாளர் ரெங்கராஜ் சிறப்பு விருந்தினரைச் சிறப்பு செய்தார். கல்லூரி முதல்வர் முனைவர் சீனிவாசன் நிகழ்வைக் தொடங்கி வைத்துத் தலைமையுரையாற்றினார். கல்வியியல் கல்லூரி செயலர், முதல்வர், கலை அறிவியல் கல்லூரிப் பொருளாளர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

படைப்பிலக்கியப் பயிற்சிப்பட்டறை
படைப்பிலக்கியப் பயிற்சிப்பட்டறை

- Advertisement -

4 bismi svs

முப்பெரும் விழாவிற்கு சிறப்பு விருந்தினராகவும் ஒருநாள் எழுத்தாற்றல் பயிற்சிப் பட்டறை பயிற்சியாளராகவும் தொடக்க விழாவில் பங்கேற்ற திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஜா.சலேத் வாசிப்பு, படைப்பு, விமர்சனம் என்கிற பொருண்மையில் சிறப்புரையாற்றினார். அவர் தம் சிறப்புரையில், இந்த பிரபஞ்சத்தில் எண்ணற்ற கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துள்ளன.

ஆனால் என்னைப் பொறுத்தவரை இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்புகளில் தலைசிறந்த கண்டுபிடிப்பு எது தெரியுமா? சம காலத்தில் நடைபெறும் நிகழ்வுகளை எழுத்தாக பதிவு செய்ய முடியும் என்பதே ஆகும். காரணம் வரலாற்றின் நெடுகிலும் நடந்த நிகழ்வுகளை இலக்கியங்களாக, கல்வெட்டுக்களாக, செப்பேடுகளாக எழுதிவைத்து நமது வரலாறை நமக்குத் தந்தது எழுத்து.‌ கல்லில், மரத்தில், தாழை மடலில், ஓலைச்சுவடிகளில், செப்புப்ட்டயங்களில் என தமிழர்களின் வீரமும் காதலும் நம்மிடம் இருப்பதற்கு எழுத்தே அடிப்படை. எழுத்து ஆத்மார்த்தமானது; எழுத்தாளர்களின் வாழ்வு பூரணத்துவமானது. எழுத்தாளராக மாறுவதற்கு அடிப்படை இரண்டு.‌தொடர்ந்து வாசிக்க வேண்டும், தம் எழுத்து குறித்து வருகிற விமர்சனத்தைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும் உள்ளிட்ட பல கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.‌

தொடர்ந்து தமிழ்துறை மாணவ மாணவியருக்கு ஒருநாள் படைப்பிலக்கியப் பயிற்சிப்பட்டறை நடைபெற்றது. துணுக்கு, உரையாடல், நகைச்சுவை, அனுபவம், செய்தி எழுதுதல், கவிதை எழுதுதல் உள்ளிட்ட படைப்புகளை எழுத பயிற்சி வழங்கப்பட்டது. மாணவர்களின் படைப்புகள் தொகுக்கப்பட்டு சிறு இதழாக வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் தாழைச்செல்வி நன்றியுரையாற்றினார்.
துறைத்தலைவர் ரதி தேவி மற்றும் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் சிறப்பாக பயிலரங்கம் ஒருங்கிணைத்திருந்தனர்.

– ஜெப்பர்சன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.