செயல் புயல் ஜெயலலிதா…
அண்ணா, எம்.ஜி.ஆர் மரணங்களை செய்தியாக மட்டுமே கேட்டறிந்த இன்றைய தலைமுறைக்கு ஜெயலலிதா மரணம் நம் கண்முன்னே நிகழ்ந்து விட்டது. ஜெ.வின் மரணம் வீழ்ந்தாரா? வீழ்த்தப்பட்டாரா? என்ற நுண்ணறிவு அரசியலுக்குள் செல்லவேண்டிய தருணம் இதுவல்ல. ஜெ.வின் சாதனை அவரின் ஆளுமைப் பண்புகள், பெண்ணாய் அவர் சாதித்த உயரங்கள், உச்சங்கள் பாராட்டுபவைக்குத் தகுதியானவையே.
இன்றைய இளம் தலைமுறைக்கு ஜெ.வின் கடந்த ஆறாண்டு கால ஆட்சிப்பற்றி மட்டுமே புரியும் தெரியும். அவரின் ஆரம்ப கால ஆட்சியும், அவர் புரிந்த சில அரசியல் எதிரிகள் மீது நடத்திய உச்சகட்ட அரசியலும் வரலாற்றில் என்றுமே அவருக்கு சரியான பெயரைப் பதிவு செய்யாது.
பெண் முன்னேற்றம், பெண் குழந்தை வளர்ச்சி, தொட்டில் குழந்தை, சட்டம் ஒழுங்கு, விட்டுக் கொடுக்காத மாநில உரிமைகள், அம்மா உணவகங்கள் என புதுப்பாதையில் புதுத் திட்டங்களில் செயல் புயலாய் பொதுவெளியில் பயணித்தவர்.
தன் அகவாழ்வை மர்மம் நிறைந்ததாய் மாற்றிக் கொண்டார்.
தனக்கென குடும்பம் இல்லாத தனிப்பெண் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைசென்றது புரியாத புதிரல்ல. தவ வாழ்வு வாழ்கிறேன் என்று சொன்னவர் ஆடம்பரக் கூட்டத்தை தன்னையும் அறியாமல் அரவணைத்தது அவரின் ஆளுமையின் சறுக்கலே. கண்ணுக்கு எட்டிய தூரம் எதிரிகளே இல்லை என்று சொன்னவர் தன் இமைகளே தனக்கு எதிரி என்று உணர மறுத்தது அவரின் உளவுத்துறை தோற்றுப்போக காரணம்.
நடிகையாய், நடிப்புத் துறையில் சாதித்ததால் அல்லவோ அவரால் உண்மையான நடிப்பறியா அன்பை உணர்ந்து கொள்ளவே முடியவில்லை. சாட்சி அவரின் பூத உடல் கிடத்தப்பட்டிருந்த ராஜாஜி மண்டபத்தில் அவரை சூழ்ந்து நின்ற நட்பு வட்டமும், முகம் பார்த்துத் துடித்த லட்சக்கணக்கான தொண்டர்களின் அழுகையுமே. ஜெயலலிதா பெண் என்னும் வரலாறு தமிழகத்தின் அரை நூற்றாண்டு தலையெழுத்தை மாற்றி எழுதியதை யாராலும் மறுக்க முடியாது.
எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட கட்சி ஜெயலலிதாவால் விஸ்வரூபமாக வளர்த்தெடுக்கப்பட்ட கட்சி இருபெரும் ஆளுமையும் இல்லாமல் எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்ற கேள்விகள் நிறைந்த தருணத்தில் ஒரு சிறந்த தலைவன் தனக்குப் பின்பு ஒரு சிறந்த தலைமையை உருவாக்காமல் போவது அந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடைக்கல்லாய் மாறும் என்பது ஜெயலலிதாவுக்கும் பொருந்தி விட்டது.
எந்த சமூகத்தை எதிர்த்து திராவிட இயக்கங்கள் வளர்ந்து எழுந்ததோ அந்த சமூகத்தின் பிம்பமே, திராவிடத்தை தாங்கிய கட்சிக்குத் தலைவராய் அமைந்தது வரலாற்று முரண். ஆனால் திராவிடக் கொள்கையில் பின்வாங்காத அரசியலில் ஜெயலலிதா ஜெயித்து விட்டார் என்றே சொல்லலாம். குருவை மிஞ்சிய சிஷ்யனாய் தமிழ் உள்ளவரை அவர் புகழும் நிலைத்து நிற்கும். முதல்வர் ஜெயலலிதா என்னும் பெண் செயல் புயல்
– ஆசிரியர்