திருவக்கரை அருகில் பார்த்து வியந்த படிமப் பாறைகள்!

0

புதுச்சேரியில் இருந்து திருவக்கரையில் உள்ள வக்கிரகாளி கோயிலுக்கு அடிக்கடி செல்வதுண்டு. சிறு வயதில் வக்கிரகாளியின் கதையை என் அம்மா சொல்லக் கேட்டு மெய்சிலிர்த்துப் போயிருக்கிறேன். அப்போதிருந்தே திருவக்கரை காளியின் மீதும், காளிக்கு அருகில் உள்ள நந்தியின் மீதும் ஒரு ஈர்ப்பு உண்டு.நானும் என் தோழியும் தோழியின் நண்பர்களும் திருவக்கரை கோயிலுக்கு செல்லத் திட்டமிட்டோம். போகும் வழியில், திருவக்கரை அருகில் ஒரு அருமையான இடம் இருக்கிறது. போகலாமா உங்களுக்கும் பிடிக்கும் என்றேன். சரி என்று மூவரும் ஒப்புதல் கொடுத்ததால் முதலில் கோயிலுக்குச் செல்லாமல் அந்த அழகான இடத்தைக் காணச் சென்றோம்.

காளி கோயிலில் இருந்து சுமார் 2 அல்லது 3 கி.மீ தொலைவில் இருந்தது அந்த இடம். சிறிய குறுகலான வளைந்து நெளிந்து செல்லும் தார்ச்சாலை. சாலையின் இருபுறமும் மரங்கள். அந்தச் சாலையின் இடதுபுறத்தில் ஒரு ஒற்றையடிப்பாதை இருக்கு. அந்தப் பாதை ஒரு செம்மண் காட்டை நோக்கிச் செல்லும். நாங்கள் சென்ற வண்டியை நிறுத்திவிட்டு நடக்கத் தொடங்கினோம். மாலை 3 மணி வெய்யில் உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை இறங்கியது. சரியான பாதையில் தான் செல்கிறோமா என அங்கே விறகு சுமந்து வந்து கொண்டிருந்த ஒரு அம்மாவிடம் கேட்டேன். அந்த ஓடை தானே? இந்தப் பக்கம் இல்ல. அந்த ஒத்தையடி பாதைக்கா போங்க என்றார்… எங்கள் பாதையைத் திருத்திக் கொண்டு நடந்தோம். ஒரு செம்மண் மேடு வந்தது. அதிலிருந்து கொஞ்சம் சறுக்கி இறங்கினால் நீரோடை சென்ற தடம் இருந்தது. அந்த அம்மா சொன்ன ஓடையின் தடம். ஏற்கனவே இந்த இடத்திற்கு ஒரு முறை வந்திருக்கிறேன் என்றாலும் முதல்முறை பார்க்கும் பரவசம் வெயிலைப் பொருட்படுத்தாமல் நடக்க வைத்தது.

2 dhanalakshmi joseph
4 bismi svs


அங்கங்கே நின்றிருந்த ஒற்றைப் பனைமரங்கள், கூழாங்கற்கள், சிறியதும் பெரியதுமான ஏராளமான கல்மரத் துண்டுகள் வரலாற்றின் தொன்மைக்குள் அழைத்துச் சென்றன. அந்த அகலமான மண் பாதை வழியே கொஞ்ச தூரம் கால்கள் மண்ணில் புதைய நடந்து சென்றதும் நாங்கள் காண வந்த இடத்தைக் கண்டோம். டிஸ்கவரி சேனலில் தான் இது போன்ற இடங்களைக் கண்டிருக் கிறேன். ஆனால் நம் புதுச்சேரிக்கு அருகில் இத்தனை அழகான படிமப் பாறைக் குகைகள். அதுவும் பல கி.மீட்டர் நீண்ண்ண்ண்டு செல்லும் படிமப் பாறைக் குகை. அது காட்டாற்றின் நீர்வழித் தடம் தான். 20 மில்லியன் ஆண்டு களுக்கு முன்பு இந்த இடத்தில் ஒரு ஆறு ஓடியி ருக்கலாம். அந்த ஆற்று நீர் ஓட்டத்தில் இயற்கைப் பேரிடர் ஏற்பட்டு மரங்கள் பல அடித்து வரப்பட்டு இந்த இடத்தில் புதைந்து அதன் மீது ஆற்று நீரும் களிமண்களும் கூழாங்கற்களும் படிந்து படிந்து அந்த மரங்களில் உள்ள செல்சுவர்களில் மரத்துகள்கள் நீங்கி, இப்படி கல்மரங்களாக ஆகியிருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.


இப்போது திருவக்கரை பகுதி மக்கள் சிற்றோடை என அடையாளப்படுத்தப்படும் இந்த இடம் ஒரு காலத்தில் பெரிய காட்டாற்றின் வழித்தடமாக இருந்திருக்கிறது. அந்தப் படிமப் பாறைகளுக்கு நடுவில் ஆற்றின் வழித்தடத்தில் நடக்க நடக்க ஆதிகாலத்திற்குள் நடந்து செல்வதைப் போல் உடல் சிலிர்த்தது. ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் படிமப்பாறை குகை வழியாக நடந்து செல்வது சாத்தியமில்லை என்பதை உணர்ந்து மேலேறிவிட்டோம். பிறகு படிமப் பாறைகளின் மேல் நடந்தபடி அந்த வழித்தடத்தைப் பார்க்க பெரிய மலைப் பாம்பு ஒன்று உடலை வளைத்து நெளிந்து செல்வது போன்று நீண்டு சென்றது அந்தக் குகைப் பாதை. சிறிது ஓய்வுக்குப் பிறகு சூரியன் மறையத் தொடங்கியவுடன் அங்கிருந்து கிளம்பினோம். அங்கிருந்து ஞாபகமாக சில கல்மரத்துண்டுகளை எடுத்துக்கொண்டு வந்தேன். இப்போது என் வீட்டுக்குள் காலத்தின் தொன்மை அமர்ந்திருக்கிறது அமைதியாக.

- Advertisement -

- Advertisement -

– மனுஷி

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.