அலறவைத்த பார்சல் திருவையாறில் திக்.. திக்.. திக்…

0

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகேயுள்ள முகமது பந்தர் என்ற கிராமம். மே 4, 2023 (வியாழக்கிழமை) பிற்பகல் 12.30 மணி. அக் கிராமத்தில் உள்ள முஸ்லிம்கள் – சிறுவர் முதல் பெரியவர்கள் வரை – அனைவரும் ழுஹர் எனப்படும் நண்பகலுக்கு பின்னரான தொழுகைக்கு தயாராகிக் கொண்டிருந்தனர்.

‘என்னவாக இருக்கும்?’ என மனதில் நினைத்தவாறு, அடையாளம் தெரியாத நபரிட மிருந்து தனது தந்தையின் பெயருக்கு தனியார் கொரியர் நிறுவனம் மூலம் அனுப்பப்பட்டிருந்த பார்சலை ஆவலுடன் பிரித்த முகமது மஹாதீர் என்ற 28 வயது இளைஞருக்கு அதன் உள்ளே இருந்த பொருளைக் கண்டதும் பயங்கர அதிர்ச்சி. அதிர்ச்சியில் அவர் அலறிவிட்டார். அதற்கு காரணம் அந்த பார்சலில் அனுப்பப்பட்டிருந்த பொருள் ‘மனித மண்டை ஓடு’ என்பதுதான். அவ்வளவுதான் இச்செய்தி தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவில் ஊடகம் மற்றும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

64 வயதான முகமது காசிம் அடிப்படையில் ஒரு விவசாயி. கடந்த 7 ஆண்டுகளாக அவ்வூரிலுள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் முத்தவல்லி ( ஜமாத் தலைவர்). அவருக்குதான் இந்த மண்டை ஓடு பார்சல் அனுப்பப்பட்டிருந்தது. அனுப்புனர் முகவரியில் ‘நவ்மன்பாய் ரிபிகிழி’ என தமிழும் ஆங்கிலமும் கலந்த ஒரு போலியான பெயர் எழுதப்பட்டு அதன் கீழே 70832 22077 என்ற மொபைல் நம்பர் இருந்தது. முகமது பந்தர் ஜமாத் தலைவருக்கு கொரியர் பார்சலில் மண்டை ஓடு அனுப்பப்பட்ட அதிர்ச்சித் தகவல் ஊர் முழுவதும் காட்டுத் தீயாகப் பரவி, சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதுபற்றிய தகவலின்பேரில், திருவையாறு காவல்நிலைய போலீஸார் முகமதுபந்தர் கிராமத்திற்கு விரைந்து வந்து மண்டை ஓடு பார்சலைக் கைப்பற்றி அதுபற்றி முகமது காசிம் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். மண்டை ஓடு அடங்கிய பார்சல் அதற்கு முந்தைய நாள் (மே 3-ம் தேதி) மாலை 7 மணியளவில் டெலிவரி செய்யப்பட்டிருப்பது போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

பார்சலில் வந்த மண்டை ஓடு
பார்சலில் வந்த மண்டை ஓடு

முதல் நாள் மாலை 4 மணியளவில் கொரியர்காரர் அந்த பார்சலைக் கொண்டு வந்துள்ளார். கொரியரில் பார்சல் அனுப்பும் அளவுக்கு தனக்கு எவரும் இல்லை என்பதால் அந்த பார்சலை வாங்க மறுத்து திருப்பி அனுப்பியுள்ளார் முகமது காசிம். “அதன் பின்னர் அன்று மாலை 7 மணியளவில் மீண்டும் பார்சலைக் கொண்டுவந்தார் கொரியர்காரர். ஒருவேளை ஆர்க்கிடெக் இன்ஜினியரிங் படித்துவிட்டு தற்போது சொந்தமாக பிசினஸ் செய்து வரும் எனது மகன் (முகமது மஹாதீர்) அவருக்கு தேவையான ஏதாவது பொருளை வாங்க ஆர்டர் கொடுத்து, அது பார்சலில் வந்திருக்குமோ என்ற எண்ணத்தில் அந்த பார்சலை கையெழுத்திட்டுப் பெற்றுக் கொண்டேன்,” என்கிறார் முகமது காசிம்.

ஜமாத் தலைவர் முகமது காசிம்.
ஜமாத் தலைவர் முகமது காசிம்.

புதன்கிழமையே அந்த பார்சல் டெலிவரி செய்யப்பட்டாலும் அதை அவர் பிரிக்கவில்லை. அந்த பார்சலை மகன் வந்து பிரிக்கட்டும் என நினைத்து அப்படியே வீட்டுக்கு கொண்டு வந்து வைத்து விட்டார். மறுநாள் பிற்பகல் ழுஹர் தொழுகைக்கு முன் வீட்டிற்கு வந்த முகமது மஹாதீர் அந்த பார்சலை பிரித்தபோதுதான் அதன் உள்ளே மண்டை ஓடு இருப்பது தெரிய வந்தது.

மண்டை ஓடு பார்சல் பாபநாசம் பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் கொரியர் நிறுவன கிளை அலுவலகம் மூலம் அனுப்பப்பட்டிருப்பது போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதற்கிடையே, தஞ்சாவூர் கீழவாசல் பகுதியைச் சேர்ந்த மேலும் இரண்டு நபர்களுக்கு அதே கொரியர் நிறுவன கிளை மூலம் பார்சல் அனுப்பப்பட்டிருப்பது தெரிய வந்தது.

அதுபற்றிய தகவலறிந்த போலீஸார் அவ்விரு முகவரிகளுக்கும் சென்று அதுவரை பிரிக்கப்படாமல் இருந்த பார்சல்களைப் பெற்று ‘உள்ளே ஒருவேளை வெடிகுண்டு ஏதாவது இருக்கலாம்’ என்ற சந்தேகத்தில் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டு அப்பார்சல்களை கீழவாசல் பகுதியில் உள்ள ஒரு மைதானத்திற்கு பத்திரமாக எடுத்துச் சென்று அவற்றைப் பிரித்துப் பாரத்தனர். அவ்விரு பார்சல்களிலும் மண்டை ஓடுகள் அனுப்பப்பட்டிருப்பது தெரிய வந்தது.

அப்பகுதியில் பொருத்தப் பட்டிருந்த சிசிடிவி கேமராக் களில் பதிவான காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது முகமது காசிம் பெயருக்கு அனுப்பப்பட்ட பார்சலை தஞ்சாவூர் கீழவாசல் ராவுத்தர் பாளையத்தைச் சேர்ந்த முகமது முபின் (23) என்பவர் உள்பட இரண்டு இளைஞர்கள் கொண்டு வந்து அனுப்பியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவ்விரு இளைஞர்களையும் போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

ஏ.ஜெ.அப்துல்லா
ஏ.ஜெ.அப்துல்லா (

அப்போது மண்டை ஓடுகள் அடங்கிய பார்சல்களை கொடுத்து கொரியரில் அனுப்ப சொன்னது தஞ்சாவூர் கீழவாசல் எஸ்.என்.எம்.ரஹ்மான் நகரைச் சேர்ந்த ஏ.ஜெ.அப்துல்லா (40) என்ற மாற்றுத் திறனாளி என்பது தெரியவந்தது. மீன் வியாபாரம் செய்துவரும் ஏ.ஜெ.அப்துல்லா மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.


அப்துல்லாவை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், குற்றச்சாட்டுக்குள்ளான அப்துல்லா கொடுக்கல்- வாங்கல் மற்றும் சொத்துப் பிரச்சினைகளில் தலையிட்டு கட்டப்
பஞ்சாயத்து செய்து வந்துள்ளதும், தனக்கு ஆதரவாக செயல்படாத முகமது பந்தர் ஜமாத் தலைவர் முகமது காசிம் உள்ளிட்ட மேற்படி 3 நபர்களையும் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களுக்கு மண்டை ஓடுகளை பார்சலில் அனுப்பி இருப்பது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, இச்சம்பவம் தொடர் பாக ஏ.ஜெ.அப்துல்லா, அவரது கூட்டாளி முகமது முபின் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

-பிரீஸ்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.