என்ன செய்ய போகிறார் முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின்!

0

“முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் என்கிற நான்…” முதல்வராக பதவியேற்றபோது, கம்பீரமாக ஒலித்த அந்த குரல். திருமதி துர்கா ஸ்டாலினின் விழிகளில் “ஆனந்தக் கண்ணீரை” வரவழைத்த அந்தக் குரல். ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தது மட்டுமல்ல; ரொம்பவும் விரும்பிப் பார்க்க வைத்த தருணமும் கூட…

3ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலினின் தி.மு.கழக ஆட்சி. தமக்கு முன்னிறுத்தப்பட்ட வினாக் குறிகளை நிமிர்ந்து நிற்கின்ற ஆச்சர்யக் குறிகளாக மாற்றினாரா முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின்?

யாரிடம் சாட்டை

“அரசு நிர்வாகத்தில் ஒவ்வொரு துறைகளிலும் அத்தனை சறுக்கல்கள். அத்தனை அந்தர் பல்டிகள். தேவைப்படும் போதாவது சாட்டைகளைச் சுழற்றுவது, ஒரு தேர்ந்த மாநில அரசு நிர்வாகத்துக்கு அந்தச் சாட்டையானது முதல்வர் ஸ்டாலின் வசம் தான் இருக்க வேண்டும். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளின் கழக ஆட்சியின் செயல்பாடுகள் அவ்விதம் இல்லை என்று வெளிப்படையாகத் தெரிகிறது.

- Advertisement -

- Advertisement -

தலைமை செயலகத்திலும் அதிகார மையம்

தமிழக ஆளுனர் மாளிகையில், மிகவும் வெளிப்படையான இந்துத்வா ஆர்.எஸ்.எஸ். ஆளுனர் எனில், தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் ஒருவர் நிழல் வடிவ மறைமுகமாக எவ்வளவோ சீனியர் அதிகாரிகள் இருந்தபோதும், ஜுனியரான இவர் தன்னை தவிர மற்றவர்கள் எல்லோரும் மோசமானவர்கள் என்று சித்தரிக்கும் சமூக செயற்பாட்டாளராக உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். அமர்ந்திருக்கிறார், என்பது அவலமான ஒன்று. மாநில உயர்நிலை கல்விக் குழுவில் இருந்து விலகிய பேராசிரியர் ஜவஹர் நேசன் அவர்களின், வார்த்தைகளே நேரடி சான்று.

கல்வி துறையிலும் இடி தான்

சமூக நீதிக்கு எதிரான தேசியக் கல்விக் கொள்கையை தீவிரமாக எதிர்த்த ஒரே மாநிலம் தமிழ்நாடு. உடனே மாநில கல்வி கொள்கை குழு அமைத்த ஒரே மாநிலமும் தமிழ்நாடு தான். அதனால் சமூக நீதி சார்ந்த ஒரு கல்வித் திட்டம் உருவாக்கப்படும் என கல்வியாளர்கள் முதல் அனைவரும் பெரிதும் எதிர்பார்த்திருந்த நிலையில், அதன்மேல் விழுந்த இடிதான் பேராசிரியர் ஜவஹர் நேசனின் விலகல்.

 

சொன்னதை செய்யல

தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, முதல் முறையாக தமிழக சட்டசபை வரலாற்றில் வேளாண் பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதே தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டிருந்த நெல் கொள்முதல் விலை, கரும்பு கொள்முதல் விலை ஆகியன உயர்த்தப்படும் என்ற வாக்குறுதிகள், ”திமுக சொல்லியும் செய்யாத” பட்டியலுக்குள் முடங்கிக் கிடக்கிறது.

மகிழ்ச்சி நீடிக்கல

தஞ்சை டெல்டா பகுதிகளில் நிலக்கரிச் சுரங்கம் தோண்டப்படும் முயற்சிகளுக்கு ஆரம்பத்திலேயே “கூடாது” என அணை கட்டித் தடுத்து விட்டது தமிழக அரசு. தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட விவசாயிகளுக்குப் பெரும் மகிழ்ச்சி இது. விவசாயிகள் சந்தோஷத்தில் திக்குமுக்காடி விடக்கூடாதென்பதற்காகவோ, என்னவோ கூடவே, ஒரு துயரத்தையும் சேர்த்தே தந்திருக்கிறது, தி.மு.கழக அரசு.

இதுதான் சாதனையா?

கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட பதினேழு சட்ட மசோதாக்களுள் மிகவும் முக்கியமான நில ஒருங்கிணைப்புச் சட்டம் மசோதா. இந்தச் சட்டத்தின் மூலமாகத் தமிழ்நாட்டில் மிகப் பெரிய நீர்நிலைகளை அதாவது இருநூற்றைம்பது ஏக்கர் பரப்பளவுக்கும் கீழேயான ஏரி குளங்களைத் தயக்கம் ஏதும் இல்லாமல் தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்த்துக் கொடுக்கப்படும் சட்டமாகும் அது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இதுவரை இயற்றப்படாத நிலையில் ”இந்திய வரலாற்றில் முதன்முறையாக” என்ற பெருமையை தன்னகத்தே சூடிக்கொண்டார் மு.க.ஸ்டாலின். அதுமட்டுமா? மன்னர் ஆட்சிக் காலங் களிலும் சரி, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் சரி குளம், ஏரி போன்ற நீர் நிலைகளும் வாய்க்கால், ஆறு, நதிகள் போன்ற நீர்வழித் தடங்களும் இதுவரை தனியார்க்குத் தாரை வார்க்கப்பட்டதே இல்லை என்ற நிலையில், நிகழ்கால திமுக ஆட்சியானது ஒரு புதிய வரலாற்றினை இந்த நில ஒருங்கிணைப்புச் சட்டம் வாயிலாகப் பெருமையுடன் படைத்துள்ளது.

4 bismi svs

மின்சேவையில் குளறுபடி

தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் மின் கட்டணம் மாதாந்திரக் கணக்கெடுப்பாக மாற்றப்படும் எனக் கூறியிருந்தது. அதனை நடைமுறைப்படுத்தாமல் பொதுமக்கள் தலையில் பல்வேறு மின்காந்த இடிகளை இறக்கி வைத்துள்ளது. மின் துறையின் பல்வேறு புதுப்புது தகவல்கள் நாள்தோறும் பொது மக்களுக்கு பலப்பல அதிர்ச்சிகளைத் தந்து கொண்டே இருக்கிறது. மின் பயன்பாட்டிலும் அதன் கட்டணங்களிலும் சேவைகளிலும் குளறுபடிகள் அதிகமானால் திமுக ஆட்சி குறித்தான கடும் விமர்சனங்கள் எகிறிக் கொண்டே இருக்கும்.

முதல்வர். மு.க.ஸ்டாலின்
முதல்வர். மு.க.ஸ்டாலின்

தலைசுற்ற வைத்த சொத்துவரி

சொத்து வரி உயர்வு என்பது தவிர்க்க இயலாதது தான். ஒரு மாநில அரசின் வருவாய்ப் பெருக்கத்துக்கும உள்ளாட்சித் துறைக்கும் சொத்து வரியானது துணை நிற்கும் தான். அதே நேரத்தில் சொத்து வரியானது நாற்பது சதவீதத்தில் இருந்து நூறு சதவீதம் வரை உயர்த்துவது என்பது ரொம்ப ரொம்ப அதிகபட்சம் இல்லையா? சொத்து வரி செலுத்தும் உரிமையாளர்கள் மட்டுமல்ல, வாடகைதாரர்களும் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆட்சி மாறினாலும் காட்சி மாறல…

ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத நிலைதான் “டாஸ்மாக் ரகம்”. குடிமகன்களின் தள்ளாட்டத்தில் தடுமாறாத ஆட்சியை வழங்கும் வல்லமை படைத்ததும்; குடிமகன்களுக்கு அறிவிக்கப்படாத 24/7 மற்றும் எக்ஸ்பிரஸ் சேவையை வழங்கி நிறுவனமும் இதுதான். கடந்த கால ஜெயலலிதா ஆட்சியையும் சேர்த்து கடந்த பத்து ஆண்டுகளில் டாஸ்மாக் விருந்தாளிகளாக மாறிப் போன ஆண்களின் திடீர் மரணங்கள் இளம் விதவைகளாகிப் போன பெண்கள் இருபது வயதில் இருந்து முப்பது வயதுக்குள் இறந்து போன ஆண்களின் எண்ணிக்கை போன்ற புள்ளிவிவரங்களும் அரசின் சாதனைப் பட்டியலில் இடம்பெறுமா?

குரலற்றவர்களின் அரசா?

தமிழக அரசின் மாதாந்திர நிதிப் பற்றாக்குறை என்றால், முதலில் இவர்கள் நிறுத்தி வைப்பது முதியோர் மாதந்திர பணம், விதவைகள் பணம் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் மாதாந்திர உதவித் தொகையிலும் தான். இன்று வருமா? நாளை வருமா? என்று பாவம் அந்த ஒற்றை ஆயிரத்தை பெறுவதற்காக அலைக்கழிப்பது நியாயமா? துணிச்சல் இருந்தால் இந்த அரசாங்கம், தனது அரசு ஊழியர்களுக்கு சற்று தாமதமாக சம்பளம் போடப்படும் என்று அறிவித்துப் பார்க்கட்டுமே? முதியோர் பணம் பெறுபவர்களும், விதவைகளும், மாற்றுத் திறனாளிகளும் “குரலற்றவர்கள்” என்கிற ஏளனம்தானே, அரசுக்கு?

குடும்பத்தலைவிகளுக்கு ஆப்பு

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தீர்கள். தேர்தல் அறிக்கையில் எல்லோரையும் வசீகரித்த அறிவிப்பு அது. அன்று பொத்தாம் பொதுவாக குடும்பத்தலைவிகளுக்கு ஆயிரம் என்று சொல்லிவிட்டு இப்போது, ”தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு” என்று இடைசெருகலை சேர்த்துக்கொண்டீர்கள். அதற்கேற்ப இன்னின்ன ரேசன் கார்டுகளுக்கு மட்டும் குடும்ப அட்டையின் கலரை கணக்கெடுக்கத் தொடங்கிவிட்டீர்கள்.

நல்லது செய்தும் பிரயோஜனமில்லை

சொன்னதை மட்டுமா, சொல்லாததையும் செய்யும் தி.மு.க. அரசு என்று புளங்காகிதம் அடைவோர் கூறும் சான்று அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கான கட்டணமில்லா பயண அனுமதி. ஏற்கெனவே நட்டத்தில் இயங்கிவரும் போக்குவரத்து துறையை இந்தத்திட்டம் மேலும் நட்டத்தில் ஆழ்த்தும் என்ற விமர்சனங்கள் ஒருபுறமிருக்க, இந்த திட்டத்தையும் பயன்பெறும் பெண்களையும் இழிவாக நடத்தும் போக்கு பரவலாக வெளிப்பட்டிருக்கிறது. பேருந்து நடத்துநர்கள் தொடங்கி அமைச்சர்கள் வரையில் தங்கள் “மேட்டுக் குடிமைத்” தனத்தை சர்வ சாதாரணமாக பொது வெளிகளில் வெளிப்படுத்தி விடுகிறார்கள்.

உண்மையில் சாட்டையை சுழற்றுவரா…

“சிலரது பேச்சுகள் எனது உறக்கத்தைக் கெடுத்து விடுகின்றன.” எனச் சொல்லி ஒரு சோக சித்திரத்தைத் தீட்டினால் போதாது. அமைச்சர் பெருமக்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்க வேண்டிய கடமை மிகுந்த கட்டாயத்தில் இருக்கிறார் நம் முதல்வர் மு.க.ஸ்டாலின். அப்படியே, தமிழக முதல்வர் வசம் மட்டுமே இருக்க வேண்டிய சாட்டை, இப்போது எங்கே இருக்கிறது என்று தேடிக்கண்டுபிடித்து சரியாகப் பிரயோகப்படுத்துவாரா? என்ற எதிர்ப்பார்ப்பில் நம்மை ஆழ்த்தியிருக்கிறது, கழக அரசின் ஈராண்டு ஆட்சி!

-ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.