வியக்க வைக்கும் தொழில்நுட்ப மாற்றங்களுடன் அண்ணா நூற்றாண்டு நூலகம் !
ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஆயிரக்கணக்கான சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன என அறிஞர் விக்டர் கியூகோ கூறினார். ஆம் உலகளாவிய அதிசயங்களைத் தேடி சென்றாலும் தெரிந்து கொள்ள முடியாத எண்ணற்ற விஷயங்களை நம் கைகளில் தவழச்செய்து சிந்தனைகளை வளர்க்கும் சிறந்த இடம்தான் நூலகம்.
அந்த வகையில், அண்ணா நூற்றாண்டு நூலகம், தமிழக மக்களால் அன்புடன் “அண்ணா” என்றழைக்கப்படும் முன்னாள் தமிழக முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 102-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, 2010-ஆம் ஆண்டு செப்டெம்பர் 15-ஆம் தேதியன்று, சென்னையில் அந்நாள் தமிழக முதலமைச்சர், முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
ஏறத்தாழ ரூ.170 கோடி செலவில் 8 மாடி கட்டிடத்துடன் அதிநவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்ட இந்த நூலகம், ஆசியாவில் உள்ள பெரிய நூலகங்களில் முதன்மையான நூலகம் என்ற பெருமை பெற்றது. உலக இணைய மின் நூலகம், யுனெஸ்கோ மின் நூலகம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள சிறப்பும் அண்ணா நூலகத்துக்கு உண்டு.
இந்த நூலகத்தில், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.
இந்தப் பிரம்மாண்ட நூலகத்தில் எந்தப் புத்தகம் எந்த மாடியில் எந்த அலகில், எந்த அலமாரியில் உள்ளது? என்பதை நொடியில் கண்டறிவதற்காக ‘ஒபக்’ (Online Public Access Catalogue-OPAC) எனப்படும் சிறப்பு சாப்ட்வேர் தொழில்நுட்ப வசதி இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வசதி மூலம், வாசகர்கள் தாங்கள் படிக்க விரும்பும் புத்தகத்தின் பெயரையோ அல்லது அதை எழுதிய நூலாசிரியரின் பெயரையோ கணினியில் குறிப்பிட்டால் போதும். அந்தப் புத்தகம் எந்த இடத்தில் உள்ளது என்பதை நொடியில் தெரிந்துகொள்ளலாம். இதனால், வாசகர்கள் தாங்கள் படிக்க விரும்பும் குறிப்பிட்ட புத்தகத்தை உடனே கண்டுபிடித்துப் படித்துப் பயன்பெற முடியும்.
இந்த நூலகத்தின் முக்கியமான இன்னொரு சிறப்பு, குழந்தைகளுக்கான பகுதிதான். குழந்தைகள் தானாகவே செயல் வழிக் கற்றல் மூலம் படிக்கவும், ஆடிப் பாடி விளையாடவும், கணிணி மூலம் கற்கவும், பொழுது போக்கவும் மிகச் சிறப்பான வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்காண உள்நாட்டு, வெளிநாட்டுப் புத்தகங்கள் உள்ளன. கண்ணைக் கவரும் ஓவியங்கள் சிறப்பு. குழந்தைகள் விளையாடத் தனியாக உள் விளையாட்டு அரங்கம் உள்ளது வெகு சிறப்பு. குழந்தைகளுக்கு வசதியாக முதல் தளத்திலேயே இவை அனைத்தும் அமைந்துள்ளன.
இத்தனை வசதிகள் கொண்ட இந்த நூலகத்துக்குத் தினமும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிவரும் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் அதிக எண்ணிக்கையில் வந்து படிக்கின்றனர்.
1250 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து வாசிக்கக் கூடிய இந்நூலகத்தின் கூடுதல் சிறப்பு. 20க்கும் மேற்பட்ட தமிழ், ஆங்கில காலை நாளிதழ்கள், 8 மாலை செய்திதாள்கள் ஆகியவை இந்த நூலகத்திற்கு வருகின்றன. தற்போது, அவை தொடுதிரை வசதியுடன் மாற்றப்பட்டுள்ளது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
வாசகர்கள் இந்தக் கருவியை மிக எளிதாகப் பயன்படுத்தலாம். தாங்கள் விரும்பிய நாளிதழ்களைத் தொடு திரையின் மூலம் வாசிக்கலாம்.
காலத்திற்கு ஏற்பத் தொழில்நுட்ப மாற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில், அண்ணா நூலகத்திலும் இதற்கேற்ப மாற்றம் செய்யப்பட்டு, விரல் நுனியில் உலகச் செய்திகளை அறிந்து கொள்ளும் வகையில், தொடுதிரை வசதி அறிமுகம் செய்யப்பட்டிருப்பதை பெரிதும் வரவேற்றுள்ளனர்.
டாக்டர்.இனிகோ இருதயராஜ்,
திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.