இளசுகளின் பாதை மாற்றும் போதைக்கு எதிரான விழிப்புணர்வு ! முன்னெடுத்த தூய வளனார் கல்லூரி !

0
போதைக்கு எதிரான விழிப்புணர்வு
போதைக்கு எதிரான விழிப்புணர்வு

இளசுகளின் பாதை மாற்றும் போதைக்கு எதிரான விழிப்புணர்வு ! முன்னெடுத்த தூய வளனார் கல்லூரி ! பள்ளிச் சிறுவர்கள் முதல் பல் போன பெருசுகள் வரையில் வயது பேதமின்றி ஆட்டிப்படைக்கும் ”வஸ்து” வாக மாறியிருக்கிறது, பீடி, சிகெரெட், புகையிலை, சாராயம், போதை மாத்திரை, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் பயன்பாடு. ஒரு காலத்தில் வெற்றிலையின் காம்பை கடித்தால் கூட கோழி கொத்திவிடும் என்று விளையாட்டாய் சிறுவர்களை மிரட்டி வைத்த காலம் மாறி, இன்று ”கூலிப்” எனப்படும் போதை தரும் இரசாயண புகையிலையின் பயன்பாடு பள்ளி மாணவர்களிடையேக் கூட சர்வ சாதாரணமாக புழங்கிவருகிறது.

விட்டேத்தியாகத் திரியும் போக்கிரிகள் மத்தியில் மட்டுமல்லாது, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் மிடுக்கான உடையில் வந்து செல்லும் மேட்டுக்குடியினர் பயிலும் உயர்கல்வி நிறுவனங்களில்கூட ஜாயிண்ட் என்ற பெயரில் ”கஞ்சா” விற்பனை கொள்ளை இலாபம் தரக்கூடிய இரண்டாம் நெம்பர் பிசினஸாக களை கட்டுகிறது. பத்து வருடங்களுக்கு முன்பு வரையில் ”பான்பராக்” என்ற பெயரில் புழங்கி வந்த போதைப் பாக்குகள் இன்று பெயர் மாறி, ”விமல் பாக்கு” என்ற பெயரில் பெட்டிக் கடைகளில் விற்கப்படுகிறது. பொதுவில் போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவது என்பது ஒருபுறமிருக்க, குறைந்தபட்சம் பள்ளி – கல்லூரிகளுக்கு அருகாமையில் விற்கப்படுவதையாவது கட்டுக்குள் கொண்டுவர வேண்டுமென்று அரசு தரப்பில் பல்வேறு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

போதைக்கு எதிரான விழிப்புணர்வு
போதைக்கு எதிரான விழிப்புணர்வு

போதைப் பாக்குகள் பறிமுதல், கஞ்சா வியாபாரி கைது, கடைக்கு சீல் வைத்த போலீசார் என்பன போன்ற க்ரைம் செய்திகள் இடம்பெறாத நாள் இல்லை என்றளவுக்கு, சமூகத்தில் போதைப்பொருட்களின் தாக்கம் இருந்து வருகிறது. இந்தப் பின்னணியிலிருந்துதான், போதை பொருட்களால் தடம் மாறும் இளசுகளை நல்வழிப்படுத்தும் நோக்கில், போதைப்பொருட்களால் தன்னளவிலும் சமூகத்திற்கும் என்ன விதமான கேடுகளை விளைவிக்கக்கூடியது என்பதை மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக திருச்சி தூய வளனார் கல்லூரியில் கடந்த பிப்-05 முதல் பிப்-09 வரையில் ஐந்துநாள் விழிப்புணர்வு வாரத்தை நடத்தியிருக்கிறார்கள்.

தூயவளனார் கல்லூரி நிர்வாகம் மற்றும் மாணவர் பேரவை இணைந்து முன்னெடுத்த இந்நிகழ்வில், இயேசு சபை – போதை மறுவாழ்வு இயக்கம்; அறம் மருத்துவமணையின் மருத்துவர் குழுவினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று மாணவர்களிடையே போதைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை நிகழ்த்தினர்

போதைக்கு எதிரான விழிப்புணர்வு
போதைக்கு எதிரான விழிப்புணர்வு

தூய வளனார் கல்லூரியின் சார்பில் ரெக்டார் பால்ராஜ் மைக்கேல் சே.ச., செயலர் அமல் சே.ச., முதல்வர் ஆரோக்கியசாமி சேவியர் சே.ச., துணை முதல்வர் ராஜேந்திரன், மனோதத்துவ துறையின் தலைவர் இம்மானுவேல் ஆரோக்கியம் சே.ச, இயேசு சபை – போதை மறுவாழ்வு இயக்கத்தின் சார்பில் ஜெயபதி பிரான்சிஸ் குழுவினர்; காவல்துறை சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் டி.எஸ்.பி.யாக பணியாற்றும் பரத் மற்றும் அறம் மருத்துவமனையின் சார்பில், மருத்துவர் மகேஸ் ராஜகோபால், மருத்துவர் காயத்ரி, மருத்துவர் அசார்னிசா பேகம், மருத்துவர் வசந்த் உள்ளிட்டோர் பங்கேற்று மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கினர்.மாணவர் பேரவையின் தலைவர் மோவின், துணைத்தலைவர் அலாய் மற்றும் தமிழ்த்துறை மாணவர் பிரான்சிஸ் ஆண்டனி ஆகியோர் மொத்த நிகழ்வையும் ஒருங்கிணைத்தனர்.

நிகழ்வில் பங்கேற்பதாக நேரம் ஒதுக்கியிருந்த நிலையில், தவிர்க்கவியலாத நிர்வாக வேலைகளின் காரணமாக திருச்சி மாவட்ட எஸ்.பி.வருண்குமார், திருச்சி சிறீரங்கம் சரக உதவி ஆணையர் நிவேதா லட்சுமி ஆகியோர் பங்கேற்கவியலாமல் போனது. வெறுமனே பார்வையாளர்களாக பங்கேற்றுவிட்டு கடந்து செல்லாமல், மாணவர்களையும் பங்கேற்பாளர்களாக மாற்றும் வகையில், போதை விழிப்புணர்வை மையப்படுத்திய ஒரு நிமிட ஷார்ட்ஸ் வீடியோ, விளம்பர பதாகை வடிவமைப்பு, மீம் தயாரிப்பு போன்ற போட்டிகளையும் அறிவித்து, அதில் சிறந்த படைப்புகளை சமர்ப்பித்த மாணவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினர்.

போதைக்கு எதிரான விழிப்புணர்வு
போதைக்கு எதிரான விழிப்புணர்வு

ஏற்கெனவே, தூயவளனார் கல்லூரி வளாகத்திற்குள் பிளக்ஸ் பேனர் பயன்படுத்துவதற்கு தடை அமலில் உள்ள நிலையில், சார்ட் பேப்பர்களை கொண்டு மாணவர்கள் விழிப்புணர்வு வாசகங்களை, சித்திரங்களை தீட்டி பார்வைக்கு வைத்திருந்தனர். கல்லூரி பேராசிரியர்கள், காவல் துறையினர், மருத்துவக்குழுவினர் ஒருங்கிணைந்து நடத்திய இந்த விழிப்புணர்வு விழாவின் வழியே, போதைப் பொருட்களின் பயன்பாட்டினால் விளையும் தீங்கு குறித்தும் அது சமூகத்தில் தோற்றுவிக்கும் எதிர்மறை செயல்பாடுகள் குறித்தும் எடுத்துரைத்ததோடு,ஏற்கெனவே ஏதாவது ஒரு போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதிலிருந்து எவ்வாறு விடுபடுவது என்பதற்கான ஆலோசனைகளை வழங்கினார்கள். தனிப்பட்ட முறையில் மாணவர்களுக்கான கவுன்சிலிங்குகளும் இந்நிகழ்வில் வழங்கப்பட்டன.

மிக முக்கியமாக, “எனக்கு ஆள் இல்லை, காதல் தோல்வி, தூக்கம் வரலை, கடன் தொல்லை…” என்பது போன்ற போதைப்பழக்கத்திற்கு கூறும் காரணங்களை கேள்விக்குள்ளாக்கி, இந்த காரணங்களை கைவிட்டாலே போதையிலிருந்து விடுபடலாம் என்ற கருத்துக்களை மாணவர்களின் மனங்களில் ஆழப்பதித்திருக்கிறது, இந்நிகழ்வு.

– சே.பிரான்சிஸ் ஆண்டனி

Leave A Reply

Your email address will not be published.