ஏடிஎம் – பரிதாபங்கள் – Any Time Muck ( ATM )
ATM: Any Time Muck – மக்களை செல்லாக்காசு ஆக்கியதில் ஏடிஎம் மையங்களுக்கு தனி பங்கு உண்டு. உழைத்த பணத்தை கையில் பார்த்து பூரித்த காலம் ஒன்று உண்டு. அதை மற்றவர்களுக்கு நம் கையால் கொடுத்து மகிழ்ந்த காலம் ஒன்று இருந்தது. ஆனால் இப்போது இந்த இரண்டையும் ஏடிஎம் மையங்கள் செய்து கொண்டு மனிதனை பணத்தை விட்டு தள்ளி வைத்திருக்கிறது. காலத்தின் வேகத்தில் தவிர்க்க முடியாமல் போன இந்த கருமத்தை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும் என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை. ஆனால் இவை மக்களை படுத்தும் பாட்டை சொல்லி மாளாது.
ஏடிஎம் வந்த காலத்தில் அதை பாதுகாப்பதற்கு இரவு, பகல் என்று இரு பாதுகாவலர்கள் இருந்தார்கள். இப்போது ஒரு காவலரே அரிதாக இருக்கிறார்கள். அவர்களும் 10 மணிக்கு மேல் ‘அவுட் ஆஃப் ஆர்டர்’ போர்டை மாட்டிவிட்டு குறட்டைவிட்டு தூங்குகிறார்கள், அல்லது சரக்கடித்து மட்டையாகி கிடக்கிறார்கள். செலவினங்கள் குறைப்பு என்பதாக சொல்லி பெரும்பாலான ஏடிஎம் மையங்களில் தற்போது பாதுகாவலர்கள் இருப்பதில்லை. கமிஷன், சேவை கட்டணம், கந்துவட்டி என்கிற பெயரில் மக்களிடம் கொள்ளை அடிக்கும் பணத்தை வங்கிகள் என்ன செய்கிறது என்றுதான் தெரியவில்லை.
பெரும்பாலான ஏடிஎம்களில் ‘அவுட் ஆஃப் ஆர்டர்’ போர்டுகள் தான் தொங்கிக் கொண்டிருக்கிறது. வங்கி விடுமுறை நாட்களில் தான் மக்கள் ஏடிஎம்மை அதிகமாக பயன்படுத்துவார்கள். இந்த நாட்களில் தான் ‘அவுட் ஆஃப் ஆர்டர்’ போர்டுகள் அதிகம் தொங்கும். ஒரு வேளை திறந்திருந்தால் ‘பணம் இல்லை’ என்று வரும். வங்கிகளை ஒட்டி உள்ள சில ஏடிஎம்கள் வங்கி பணி நேரத்தில் மட்டும் திறந்திருக்கும், மற்ற நேரங்களில் அதற்கு பூட்டு போட்டு விடுவார்கள்.
பாதுகாவரோ? துப்புறவு பணியாளர்களோ இல்லாமல் பல ஏடிஎம்கள் குப்பை மேடாக மாறி இருக்கிறது. ஏடிஎம் மிஷன்கள் ஏசியில் இருக்க வேண்டும் என்பது அதன் தொழில்நுட்ப கட்டாயம். 90 சதவிகித ஏடிஎம்களில் ஏசி இயங்குவதில்லை. சுத்தத்தையும், பாதுகாப்பையும் பேணாதவர்கள் கண்காணிப்பு கேமராவை மட்டும் எப்படி பாதுகாப்பார்கள்.
ஏடிஎம் எந்திரங்கள் மக்களின் வசதிக்காக என்பதை விட வங்கி பணியாளர்களின் பணியை குறைப்பதற்காக என்பதாகவே மாறி விட்டது.
சமீபகாலமாக சில திரைப்படங்களில் ஏடிஎம் மையங்கள் பாலியல் தொழிலுக்கும், பிச்சைக்காரர்கள் படுப்பதற்கும் பயன்படுவதாக கற்பனை காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அது நிஜமாகும் காலம் தூரத்தில் இல்லை என்றே தெரிகிறது.