அங்குசம் பார்வையில் ‘அரண்மனை-4’படம் எப்படி இருக்கு ! 

0

அங்குசம் பார்வையில் ‘அரண்மனை-4’படம் எப்படி இருக்கு !  தயாரிப்பு: ’ஆவ்ணி சினிமேக்ஸ் [பி] லிமிடெட் & பென்ஸ் மீடியா [பி] லிமிடெட்’ குஷ்பு சுந்தர், ஏ.சி.எஸ்.அருண்குமார். டைரக்‌ஷன்: சுந்தர் சி. ஆர்ட்டிஸ்ட்ஸ் ; சுந்தர் சி. தமன்னா, ராஷி கண்ணா, சந்தோஷ்பிரதாப், யோகிபாபு, கோவை சரளா, கே.ஜி.எஃப்.ராம், கே.எஸ்.ரவிக்குமார், விடிவி.கணேஷ், நமோ நாராயணன்,டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி. டெக்னீஷியன்கள்—ஒளிப்பதிவு: இசக்கி கிருஷ்ணசாமி, வசனம்: வெங்கடேஷ், இசை: ஹிப்ஹாப் தமிழா ஆதி, ஆர்ட் டைரக்டர்: பொன்ராஜ், எடிட்டிங்: ஃபென்னி ஆலிவர், ஸ்டண்ட் மாஸ்டர்: ராஜசேகர். பி.ஆர்.ஓ. சதீஷ் [ எய்ம் ]

அரண்மனை-4
அரண்மனை-4

வடநாட்டில் ஓடும் பிரம்மபுத்திரா நதியில் தனது மகளுடன் படகு ஒன்றில் போகிறார் பூசாரி ஒருவர். அந்த நதிக்கடியில் இருக்கும் துஷ்ட சக்தியை படகோட்டும் நீளக்கம்பு தொட்டுவிடுகிறது. நதியின் நீரில் மிதக்கும் சக்தியைத் தொட்டுவிடுகிறார் பூசாரி மகள். ரெண்டு பேரும் ஒரே நேரத்துல துஷ்ட சக்தியை ‘டச்’ பண்ணா என்ன நடக்கும்? பூசாரி மகள் பலியாகிறாள். பூசாரியை நோக்கி ஆவேசமாக சுழன்றடித்தபடி வரும் துஷ்ட சக்தியை, கையில் வைத்திருக்கும் இம்புட்டுக்காணு சொம்பில், படக்கெனப் பிடித்து அடைத்துவிடுகிறார் பூசாரி. “என்மகளைக் கொன்ற நீ தான், என் மனைவியிடம் மகளாக நடிக்க வேண்டும்” என்று துஷ்டசக்தியிடம் ‘அக்ரிமெண்ட்’ போட்டு வீட்டுக்கு அழைத்து வருகிறார் பூசாரி.

திஸ் மிராக்கிள் சீன் முடிந்ததும் சென்னை உயர்நீதிமன்றத்தின் வெளிப்பகுதியில் சீன் ஆரம்பமாகிறது. அங்கே ஏழைகளின் நியாயத்திற்காக மட்டுமே வக்கீலாக இருக்கிறார் சரவணன் [சுந்தர்.சி.] காதல் ஜோடி ஒன்று அடைக்கலம் தேடி சுந்தரிடம் ஓடிவருகிறது. தேனாம்பேட்டையின் பிரபல ரவுடி[ துரைப்பாண்டியன்[ நமோ நாராயணன்] மகள் தான் அந்த இளம்பெண் என்பது தெரிந்ததும் துரத்திவிடுகிறார் சுந்தர் சி. மகளை அழைத்துக் கொண்டு துரைப்பாண்டி போகும் போது, அந்த இளம்பெண்ணின் பெயர் செல்வி என்று தெரிந்ததும் ரவுடிக்கும்பலை ஆவேசமாக அடித்து நொறுக்குறார் சுந்தர் சி.

- Advertisement -

அரண்மனை-4
அரண்மனை-4

ஏன்னா செல்வி என்பது சுந்தரின் தங்கச்சி [ தமன்னா ] பெயராம். பத்து வருடங்களுக்கு முன்னால் சந்தோஷ் பிரதாப்பைக் காதலித்து வீட்டைவிட்டு ஓடிவிடுகிறார் செல்வி என்ற தமன்னா. ஆனாலும் தங்கச்சி மீது பாசம் குறையாமல் இருக்கிறார்.

திடீரென ஒரு நாள் மச்சான் சந்தோஷ் பிரதாப் கொலை செய்யப்பட்டதாகவும் தங்கச்சி செல்வி தற்கொலை செய்து கொண்டதாகவும் சேதி வர, பதறியடித்தபடி கோவூர் என்ற ஊருக்கு  ஓடுகிறார்கள் சுந்தர் சி.யும் அவரது அத்தை கோவை சரளாவும். தங்கச்சியின் ஆறு வயது பெண் குழந்தை கோமா ஸ்டெஜில் இருக்கு. நான்கு வயது பையன் பிழைத்துக் கொள்கிறான்.

அதன் பின் அந்த கோவூர் அரண்மனையில் ராத்திரி ஆனாலே திகீர் பகீர், குபீர் சம்பவங்கள் நடக்கின்றன். சுந்தர் சியையும் மற்றவர்களையும் அந்த துஷ்ட சக்தி பாடாய்படுத்தி பயமுறுத்துகிறது. ஆனால் அந்த துஷ்ட சக்தியிடமிருந்து தனது குழந்தைகளை மட்டும் பேயாக அலைந்து பாதுகாக்கிறார் செல்வி என்ற தமன்னா.

அரண்மனை-4
அரண்மனை-4
4 bismi svs

வழக்கம் போல் க்ளைமாக்ஸில் தலைவிரி கோலத்துடன் மஞ்சள் சேலையுடன் சிம்ரனும் சுந்தர் சி.யின் மனைவி குஷ்புவும் “ஆத்தா….ஆத்தா’….காப்பாத்துத்தா…” என்ற ஆங்காரக்கூச்சலுடன் குத்துப்பாட்டுக்கு ஆட, இன்னொரு பக்கம் எந்திரன் படத்தில் நூற்றுக்கணக்கான கெட்ட ரோபோக்கள் வர்ற மாதிரி, துஷ்டசக்தியான கே.ஜி.எஃப் ராம் நான்கைந்து உருவங்களில் ஆவேசமாகப் பாய, அம்மன் சக்தியின் துணையுடன் துஷ்டசக்தியைக் குளோஸ் பண்ணுகிறார் சுந்தர் சி. பாழடைந்த அரண்மனை பளிச்சென மாறுகிறது.

இதுவரையிலான அரண்மனையின் மூன்று பாகங்களிலும் தமிழ்நாட்டு நல்ல பெண் பேய்க்கும் துஷ்டசக்திக்குமிடையே உக்கிரமான சண்டை நடந்ததைக் காட்டியிருந்தார் சுந்தர் சி. இந்த நான்காம் பாகத்திலோ.. வடநாட்டு பிரம்மபுத்திரா நதியிலிருந்து துஷ்டசக்தியை இம்போர்ட் பண்ணி வந்து தனது தங்கச்சிப் பேயுடன் மோதவிட்டு, அழித்திருக்கிறார்.

டாக்டராக வரும் ராஷி கண்ணாவுக்கு இடைவேளைக்கு முன்பு நான்கு சீன்கள். அதில் ஒரு சீனில் தமன்னாவின் குழந்தைக்கு ஊசி போடுகிறார். துஷ்டசக்தியைப் பார்த்து அலறுகிறார். அதே போல் இடைவேளைக்குப் பின் நான்கு சீன்கள். மொத்தமே ஏழெட்டு நாள் கால்ஷீட்டில் கதைக்குள் செட்டாகிவிட்டார் ராஷி கண்ணா. தமன்னாவுக்கு மனித உருவில் உயிருடன் இருக்கும் சீன்கள் குறைவு தான் என்றாலும் செத்த பிறகு பேயாக ஆவேசம் காட்டியதிலும் குழந்தைகளைப் பாதுகாத்து பாசம் காட்டுவதிலும் பளிச்சிடுகிறார். இடைவேளை வரை கதையை நகர்த்த ரொம்பவே திகிலாகி, திணறியிருக்கார் டைரக்டர் சுந்தர் சி.

படம் முடிவதற்கு இருபது நிமிடங்களுக்கு முன்பாக வரும் காமெடி சீனில் தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாய்விட்டுச் சிரிக்கிறார்கள். யோகிபாபு, விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன் வரும் மற்ற சீன்களெல்லாம் ஒர்க் அவுட்டாகவில்லை. அதிலும் யோகிபாபுவுக்கு டோப்பா முடியும் ஒட்டு மீசையும் செட்டே ஆகவில்லை.

அரண்மனை-4
அரண்மனை-4

வடநாட்டில் நீரிலும் நிலத்திலும் இருப்பதால் அந்த துஷ்டசக்திப் பேய்க்கு ‘பாஹ்க்கு’ என்ற பெயர் வைத்து, அதற்கு பிளட் குரூப்பெல்லாம் இருக்கு என்ற சுந்தர் சி & அசோஸியட்களின் கற்பனை பேயைவிட பயங்கராம இருக்கு. இன்ஸ்பெக்டர் கொலையை விசாரிக்க வரும் டி.எஸ்.பி.கே.எஸ்.ரவிக்குமார், கான்ஸ்டபிள் சிங்கம்புலியிடம் விபூதி வாங்கி பூசிக் கொண்டு கிளம்புவதையெல்லாம் எதில் சேர்ப்பது?

அதுசரி, பேயாஜால வித்தை காட்டுவதுன்னு முடிவு பண்ணிய பிறகு மற்றதையெல்லாம் துருவித்துருவிப் பார்க்க ஆரம்பித்தால் நம்மையும் துஷ்டசக்தி துரத்த ஆரம்பித்துவிடும்.

ஆனாலும் இந்தப் பேய்ப்படத்தை குழந்தைகள் குதூகலமகாப் பார்ப்பது தான் ‘அரண்மனை-4’ வெற்றியின் ரகசியம். பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியான கல்வி வியாபாரி ஏ.சி.சண்முகத்தின் நல்லாசி இருக்கும் வரை இன்னும் நான்கு பாகங்கள் கூட அரண்மனையைக் கட்டியெழுப்பலாம் சுந்தர் சி.

–மதுரை மாறன்

 

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.