சொந்தமாகச் சிந்திக்க வைக்கிற கல்வியையா நீங்கள் போதிக்கிறீர்கள்?
பள்ளிக் கல்வித்துறையின் பெருங்கசப்பானதொரு பேரவலத்தைக் குறித்துச் சில கருத்துகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நமது தமிழகத்தின் பள்ளிக் கல்வித்துறை போன்ற ஓர், ‘அறியாத்துறை’ பிறிதொன்று இருக்க முடியாது என்கிற அளவுக்கு அத்துறையில் அறியாமையும் போதாமைகளும் கோலோச்சி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் அத்துறையின் இயக்ககம், மாவட்ட கல்வி நிர்வாகங்களிடம் பல்வேறு விதமான தகவல்களைக் கேட்டு சுற்றறிக்கைகளை அடுக்கடுக்காக அனுப்பிக் கொண்டு இருக்கிறது.
ஓர் அரசுத் துறையின் தலைமையகம், இப்படி எல்லாத் தகவல்களையும் தனக்கு கீழே இருக்கும் நிர்வாகத்தினரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறது என்றால், அத்துறையின் தலைமை தனது அலமாரிகளில் எதையெதையெல்லாம் அடுக்கி வைத்திருக்கிறது என்கிற கேள்வி ஒவ்வொரு முறையும் நமக்கு எழுகிறது.
- தேவையற்ற தேர்வுக் கெடுபிடிச் சர்வாதிகார நடவடிக்கைகள், தேர்வு மையங்களில் மாணவர்களுக்குத் தேவையற்ற பதட்டத்தைத் தோற்றுவிக்கும் பறக்கும் படையினரின் நேர்மை பீய்ச்சும் நடவடிக்கைகள்,
- ஆசிரியர்களை, ஆசிரியர் வேலை ஒன்றைத் தவிர மற்ற அனைத்து வேலைகளுக்கும் ஏவிவிடுதல், *வெற்றுக் கெடுபிடிகள், மேம்போக்குத்தனம், ஒவ்வொன்றிலும் அரைக்கிணறு தாண்டுகிற நடவடிக்கைகள் இவைதான் இன்றைய நமது பள்ளிக்கல்வித் துறையின் நிலை என்றால் அது மிகையில்லை.
அதிகாரிகள் கவனிப்பார்களா?
முனைவர் வசந்திதேவி, பிரின்ஸ் கஜேந்திர பாபு, ராஜகோபாலன் போன்ற எண்ணற்ற சமூகநலக் கல்விச் சிந்தனையாளர்கள் பள்ளிக்கல்வித் துறையைத் தரம் உயர்த்துவது குறித்துப் பல ஆண்டுகளாகப் பக்கம் பக்கம் பக்கமாகப் பொதுவெளியில் கட்டுரைகளாகவும் நூல்களாகவும் எழுதித் தள்ளிக்கொண்டிருக்கிறார்களே அவற்றையெல்லாம் தொடர்புடைய துறையினர் படிக்கிறார்களா இல்லையா? அவற்றையெல்லாம் குறித்து ஆய்வரங்குகள் நடத்தப்பட்டு ஏதேனும் நல்ல முடிவுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றனவா?
ஏன் தான் இந்த உத்தரவு?
படித்திருக்கிறார்கள் எனில், கடந்த மாதம்கூட ஏன் நகைப்புக்குரிய ஒரு புதிய உத்தரவைப் போடுகிறார்கள்? சமூகநிலை, மாணவர்களின் குடும்ப நிலை, மாணவர்களின் வாழ்நிலை உளவியல் என்று எதுவுமே தெரியாத அவற்றையெல்லாம் குறித்துக் கவலைப்படுகிற இயல்பும் இல்லாத ‘வெறும் உத்தரவுக் கலாசார’ அதிகாரிகளால் பள்ளிக்கல்வியைத் தரம் உயர்த்திவிட முடியுமா?
கல்வித்தகுதி இருந்தும் பிரயோஜனமில்லை
வினாக்கள் அடுக்கடுக்காக மேலெழுகின்றன. இன்றைய நிலவரப்படி படித்து முடித்துவிட்டு 67 லட்சம் பேர் உரிய தகுதிகளோடு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டுக் காத்திருக்கிறார்கள். இவர்களில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களைவிட 3 லட்சம் அதிகம். மேலும் இவர்களில் ஒன்றரை லட்சம் பேர் மாற்றுத் திறனாளிகள். ஆக, இவர்களது தேர்வுக் கெடுபிடிகளில் தப்பிப் பிழைத்து தேர்ச்சியும் தகுதியும் பெற்றால் கூட வேறு ஒரு வரிசையில் நின்று காத்திருந்து வயோதிகம் அடையவேண்டும் என்பதே இன்றைய நமது பிள்ளைகளின் நிலை! இப்படியொரு நிலையைத் தக்க வைத்துக் கொண்டு, தேர்வுகளில் காட்டப்படுகிற கண்டிப்புகளையும், வேகமாக வீசியெறியப்படுகிற உத்தரவுகளையும் பார்த்தால், விதியே விதியே என்னசெய்ய நினைத்தாய், ‘எங்கள் தமிழகத்தின் பள்ளிப் பிள்ளைகளை?’ என்றுதான் குமுறத் தோன்றுகிறது!
பள்ளிக் கல்வித்துறையின் சில நல்ல நடவடிக்கைகளைப் பாராட்டியும் நாம் அச்சு ஊடகத்தில் நேர்காணல் அளித்திருக்கிறோம். எனவே எவருடனும் நமக்கு முற்பகையோ சொத்துச் சிக்கலோ இல்லை. அறிவியல் பார்வை, அறவியல் சார்ந்த நடவடிக்கைகள், தொலைநோக்குப் பார்வை, தூய்மையான அக்கறை போன்றவை மேலோங்க வேண்டும் என்கிற ஒரு பெருவேட்கையின் விளைவாகவே இப்பதிவு முன்வைக்கப்படுகிறது.
பாராட்டும்படியாக இல்லை இப்போதும் கூட பல அரசுப்பள்ளிகள், அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களாலும், ஆசிரியர்களாலும் இவ்விரு தரப்பினராலும் முறையாக வழிநடத்தப்படுகிற மாணவர்களாலும் கண்ணில் ஒற்றிக் கொள்ளக்கூடிய அளவுக்குத் தனிப்பட்ட முறையில் தரஉயர்வு பெற்றுள்ளன. ஆனால் ஒட்டுமொத்தமாக அத்துறையின் தலைமைச் செயல்பாடுகள் பாராட்டும்படியாகவோ ஏற்கும் படியாகவோ இல்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின் மிகத் தீவிரமாக கவனம் செலுத்தி, அத்துறையில் அறிவுசார்ந்த அதிரடியான தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தினால் மட்டுமே அத்துறையின் கொத்துக் கொத்தான சீர்குலைவுகள் சீரடையும் என்பதே உண்மை! எனவே இதில் முதல்வர் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பது, கோடிக்கணக்கான நமது மாணவர்களின் பெற்றோர்கள் சார்பான நமது கோரிக்கை!
– ஜெயபாஸ்கரன்
கல்வி இனிது தேர்வு கொடிது
பிளஸ் டு கணிதம் மிக கடினமாக இருந்ததாக செய்தித்தாள்கள் சொல்கின்றன. திருச்சி மாவட்டத்தில் ஒரு மாணவி தற்கொலை. கேள்வித் தாளை உருவாக்கி, உயிரை எடுக்கும் கணித மேதாவிகளை என்ன செய்வது..? பிளஸ் டு தேர்வு முடித்து ஒரு மாணவன் கலெக்டராகவா ஆகிவிட முடியும் ? எளிதில் மாணவர்கள் எழுதிவிடக் கூடாதென்ற வக்கிரபுத்தியை இவர்கள் எங்கிருந்து கற்றார்கள்?
இரண்டு வால்யூம் என்பதே பெருங்குற்றம். கொடுமையிலும் கொடுமை. பிளஸ் 1ல் 2 வால்யூம் வேறு. 2 வருடங்களில் 4 கணித புத்தகங்களைக் கற்றுத்தேற வேண்டும். வருடம் முழுக்க கற்றதை, கற்பித்ததை இவர்கள் கேள்வியில் கேட்க மாட்டார்களாம். சொந்தமாக சிந்தித்து எழுதுகிற கேள்வி கேட்பார்களாம்! சொந்தமாகச் சிந்திக்க வைக்கிற கல்வியையா நீங்கள் போதிக்கிறீர்கள்?
மூன்று மணி நேர தேர்வு எதற்கு?
தேர்வு ஒரு மணி நேரத்திற்கு வைத்தால் போதுமே! ஏன் 3 மணி நேரம்? எந்த நாட்டில் மாணவர்கள் 3 மணி நேரம் தேர்வு எழுதுகிறார்கள்? மூன்று மணி நேரமும் ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். அதுவும் நின்றுகொண்டே இருக்க வேண்டும். உட்கார்ந்தால் கொலைக் குற்றத்துக்கு ஆளாகி விடக்கூடும். 3 மணி நேரமும் ஆசிரியர்களும் மாணவர்களும் மௌன விரதம் அனுஷ்டிக்க வேண்டும். மாணவர்களை உயிர்ப்போடு வைத்திருக்க வேண்டியது மட்டுமல்ல உயிரோடு வைத்திருக்க வேண்டியதும் கல்வியின் கடமை.
சிலபசில் இல்லாத கேள்விகளைக் கேட்க உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?
ஏற்கனவே 50,000 பேர் ஓடிப்போய் விட்டார்கள். மீதம் இருக்கிறவனையும் விரட்டிவிட முயற்சிக்கிறீர்கள். கல்வி இனிமையாக, எளிமையாக இருந்திடல் தானே சிறப்பு. கணிதத்தை நினைத்தால் கனவில் கூட பயம் வருகிறதே ஏன்? உங்கள் மேதாவித் தனத்தை பச்சைப்பிள்ளைகளிடத்திலா காட்டுவது? இதே கேள்வித்தாளை கணித ஆசிரியர்களிடம் கொடுங்கள். எத்தனை ஆசிரியர் களால் சென்டம் எடுக்க முடியும்?
இதில் நடக்கும் கூத்துகள்
கேள்வியை தவறாக கேட்டுவிட்டோம். அட்டென்டு பண்ணினால் பாஸ் என்பார்கள். தேர்வு நடக்கும் முறையே வன்முறை நிறைந்ததாக இருக்கிறது. 10 மணி தேர்வுக்கு 8.30க்கு வர வேண்டுமாம். தேர்வு முடிந்து மதியம் 1.30க்குத்தான் வெளியே விடுகிறார்கள். 5 மணி நேரம் ஒரு குழந்தை தேர்வு மையத்தில் இருக்க வேண்டும் என்பது ஜெயிலை விட மோசமானது. இதில் மாணவர்களை மிரட்டல், உருட்டல், பயமுறுத்தல் என்ற அச்சுறுத்தும் போக்குகள் வேறு.
– கவிஞர் தங்கமூர்த்தி