அங்குசம் பார்வையில் ‘அரிமாபட்டி சக்திவேல் ‘ படம் எப்படி இருக்கு ! .
அங்குசம் பார்வையில் ‘அரிமாபட்டி சக்திவேல் ‘ தயாரிப்பு: ‘லைஃப் சைக்கிள் கிரியேஷன்ஸ் ‘ அஜிஷ் & பவன்.கே. டைரக்டர்: ரமேஷ் கந்தசாமி. கதை-திரைக்கதை & ஹீரோ: பவன்.கே. மற்ற நடிகர்கள் –நடிகைகள்: விடிஎம்.சார்லி, மேகனா எலன், சூப்பர்குட் சுப்பிரமணி, அழகு, இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், செந்தி. டெக்னீஷியன்கள்: ஒளிப்பதிவு: ஜே.பி.மேன், இசை: மணி அமுதவன், எடிட்டிங்: ஆர்.எஸ். சதீஷ் குமார். பிஆர்ஓ: யுவராஜ்.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள அரிமாபட்டி கிராமம். அந்த ஊர் இளைஞர்கள் வேறு சாதியைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து கல்யாணம் பண்ணினால் ஊர் விலக்கம் பண்ணிவிடுவார்கள் பஞ்சாயத்து தலைவர்கள். அதையும் மீறி ஊருக்குள் வாழந்தால் போட்டுத் தள்ளி சோலியை முடித்துவிடுவார்கள். ஆனால் நம்ம ஹீரோ சக்திவேலோ, (பவன்)பள்ளியில் படிக்கும் போதிருந்தேவேறு சாதிப் பெண்ணைக் காதலித்து, அந்த பெண் டீச்சர் ஆனதும் கல்யாணம் பண்ணி ஊரைவிட்டு ஓடி சென்னைக்கு போகிறார்.
சினிமா டைரக்டராக வேண்டும் என்ற லட்சியத்துடன் ( அவரின் லட்சியம் என்னாச்சுன்னெல்லாம் கேட்கக் கூடாது) அரிமாபட்டி சக்திவேல் என்ற ஸ்கிரிப்ட்டுடன் அலைகிறார். ( டைட்டில் ‘மேட்ச்’ ஆகுதுல்ல) . காதலர்கள் கதி என்ன என்பதன் க்ளைமாக்ஸ் தான் இந்தப் படம். திக்குத் தெரியாத காட்டில் லெக்குத் தெரியாம சுத்துன கதையா இருக்குது கதையும் திரைக்கதையும். ஹீரோ பவன் வரும் சீன்களிலெல்லாம் பரிதாபமாக முழிக்கிறார், பைக்கில் சுற்றியபடியே ஃப்ளாஷ் பேக் ஓப்பன் பண்ணுகிறார்,இரண்டு சண்டை போடுகிறார்.
சாரி பிரதர் இதுக்கு மேல சொல்றதுக்கு ஒண்ணுமே இல்ல. ஹீரோயின் மேகனா எலன், பாக்குறதுக்கு பப்ளிமாஸ் மாதிரி இருக்கார். ஆனால் நடிப்பு..? ஹீரோயின் அப்பாவாக சார்லி. எப்பவுமே சோகமா இருக்கார். சோர்ந்து போய் நடக்கிறார், பஞ்சாயத்தில் ஊரார் காலில் விழுகிறார். மேட்டர் ஓவர். ஹீரோயின் அண்ணனாக சாதி வெறி பிடித்த வில்லனாக பிர்லா போஸ், மற்றும் அழகு, இமான் அண்ணாச்சி, சூப்பர்குட் சுப்பிரமணி என எல்லோருமே இதே ரகம் தான். இது நிஜத்தில் நடந்ததாகவும் இன்றும் பல ஜோடிகள் வேறு ஊர்களில் வாழ்வதாகவும் பல போட்டோக்களை க்ளைமாக்ஸ்ல போட்டு நம்மை கிறுகிறுக்க வைக்கிறார் டைரக்டர் ரமேஷ் கந்தசாமி. உண்மையாகவே இருக்கட்டும்ங்க. அதை சினிமாக் கதையாக கச்சிதமாக சொல்லத் தெரியவில்லையே உங்களுக்கு.
– மதுரை மாறன்