வட மாவட்டங்களில் புதைந்து கிடக்கும் மற்றொரு கீழடி – தொல்லியல் துறை பேராசிரியர் பிரபு

1

வட மாவட்டங்களில் புதைந்து கிடக்கும் மற்றொரு கீழடி !தொல்லியல் துறை பேராசிரியர் பிரபுவுடன் கலந்துரையாடல் ! ”திருப்பத்துார் மாவட்டத்தில், தொல்லியல் சார்ந்த தடயங்கள் அதிகமாக கண்டறியப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் அதனை சேகரித்து பாதுகாப்பாக வைப்பதற்கான இடம் இல்லாததால், பல வரலாற்றுக்களை நாம் இழக்கிறோம். எனவே திருப்பத்துார் மாவட்டத்தில் கண்டறியப்படும் வரலாற்று தடயங்களை காட்சிப்படுத்த அரசு அருங்காட்சியம் அமைக்க வேண்டும். இதன்மூலம் மாணவர்கள், இளம் தலைமுறையினருக்கு அறிவாற்றல் வளர்க்க ஏதுவாக அமையும்.” என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறார், திருப்பத்தூர் தூயநெஞ்சக்கல்லூரியின் தொல்லியல் துறை பேராசிரியரான பிரபு.

தூய நெஞ்சக் கல்லூரி தொல்லியல் துறை பேராசிரியர் ஆ பிரபு
தூய நெஞ்சக் கல்லூரி தொல்லியல் துறை பேராசிரியர் ஆ பிரபு

கீழடியைப் போல திருப்பத்தூர் மாவட்டங்களிலும் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையையும் முன்வைக்கிறார், அவர். இதற்கான காரணங்களாக அவர் கூறுகையில், “நம் மாவட்டத்தில் கடந்த 9 ஆண்டுகள் மேற்கொண்ட கள ஆய்வில், சுமார் 140 -க்கும் அதிகமான வரலாற்று சான்றுகளை எங்கள் குழுவினரோடு கண்டறிந்துள்ளோம், குறிப்பாக ஆலங்காயம் குண்டு ரெட்டியூர் மற்றும் குடியாத்தம் செங்குன்றம், அனேரி, கந்திலி , பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டால் மற்றொரு கீழடி அமைய வாய்ப்புள்ளது. இது வடமாவட்ட கீழடியாக இருக்கும்” என்கிறார் அழுத்தமாக. அங்குசம் இதழோடு கலந்துரையாடிய பேராசிரியர் பிரபு திருப்பத்தூர் வரலாறு தொடங்கி, அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட பல்வேறு பொக்கிஷங்கள் பற்றி விரிவாகவே பகிர்ந்து கொண்டார்.

தொல்லியல் பொக்கிஷங்கள்
தொல்லியல் பொக்கிஷங்கள்

வரலாறு வழி திருப்பத்தூர் !
இந்நகரம் 1600 ஆண்டுகளுக்கு பழமைவாய்ந்தது சோழர்கள், விஜயநகரப் பேரரசு, போசளப் பேரரசு போன்ற பல்வேறு ஆட்சியாளர்களின் கீழ் இருந்துள்ளது , முற்காலத்தில் ஸ்ரீ மாதவ சதுர்வேதி மங்கலம், வீர நாராயண சதுர்வேதி மங்கலம், திருப்பேரூர், திருபிரம்மபுரம் என மருவி “திருப்பத்தூர்'” ஆனதாக வரலாறு கூறுகிறது. பிற்காலத்தில் , ஆதியூர் முதல் கோடியூர் வரை எட்டு திசைகளிலும் 10 திருத்தலங்கள் அமைந்திருப்பதால் திரு+பத்தூர், திருப்பத்தூர் என்ற பெயர் வந்ததாகவும் சிலர் கூறுகின்றனர். இப்படிப்பட்ட வரலாறு சிறப்பு மிக்க மாவட்டத்தில் அவ்வப்போது கிடைக்கப்பெறும் தொல்லியல் பொக்கிஷங்களை காண தூய நெஞ்சக் கல்லூரி தொல்லியல் துறை பேராசிரியர் பிரபு அவர்களின் பாரம்பரிய மையத்திற்கு நேரில் சென்றோம்.

பழங்கற்காலம், புதிய கற்காலம், பெருங்கற்காலம், பல்லவர்கள், சோழர்கள், கங்கர்கள், நாயக்கர்கள் காலத்தைச் சேர்ந்தவர்களின் தடயங்கள் இவைகள் . குறிப்பாக கழுமரம் நடுக்கல் , சதிக்கல், கொற்றவை நடுக்கல், பன்றி குத்தப்பட்டான் கல், பாறை கிறுக்கல் திருப்பத்தூர் வரலாற்றின் பொக்கிஷங்கள்.

கழுமரம் நடுக்கல்
கழுமரம் நடுக்கல்

கழுமரம் நடுக்கல் !
கழுமரம் என்பது ஒரு கொலைக் கருவி. மன்னிக்க இயலாத பெருங்குற்றம் புரிவோர்க்கு இத்தண்டனை வழங்கப்படும் அல்லது செய்த குற்றத்துக்குப் பொறுப்பேற்றுத் தாமே கழுமரம் ஏறுவதும் உண்டு. குற்றம் புரிந்தோரைக் கழுவின் முனையில் எண்ணெயைத் தடவிக் குற்றவாளியைப் பிடித்து அவனது ஆசனவாயைக் கழுமுனையில் வைத்து செருகிவிடுவார்கள். உடலின் எடையாலும், கழுவின் கூர்மையாலும், எண்ணெயின் வழுக்கலாலும் உடல் மெதுவாகக் கீழே இறங்கும். கொஞ்சம் கொஞ்சமாக மரம் உடலினுள் ஏறி குற்றவாளி இறந்து போவான்.

சாதாரணமாக இறந்தவர்களுக்கு சமயச் சடங்குகள் செய்து புதைப்பார்கள் அல்லது எரியூட்டுவார்கள். ஆனால், கழுமரம் ஏற்றப்பட்டவர்களுக்கு இது கிடையாது. கழுவிலேற்றப்பட்ட உடல் நாய்களுக்கும், நரிகளுக்குமே இரையாகும். நரியனேரியில் காணப்படும் இக்கழுமரத்தில் உள்ளவன் ஆளும் சிற்றரசனாகச் சித்தரிக்கப்பட்டுள்ளான்.
மிகப்பெரிய குற்றத்தைச் செய்ததற்குப் பொறுப்பேற்ற அவ்வரசன் தாமே முன்வந்து கழுவேறி உயிர் துறந்திருக்கக்கூடும். இல்லை என்றால் வேறு ஒரு வலிமை வாய்ந்த அரசனின் ஆளுகைக்கு உள்பட்ட ராஜ்ஜியத்தில் அவனுக்குக் கீழ் ஆட்சி செய்த இச்சிற்றரசன் செய்த குற்றத்துக்காக கழுவேற்றப்பட்டிருக்கலாம்.

சதிக்கல்
சதிக்கல்

சதிக்கல் !
இந்த சதிகல்லில் வீரனின் உருவம் இருக்கிறது . தீ பாய்ந்து இறந்த வீரனின் மனைவி உருவம் இருக்கிறது. இது போன்ற கற்களின் அருகே மூன்று பெண்கள் கைக்கூப்பி இருப்பது போன்று கல்லில் செதுக்கப்பட்டு இருக்கிறது. இவர்களை அப்சரப் பெண்கள் (வான மங்கையர்) என்பர். இறந்தவர்களை வான மங்கையர் கைகூப்பி வீரர் உலகிற்கு அழைத்துச் செல்வர் என்ற நம்பிக்கையில் இவ்வகைக் கற்களில் இவர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

மிட்டூர், ஏலகிரி மலையின் பின்பக்கத்தில் அமைந்துள்ள குண்டு ரெட்டியூர் அருகில் மரிமாணிக்குப்பம் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள கல்லும் பழைய வீரர்களின் வரலாற்றை எடுத்துக் காட்டுகிறது. வீரனின் மனைவி அவரோடு மடிந்த காரணத்தினால் தியாகத்தினை போற்றும் விதமாக வீரனுக்கு அருகில் காட்டப்பட்டுள்ளார். இதன் காரணமாக இக்கல்லானது ” சதிக்கல்‘ என அழைக்கப்படுகிறது. இக்கல்லின் சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டு ஆராய்ச்சி செய்ததில் இக்கல்லானது விஜயநகரப் பேரரசர்களின் ஆட்சிக்காலமான கி.பி.15-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கும் என தெரிகிறது.

கொற்றவை கல்
கொற்றவை கல்

கொற்றவை நடுக்கல் !
சிலப்பதிகாரத்தில் வர்ணிக்கப்படும் கொற்றவையின் அமைப்பை ஒத்த 1,000 ஆண்டுக்கால பழைமையான சோழர் சிற்பம், நாட்றாம்பள்ளி வட்டம் திம்மாம்பேட்டை பாலாற்றங்கரையில், ஒரு துறிஞ்சி மரத்தின் அடியில் அமைந்துள்ள கொற்றவை சிற்பத்தில் இடது காலை தரையிலும் வலது காலை அமர்ந்த நிலையில் உள்ள மானின் மீதும் வைத்து, நீண்ட காதுகளுடனும், வில், வாள், திரிசூலம் முதலிய ஆயுதங்கள் என எட்டுக் கரங்களுடனும் காட்சியளிக்கிறாள். மேலும், இடது காலடியில் எருமையின் தலை காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, சிலப்பதிகாரத்தில் வர்ணிக்கப்படும் கொற்றவையின் அமைப்பை ஒத்த நிலையில் இந்தக் கொற்றவை சிற்பம் அமைந்துள்ளது. கிபி 10 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இந்தக் கொற்றவை சிற்பம், தமிழர்களின் தாய்வழிச் சமூக மரபின் எச்சமாக உள்ளது” என்றார்.

பன்றி குத்தப்பட்டான் கல்
பன்றி குத்தப்பட்டான் கல்

பன்றி குத்தப்பட்டான் கல் !
பன்றிக் குத்திப்பட்டான் அக்காலத்தில் வேளாண் நிலங்களுக்குள் புகும் காட்டுப்பன்றிகள் விளை பொருள்களைச் சேதப்படுத்தி, பெரும் இழப்புகளை காட்டுப்பன்றிகள் ஏற்படுத்தும். உருவத்தில் பெரியதும், வலிமை நிறைந்த விலங்குமாகும். மனிதர்களையே கொல்லக்கூடிய ஆற்றல் கொண்டவை. இந்தப் பன்றிகளை கொன்று ஊரைப் பாதுகாத்து, தன் உயிரை நீத்த வீரர்களுக்கு நடுகல் எடுத்துப் போற்றும் வழக்கம் தமிழகத்தில் இருந்தது. அவ்வாறு எடுக்கப்படும் கல் பன்றிக் குத்திப்பட்டான் அழைக்கப்படும். ஆதியூரில் காணப்படும் இக்கல்லில் 2 வீரர்கள் ஒரு காட்டுப்பன்றியை தங்களது வேல்கம்பைக் குத்திக் கொல்வது செதுக்கப்பட்டுள்ளது.

இச் சிற்பத்தில் காதுகள் மற்றும் கழுத்தில் ஆபரணங்கள் அணிந்துள்ளனர். இடையில் சிறிய கத்தி இருக்கிறது இவ்வூரில் பெரும்பான்மையாக வாழும் ஆதிதிராவிடர் மக்கள் “கூத்தரப்பன்’ என அழைத்து குலதெய்வங்களாக இந்த சிற்பங்களையும் வழிபட்டு வருகின்றனர். இம்மக்களில் பலர் “கூத்தன்’ என்ற பழைமையான பெயர் கொண்டவர்களாகவும் இங்குள்ள சதிக்கல்லிலும், காணப்படும் வீரர்கள் இம்மக்களது முன்னோர்களாவர்.

மேலும் “கூத்தர்’ என அழைக்கப்படுவோர் சங்க இலக்கியங்களில் விவரிக்கப்படும் மிகப் பழைமையான இனக்குழு மக்களாவர். யானையை பயன்படுத்தும் கட்டுப்படுத்தப் அங்குசத்தையும், பழைமையான போர் வாளையும் இப்பகுதி மக்கள் இன்று வரை பாதுகாத்து வருகின்றனர். இவ்விரு பொருள்களும் இங்குள்ள சிற்பங்களின் வரலாற்று உண்மைத் தன்மையை விவரிப்பதாக உள்ளன. இச்சிற்பங்களின் வடிவத்தைக் கொண்டு இவை கிபி. 15- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கக்கூடும்.

பாறை கிறுக்கல் !
பாறை கிறுக்கல் !

பாறை கிறுக்கல் !
மொழிகள் இல்லாத காலத்தில் தன்னுடைய உள்ளத்தில் தோன்றும் உணர்வுகளை வெளிப்படுத்த பாறை மீது கிறுக்கல் (ஓவியம்) செய்தான். இதனை அடையாளம் படுத்த நினைத்தபிறகு சிலவற்றை பயன்படுத்தி ஓவியம் ஆக்கினான். சோழனூர் கல்யாண முருகன் கோயில் அருகே கற்கால மக்கள் தீட்டிய அழகிய பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய வெண்மை நிறப்பாறை ஓவியங்கள் என தெரிய வருகிறது 6 அடி அகலமும் 12 அடி நீளமும் கொண்ட மையப்பகுதியில் ஓவியங்கள் பரவலாக வரையப்பட்டுள்ளன. இதில், குறிப்பிடத்தக்கவை என்ன வென்றால், 13 மனித உருவங்கள் இதில் காணப்படுகின்றன. விலங்குகளும், மனிதர்களும் இங்குள்ள ஓவியங்களில் 6 மனித உருவங்கள் ஒரு கையில் ஆயுதங்களோடு விலங்கின் மீது அமர்ந்த நிலையில் மறுகையில் விலங்கின் கழுத்துப் பகுதியை பற்றிய நிலையில் சண்டைக்குப் புறப்படுவது போல வரையப்பட்டுள்ளன.

இங்குள்ள ஓவியங்கள் விவரிக்கும் செய்தி என்ன வென்றால் இனக்குழுக்களுக்குள் எழும் சண்டை நிகழ்வினை விவரிப்பதாகக் கொள்ளலாம். மேலும், பெரிய அளவிலான வேட்டை நிகழ்வினை அறிவிப்பதாகவும் கருத இடமுண்டு. அந்த கால மக்களின் வாழ்வியலை வெளிக்காட்டும் ஒப்பற்ற சான்றாக இவை அமைந்துள்ளன. இந்த ஓவியங்கள் அனைத்தும் ஏறத்தாழ 3500 – 4000 ஆண்டுகள் பழமையானவை என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பாறை ஓவியங்களும் அவற்றின் காலக்கணிப்பும், தொன்மையான ஓவியங்கள் உலகின் பல பகுதிகளில் இயற்கையாய் அமைந்துள்ள குகை மற்றும் பாறை ஒதுக்குகளில் கண்டறியப்பட்டுள்ளன. சந்திரபுரம், செல்லியம்மன் கொட்டாய் ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே இதுவரை வெண்மை நிறப்பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன.” என வகுப்பறை பாடங்களை போலவே, அதே நேரம் சோர்வு தட்டாமல் விவரித்து முடித்தார் அவர்.

பேராசிரியர் பிரபு -
பேராசிரியர் பிரபு –

மண்ணில் புதைந்துக் கிடக்கும் பொக்கிஷங்களைப் போலவே, பேராசிரியர் பிரபு – போன்ற தொல்லியல் துறை சார்ந்த பேராசிரியர்களின் களப்பணிகளும் புதைந்துதான் கிடக்கின்றனவோ என்ற கேள்வி இயல்பாகவே எழுந்தது.

நேர்காணல் : மணிகண்டன்.

1 Comment
  1. மணிகண்டன் says

    சிறப்பான செய்தி
    வாழ்த்துகள் அங்குசம் இதழ்

Leave A Reply

Your email address will not be published.