கவிப்பேரரசு வைரமுத்துவின் மலேசிய வருகையால் இந்துக்களுக்கு என்ன கெடுதல் நிகழ்ந்து விடும் ? – முனைவர் குமரன் வேலு
கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு எதிர்வரும் 08.03.2024ஆம் நாள் மலேசியத் தமிழ் அமைப்பு ஒன்று, வைரமுத்து எழுதிய மகாகவி நூல் வெளியிட்டு விழாவை நடத்துகின்றது. அந்த விழாவில் வைரமுத்துவுக்கு “பெருந்தமிழ்” விருதும் வழங்கப்படவுள்ளது. இந்நிலையில், மலேசிய இந்து அமைப்புகள் வைரமுத்து இந்து மதத்தைப் புண்படப் பேசியவர். அவர் மலேசியா நாட்டிற்கு வர அனுமதிக்கக்கூடாது என்று பொதுவெளிகளில் பரப்புரை செய்யப்படுகின்றது. மலேசிய நாளிதழ்களிலும் பரபரப்பாகச் செய்திகள் வெளியிடப்படுகின்றது. இந்நிலையில் மலேசியத் தமிழ் அறிஞர் முனைவர் குமரன் வேலு அவர்கள் முகநூலில் வெளியிட்டுள்ள பதிவை அங்குசம் செய்தி உலகத் தமிழர்களின் பார்வைக்கு வைக்கின்றது.
கவிப்பேரரசு வைரமுத்துவின் மலேசிய வருகையால் இந்துக்களுக்கு என்ன கெடுதல் நிகழ்ந்து விடும்? – முனைவர் குமரன் வேலு
சக்கீர் நாயக் என்னும் வட இந்திய முசுலீம் ஒருவர் இந்து மதத்தின் தெய்வங்கள், வழிபாடுகள் குறித்துக் கடந்த காலத்தில் கேள்வி எழுப்பியவர். இந்தியர்களை இழித்தும் பேசியவர். அவர் மலேசியாவில் தான் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.
சக்கீர் நாயக்கின் வாயை அடைக்கவும் அவரை மலேசிய மண்ணில் இருந்து அப்புறப்படுத்தவும் மலேசிய இந்து அமைப்புகள் பெருமுயற்சி எடுத்தன. எனினும் அவை தோல்வியில் முடிந்தன. அத்தோடு இந்து அமைப்புகளின் கூக்குரலும் ஓய்ந்து விட்டது.
யாராக இருந்தாலும் மற்ற மதத்தினரின் நம்பிக்கைகள் பற்றி கேள்வி எழுப்புவதுடன் இழித்தும் பழித்தும் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பேசும் செயல்கள் அனைத்தும் கண்டிக்கத்தக்கவை. சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கலாம்.
இதனிடையே, இலக்கியத்திற்காக இந்திய அரசின் பத்மபூஷன் விருது பெற்ற கவிப்பேரரசு அண்மைய காலமாக இந்து மதத்தை அவமதித்து விட்டார் இந்துக்களைப் புண்படுத்தி விட்டார் என வன்மையான ஒரு கண்டனத்துடன் உலாவந்து கொண்டிருக்கின்றார். அவர் கிருத்துவ மதத்தைத் தழுவிக் கொண்டார் எனவும் சிலர் கதைகளை அரங்கேற்றி வருகின்றனர். திராவிடத்துக்கும் நாத்திகத்துக்கும் முட்டு கொடுப்பவராக அவரைச் சித்தரிக்க முயலுகிறார்கள்.
அதனால் அவர் மலேசிய நாட்டுக்குள் வரக் கூடாது, நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடாது எனும் குரல்கள் வீரியத்துடன் கேட்கத் துவங்கி உள்ளன. அது குறித்துத் தமிழ் மலர் நாளிதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறது. ஒரு கருத்துருவாக்கத்தைக் கட்டமைக்கும் பணியில் சிலர் இறங்கி இருக்கின்றனர் என்பதை நம்மால் அவதானிக்க முடிகிறது. ஆகக் கடைசியாகப் பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் மாண்புமிகு சிவநேசன் அவர்கள் கவிஞர் வைரமுத்து அவர்களை நாட்டுக்குள் விடக்கூடாது, உள்துறை அமைச்சரைச் சந்திப்பேன் , வைரமுத்துக்குத் தடைவிதிக்கச் சொல்வேன் என வீராவேசமாக முழங்கி வருகிறார் என நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது.
வைரமுத்துவின் வருகையால் நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும், இந்துக்களின் உடலுக்கும் உயிருக்கும் உள்ளத்துக்கும் ஆபத்து ஏற்படும் என்றால் அவருக்குத் தடைவிதிக்கக் கோரலாம். அப்படி ஏதும் நிகழ்வதற்குச் சாத்தியம் இருப்பதாகத் தெரியவில்லை.
கடந்த 11-2-2024 இல் ம.இ.காவின் தேசியத் தலைவர் திரு.விக்கினேசுவரன் மகள் திருமணத்திலும் வைரமுத்து அவர்கள் கலந்து கொண்டார். வைரமுத்து அவ்வப்போது மலேசியாவுக்குள் வருவதும் போவதுமாக இருப்பவர். அப்போதெல்லாம் அவருக்குத் தடைவிதிக்க யாரும் கோர வில்லை.
இம்முறை 8-3-2024 இல் விருது வாங்கவும் மகாகவிதை எனும் தன்னுடைய நூலை வெளியீடு செய்யவும் ஓர் தமிழ் இலக்கியவாதியாக மலேசியா வருகிறார் வைரமுத்து. அவருக்குத் தடை விதிக்கச் சொல்லி முழங்குகின்றார் டி.ஏ.பி.கட்சியின் அரசியல்வாதியான மாண்புமிகு சிவநேசன். அவரின் குரல், எல்லாருக்குமான அரசியல்வாதி என்னும் எல்லை தாண்டி ஓர் இந்து மதவாதியின் குரல்போலவே எனக்கு ஒலிக்கிறது.
கவிப்பேரரசு வைரமுத்து மீது மட்டும் ஏன் இத்துணை வன்மம் காட்டப்படுகிறது?புகழ் வெளிச்சத்தில் உள்ளவர் என்பதனாலா?
உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்குத் தீவிர நாத்திகர்கள் சிலரைத் தமிழ் நாட்டில் இருந்து அழைத்து வந்து மேடையில் பேசவைத்தவர்களுக்குத் தமிழ் மொழியும் இலக்கியமும் நாத்திகர்க்கும் சொந்தம் எனும் விடயம் எல்லாம் தெரிந்திருக்கிறது.
தமிழகத்தில் இந்து சநாதனக் கொள்கைகளைத் தீவிரமாக எதிர்க்கின்ற வீரமணி போன்றவர்களும் மலேசியாவுக்கு வரப்போக இருக்கின்றனர்.
ஆனால் வைரமுத்துவை மட்டும் வரவிட மாட்டேன் என்றால் எப்படி? வைரமுத்துவை வரவிடாமல் தடுப்பதன் மூலம் இந்து மதத்துக்கும் அதன் நம்பிக்கைக்கும் எதிரான குரல்களை எதிர்காலத்தில் ஒடுக்கி விடலாம், அச்சுறுத்தலாலும் அடக்குமுறையாலும் தகர்த்துவிடலாம் என நினைக்கின்றனரோ தெரியவில்லை. இது மனித உரிமையை மீறும் செயல் என்பது என் கருத்து.
கவிப்பேரரசு வைரமுத்து திரைப்படப் பாடலாசிரியராகப் பட்டையைக் கிளப்பியவர். புதுக்கவிதை படைத்துப் பலரின் மனத்தில் பூத்தவர். கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சிக் காவியம் எழுதிப் பேர்பெற்றவர். அவர் சமூக அக்கறை உள்ள ஓர் இலக்கியவாதி. தான் சார்ந்துள்ள தமிழ் சமூகத்தில் ஊறிக் கிடக்கும் மூட நம்பிக்கைகளை ஒரு நாத்திகராக அவர் கண்டிக்கின்றார் என நான் நினைக்கிறேன்.
அவர் மத நம்பிக்கையுள்ள மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துகிறார் எனக் கருதினால் அவரின் படைப்புகளைப் புறக்கணியுங்கள். அவரின் நிகழ்ச்சிகளுக்குப் போகாதீர்கள். வைரமுத்து எழுதிப் பட்டி தொட்டியெல்லாம் ஒலிக்கும் பாடல்களைக் கேட்காதீர்கள். அவருக்கு விழா எடுத்து விருது வழங்க விரும்பும் தீவிர ரசிகர்களில் இந்துக்களும் உண்டு. இந்து அல்லாதவர்களும் உண்டு. தமிழ் ஆர்வலர்களும் உண்டு என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
8-3-2024 இல் நடைபெற விருப்பது தமிழ் இலக்கிய நிகழ்ச்சி. அதற்குத் தடைவிதிக்க நினைப்பது தமிழுக்கே தடைவிதிப்பதாகும். ‘நாங்கள் முதலில் தமிழர்கள், பிறகுதான் இந்துக்கள்’ என்போர்களும் முருகனுக்குக் காவடி தூக்கி ஆடுபவர்களும் வைரமுத்துவின் நிகழ்ச்சிக்குப் போக நினைக்கின்றனர். அந்த நிகழ்ச்சிக்குத் தடைவிதிக்க நினைக்கும் அரசியல்வாதிகள் இதை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இலக்கியவாதிகள் சமூக அவலங்களையும் அநீதிகளையும் வெளிக்கொணர்ந்து மக்களுக்குப் பாடம் கற்பிப்பவர்கள். சமூக உருமாற்றத்திற்கு அவர்களும் பங்களிக்கின்றனர். அவர்கள் குற்றவாளிகள் என்றால் சட்டத்தின் மூலம் தண்டிக்கலாம். சட்டத்தின் முன் எல்லாரும் சமம். நமது நாட்டின் முன்னாள் பிரதமர் ஊழலுக்காகச் சட்டத்தால் தண்டிக்கப்பட்டுச் சிறையில் இருக்கிறார். இந்நாள் பிரதமரும் சட்டத்தால் ஒருகாலத்தில் தண்டிக்கப்பட்டவர்தான்.
இலக்கியவாதிகளைச் சட்டத்தால் தண்டிக்க இயலாத போது அவர்களைச் சட்டத்தின் மூலம் ஒடுக்கி ஓரங்கட்டலாம் என்பது ஆபத்தான விளையாட்டு. அது மோசமான முன்னுதாரணம் ஆகிவிடும் என்பதை அக்கறையோடு பதிவிடுகிறேன்.
தமிழ் சமூகம் என்றுமே மதத் தீவிரவாதம் காட்டும் சமூகம் அல்ல. மத நல்லிணக்கத்துடன் வாழவே தமிழ் சமூகம் விரும்பும். தமிழும் சமயமும் இரு கண்கள் என்றாலும் இரண்டு கண்களும் தனித்தனியாகத்தான் உள்ளன.
தமிழையும் மதத்தையும் தனித்தனியாகப் பார்க்கும் மனிதம் என்று மலரப்போகிறதோ? என்று குறிப்பிட்டுள்ளார்.