அரசு பேருந்துகளில் பேருந்து நிறுத்த ஒலி அறிவிப்பு அறிமுகம்!
அரசு பேருந்துகளில்
பேருந்து நிறுத்த ஒலி அறிவிப்பு அறிமுகம்!
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் நகர்ப் பேருந்துகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘பேருந்து நிறுத்த ஒலி அறிவிப்பு’ திட்டத்தை தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், புவிசார் நவீன தானியங்கி (GPS) அறிவிப்பான் மூலம் இயங்கும் இத்திட்டத்தை ஏற்கெனவே சென்னையில் தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்துள்ள நிலையில், தற்போது கும்பகோணம் கோட்டத்துக்குட்பட்ட நகர்ப் பேருந்துகளில் இத்திட்டம் தற்போது துவக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பேருந்து நிறுத்தங்களின் பெயர்களை பயணிகள் முன்னரே அறிந்து கொள்ளும் வகையில் கும்பகோணம் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் புவிசார் நவீன தானியங்கி அறிவிப்பான் பொறுத்த திட்டமிடப்பட்டு முதற்கட்டமாக திருச்சியில் 40, கரூரில் 15, தஞ்சாவூரில் 25, கும்பகோணத்தில் 20 என மொத்தம் 100 பேருந்துகளில் இத்திட்டம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இப் பேருந்து நிறுத்த ஒலி அறிவிப்பு அடுத்த பேருந்து நிறுத்தம் வருவதற்கு 100 மீட்டர் முன்னரே அறிவிக்கப்படும். இதனால்இ தாங்கள் இறங்க வேண்டிய பேருந்து நிறுத்தங்களை பயணிகள் எளிதில் அறிந்து கொண்டு எவ்வித சிரமம் இன்றியும் காலதாமதமின்றியும் பேருந்திலிருந்து இறங்க ஏதுவாக இருக்கும் என்றார் அமைச்சர்.
இத் தானியங்கி ஒலி அறிவிப்பு, பார்வைத்திறன் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் வெளியூர் பயணிகளுக்கு பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் சிவசங்கர்.
மேலும்இ ஓட்டுநர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் சார்பில் ஓட்டுநர் கையேடுகளை வழங்கினார் அமைச்சர் சிவசங்கர்.
இந்நிகழ்ச்சியில்இ மாவட்ட ஆட்சியர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன் (திருவையாறு), க.அன்பழகன் (கும்பகோணம்), தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜ்மோகன், பொது மேலாளர்கள் ஜெபராஜ் நவமணி, முகமது நாசர், மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.