குவிந்து கிடக்கும் வழக்குகளும் பணியாளர் பற்றாக்குறையும் : அழுத்தத்தில் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் !

தலைமை அலுவலகத்தில் எஸ்.பி.க்கே போதுமான பணியாளர்கள் கிடையாது. ஆனாலும், அன்றாட வேலை மட்டும் பெண்டு நிமித்துது … இதையெல்லாம் எங்க போயி சொல்றது?

0

குவிந்து கிடக்கும் வழக்குகளும் பணியாளர் பற்றாக்குறையும் :
அழுத்தத்தில் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் !

பொருளாதாரக் குற்றப்பிரிவு என்று தமிழக போலீசில் ஒரு பிரிவு செயல்பட்டு வருகிறது என்பதே பலருக்கும் தெரியாத நிலையில், நியோமேக்ஸ் விவகாரம் வெளியான பிறகுதான் பரவலாக அத்துறையின் பெயரே வெளியில் புழங்க ஆரம்பித்தது என்றே சொல்லலாம்.

2 dhanalakshmi joseph

தமிழகம் முழுவதும் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் கையாண்டு வரும் ஆயிரக்கணக்கான வழக்குகளில், நியோமேக்ஸ் வழக்கும் ஒன்று அவ்வளவுதான். ஆனால், ஒவ்வொரு முறையும் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நியோமேக்ஸ் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரும் பொழுதெல்லாம், பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசாரின் நடவடிக்கைகளில் நீதிபதி அதிருப்தி தெரிவித்ததை போலவே செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

குறிப்பாக, நியோமேக்ஸ் நிறுவனத்தின் முன்னணி இயக்குநர்களுக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்ய வேண்டும்; அட்வகேட் கமிஷனர்களை நியமிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை என்று சேலஞ்ச் செய்த வழக்கு உள்ளிட்டு பல்வேறு கோரிக்கைகளுடன் தொடுக்கப்பட்ட வழக்குகளை ஒன்றாக விசாரித்து வரும் சென்னை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதி தண்டபாணி, “நிதிநிறுவன மோசடி வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களிடம் கட்டப்பஞ்சாயத்து செய்ய நீதிமன்றம் அனுமதிக்காது.” என்பதாக கருத்தை தெரிவித்ததாகவும்; ”நிதிநிறுவன மோசடிகளை தடுக்க பல்வேறு வழிகாட்டுதல்களை நீதிமன்றம் வகுக்கும் நேரம் வந்துவிட்டது. ரூ1000 கோடிக்கு மேல்  நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்க தனியாக சிறப்பு புலனாய்வுக்குழுவை நியமிப்பது குறித்தும் பரிசீலிக்க வேண்டும்.” என்பதாகவும் கருத்து தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாயின.

- Advertisement -

- Advertisement -

டி.எஸ்.பி. மனிஷா

இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்திருந்த நியோமேக்ஸ் வழக்கின் விசாரணை அதிகாரியும் மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசு சிறப்பு டி.எஸ்.பி.யுமான மனிஷா, “இதற்கு முன்னதாக 71.5 கோடி மதிப்பிலான நியோமேக்ஸ் சொத்துக்களை அட்டாட்ச்மென்ட் செய்ய 28 நாட்கள் அவகாசம் வழங்கியிருந்தார்கள். இந்த அவகாசத்திற்குள் 11.5 கோடி மதிப்பிலான சொத்துக்களை மட்டுமே அட்டாட்ச் செய்ய முடிந்தது என்ற எங்களது சூழலை விளக்கினோம். எங்களது விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, “வருவாய்த்துறை ஆவணங்களை அட்டாட்ச் செய்வதற்குரிய பலம் நம்மிடம் இல்லை. இதிலிருந்துதான், 1000 கோடிக்கு அதிகமான மோசடிகளை உடைய வழக்குகளை கையாளுவதற்கு ஏற்ற வகையில் உள்துறை செயலகத்திற்கும், பதிவுத்துறைக்கும் டைரக்சன் வழங்கலாம் என்றிருக்கிறேன். அதனை மார்ச் 21 அன்று வெளியிடுகிறேன்.” என்பதாகத்தான் கருத்தை பதிவு செய்திருந்தார். அதாவது, 1000 கோடிக்கும் மேல் மோசடி நடைபெற்றிருப்பதாக கருதும் வழக்குகளில் குறிப்பாக அட்டாட்ச்மெண்ட் வழிமுறைகளை எளிதாக நிறைவேற்றும் பொருட்டு, சட்ட நடைமுறைகளை எளிமையாக்கும் பொருட்டு ஒரு சிறப்பு அதிகாரியை நியமிக்க ஆணையிடுவதாகத்தான் கருத்தை தெரிவித்திருந்தார்.” என்று விளக்கமளித்திருந்தார்.

நியோமேக்ஸ் வழக்கு என்றில்லை, ஒவ்வொரு மாவட்டத்திலும் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் வசம் உள்ள நூற்றுக்கணக்கான வழக்குகளிலும்கூட, அவ்வழக்குகளை கையாளுவதற்கேற்ப பணியாளர்கள் இல்லை என்பதாக புலம்புகிறார்கள் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் வட்டாரத்தில்.

”எங்களது உயர் அதிகாரிகளை குறை சொல்லி எதுவும் இல்லை. சட்டம் ஒழுங்கு பிரிவில் டி.எஸ்.பி. அந்தஸ்தில் பணியாற்றும் போலீசு அதிகாரிகளோடு எங்கள் துறை அதிகாரிகளை ஒப்பிட முடியாது. போதிய பணியாளர்கள் இல்லாதபோதும், ஓசையில்லாமல் தமக்கு ஒதுக்கப்பட்ட கடமையை சரியாக செய்து வருகிறார்கள். நேரம் காலம் பார்க்காமல் கடுமையாக உழைக்கிறார்கள். எவ்வளவுதான் நாங்களும் ஈடு கொடுக்கிறது சொல்லுங்கள். டி.எஸ்.பி.க்கு மட்டும்தான் ஜீப் இருக்கிறது. இன்ஸ்பெக்டர்களுக்கு கிடையாது. எங்களது பணியை செய்வதற்குரிய பல அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல்தான் இருக்கிறது. இருப்பதை வைத்துக் கொண்டுதான் முடிந்தவரை மல்லுக்கட்டி வருகிறோம்.” என்கிறார் ஒரு மாவட்டத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி.

திருச்சியில் பிரணவ் ஜூவல்லரி வழக்கு தொடர்பாக புகார் குவிந்து கொண்டிருந்த சமயத்தில், எஸ்.ஐ. கேடரில் உள்ள பெண் போலீசார் பலர் போதிய இருக்கை வசதிகள் கூட இல்லாமல், வராண்டாவில் வெறும் தரையில் அமர்ந்து கொண்டு பள்ளிக்கூடப் பிள்ளைகள் வீட்டுப் பாடம் எழுதுவதைப் போல கைநோக வழக்குகளை ஆவணப்படுத்திய நிகழ்வுகளை நேரில் கண்டிருக்கிறோம்.

4 bismi svs

நியோமேக்ஸ் விவகாரத்தில் இன்றும்கூட நாளொன்றுக்கு 20-க்கும் மேற்பட்டோர்கள் புதியதாக புகார் கொடுக்க மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு படையெடுத்து வருகிறார்கள். தற்போதைய நிலையில், அதிகபட்சமாக நாளொன்றுக்கு 20 புகார்களை மட்டுமே பதிவு செய்யும் சூழல் இருப்பதால் அதற்கு மேலான எண்ணிக்கையில் புகார் கொடுக்க வருபவர்களை வரிசை கிரம அடிப்படையில் வேறொரு நாள் சொல்லி அனுப்பி வைக்கிறார்கள்.

”வெறுமனே புகாரை பதிவு செய்வதில் பலனில்லை. போதுமான ஆவணங்களோடும், உரிய வழிமுறைகளோடும் புகாரை திருத்தமாக பதிவு செய்து வருகிறோம். கைவசம் இருக்கும் கணிணி பயன்பாடு மற்றும் பணியாளர்களை வைத்துக் கொண்டு நாளொன்றுக்கு அதிகப்பட்சம் 20 புகார்களைத்தான் பதிவு செய்ய முடிகிறது. கூடுதலாக, கணிணி வசதி ஏற்படுத்தி தருவதோடு, அதை கையாளும் திறன் கொண்ட போலீசாரையும் சிறப்பு நேர்வாக பணியமர்த்தினால் மட்டுமே இதனை ஈடுகட்ட முடியும். குறைந்தபட்சம் ஏ.ஆர். போலீசாரை இந்த பணிக்கு அமர்த்திக் கொள்ள அனுமதித்தால் எங்களது பணிச்சுமை சற்று குறையும். புகார்தாரர்களுக்கும் அலைச்சல் இருக்காது.” என்கிறார்கள் மதுரை வட்டாரத்தில்.

”பொருளாதாரக் குற்றப்பிரிவு என்று ஒரு பிரிவே அவசியமில்லாத ஒன்று. இதையே கலைத்துவிடலாம்” என்கிறார்கள் தடாலடியாக, பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசை சேர்ந்த ஒரு பிரிவு போலீசார்.

“அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு முதலீடு போட்டவர்களை ஏமாந்தவர்களாக அணுகுவதே தவறானது. அவர்களையும் குற்றவாளிகளின் மற்றொரு தரப்பாகவே கருத வேண்டும். ஊர் முழுக்க ஏமாற்றி பணத்தை பறித்து வழக்கில் சிக்கியவன் போலீசாரோடு சரிக்கு சமமாக உட்கார்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் நிலைமையையெல்லாம் என்னத்த சொல்ல? சட்டம் – ஒழுங்கு போலீசை போல தடாலடியாக எதையும் செய்துவிட முடியாது. முழுக்க முழுக்க டாகுமெண்டேஷனை ஆதாரமாக கொண்டுதான் வழக்கை நகர்த்த முடியும். எந்த ஒரு வழக்கும் பத்து வருடங்களுக்கு குறைவாக முடிந்ததாக வரலாறு இல்லை.

EOW-க்கு எதிராக 2900-க்கும் அதிகமான வழக்குகளை போட்டு அசரடித்த சுபிக்ஷா மோசடி வழக்கு !

ஒரு கேசில் வழக்கு போட்டு ரிமாண்டு காட்டினால். அடுத்து அவன் பெயில் போடுவான். வழக்கை விசாரித்து தொடர்புடைய வங்கி கணக்குகள், சொத்துக்களை அட்டாட்ச்மென்ட் செய்ய முயற்சிப்போம். அதற்கு இடையூறாக, இன்னொரு வழக்கை போடுவான். சட்டத்தை பயன்படுத்தி எவ்வளவு இடையூறு செய்ய முடியுமோ, அத்தனையும் செய்வார்கள். வழக்கில் புலன்விசாரணையை செய்வதா? இவன் போடுற வழக்குக்கு பின்னாடியே பதில் சொல்லிட்டு போறதா? சலித்து போகிற அளவுக்கு இழுத்தடிப்பாங்க. ஆனாலும், நிதானமா எங்க வேலையை நாங்க செஞ்சாகனும்.

2010 இல் போடப்பட்ட வழக்கில் 14 வருடம் கழித்தும் இன்று வரையில் புகார் வந்து கொண்டு இருக்கிறது. முடிவுக்கு வந்த சில வழக்குகளில் புகார்தாரர்களை தேடிக் கொண்டிருக்கிறோம். ஒரு வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணைக்கு வந்த பிறகும்கூட, அதன்பிறகு புதியதாக வரப்பெற்ற புகாரின் அடிப்படையில் கூடுதல் குற்றப் பத்திரிக்கையையும் தாக்கல் செய்யும் சூழலையும் சந்தித்து வருகிறோம். டான்பிட் சிறப்பு சட்டம் வரம்புக்குட்பட்டது. போலீசு, நீதிமன்றம், வருவாய்த்துறையுடன் இணைந்து தீர்வு காண வேண்டிய வழக்குகள் இவை.” என்கிறார்கள் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசு வட்டாரத்தில்.

“அதெல்லாம் விடுங்க பாஸ். ஒவ்வொரு மாவட்டத்திலும் இயங்கும் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசு நிலையங்களுக்கென்று சொந்த கட்டிடம் இல்லை. வாடகை வீட்டில் குடித்தனம் இருப்பதை போலத்தான் வசதி குறைப்பாட்டுடன் இயங்கி வருகிறோம். கைக்காசை போட்டு செலவு செய்துவிட்டு கணக்கெழுதி காத்திருந்து காசை வாங்க வேண்டிய நிலைதான் நீடிக்கிறது. அவ்வளவு ஏன்? தலைமை அலுவலகத்தில் எஸ்.பி.க்கே போதுமான பணியாளர்கள் கிடையாது. ஆனாலும், அன்றாட வேலை மட்டும் பெண்டு நிமித்துது … இதையெல்லாம் எங்க போயி சொல்றது?” என தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக புலம்புகிறார்கள் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசு வட்டாரத்தில்.

அங்குசம் புலனாய்வுக் குழு.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.