நம்பினார் கெடுவதில்லை நான்குமறை தீர்ப்பு ! நம்பிக்கை வைத்து தான் கெட்டுக் கொண்டிருக்கின்றோம் நாம் !! – ஆதங்கப்படும் ஐபெட்டோ அண்ணாமலை !

0

நம்பினார் கெடுவதில்லை நான்குமறை தீர்ப்பு! நம்பிக்கை வைத்து தான் கெட்டுக் கொண்டிருக்கின்றோம் நாம் !! –
ஆதங்கப்படும் ஐபெட்டோ அண்ணாமலை ! முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா பிறந்தநாளில், அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் சங்க மூத்த நிர்வாகியாக போராட்ட களத்தில் அவருடனான மலரும் நினைவுகளை அசைபோடுகிறார், ஐபெட்டோ அண்ணாமலை. அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் மீது கொடும் நடவடிக்கைகளை செல்வி ஜெயலலிதா ஏவியபோது, ஆதரவாக துணை நின்ற கலைஞரின் பாத்திரத்தை பதிவு செய்யும் அவர், “நம்பினார் கெடுவதில்லை என்பது நான்குமறை தீர்ப்பு! என்பார்கள்! ஆனால், நம்மைப் பொறுத்தவரையில் நம்பிக்கை வைத்துதான் கெட்டுக் கொண்டிருக்கின்றோம்!” என்பதாக தற்போதைய நிலையையும் இடித்துரைத்திருக்கிறார், ஐபெட்டோ அண்ணாமலை.

ஐபெக்டோ அண்ணாமலை
ஐபெக்டோ அண்ணாமலை
2 dhanalakshmi joseph

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள புலனப்பதிவில், ”தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் அவரை நெஞ்சிருக்கும் வரை மறக்க மாட்டார்கள். புதிய ஓய்வூதியத் திட்டத்தை இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழ்நாட்டில் அமல்படுத்தி, பெற்று வந்த பணப்பலன்களை எல்லாம் முடக்கிய போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஒட்டுமொத்த சக்திகளும் ஒன்று திரண்டு ஜாக்டோ ஜியோ என்ற பதாகையினை உயர்த்திப் பிடித்து களத்தில் நின்று போராடினோம்!

ஒரே நாளில் ஒன்னேமுக்கால் லட்சம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள். 999 பேர் 8 மாத காலம் நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டு, ஒட்டுமொத்த தலைமைச் செயலகமும் பாதிக்கப்பட்டு நிலைகுலைந்து நின்றார்கள். மன சித்திரவதையும், உடல் சித்திரவதையும், பொருளாதார இழப்புகளும், சிறைவாசங்களும், உயிர் சேதங்களும் என எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு தலைமை தாங்கி களத்தில் நின்று போராடினார்கள்.

- Advertisement -

- Advertisement -

உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பினைப் பெற்று… அவரவர்கள் பணியில் சேர்ந்து இழந்த ஊதியத்தினையும் பெற்றோம்! என்பது வரலாறு.
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. மக்களின் செல்வாக்கினைப் பெற்றவர் செல்வி ஜெயலலிதா அவர்கள். ஆனால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுடைய குடும்பத்தாரின் கோபம் காரணமாக 40 நாடாளுமன்றத் தொகுதியினையும் இழக்கச் செய்தது.

சோ ராமசாமி
சோ ராமசாமி

துக்ளக் ஆசிரியர் ‘சோ ராமசாமி அவர்கள் போராட்டக் காலத்தில் நமக்கு எதிராக எழுதி வந்தவர். 40 நாடாளுமன்றத் தொகுதிகளையும் இழந்ததற்குப் பிறகு ஒட்டுமொத்த ஆசிரியர் அரசு ஊழியர்களின் கோபத்தின் விளைவு தான் நாம் 40 நாடாளுமன்ற தொகுதிகளையும் இழந்தோம்! அவர்களைத் திரும்பிப் பார்க்காமல் விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் நாம் செய்த தவறுதான் இந்த இழப்புகளுக்கு காரணம் என்று அதே துக்ளக்கில் எழுதினார்.

பிரதமரைப் பார்த்து மோடியா? லேடியா? என்று சேலஞ்சாக எடுத்துக் கொண்டு தேர்தல் களத்தில் நின்றவர். கவியரசர் கண்ணதாசன் அவர்கள் இந்திராகாந்தி அவர்களைப் பற்றி எழுதுகிற போது “விந்திய மலைகள் தோறும் எதிரொலிக்கும் இந்திராபேர் கேட்டாயோ!” என்று எழுதினார். இந்திராகாந்தி அவர்களுக்குப் பிறகு அரசியலில் ஒரு தைரியமான பெண்மணி ஜெயலலிதாதான் என்பதை தமிழ்நாடு அல்ல; இந்தியாவும் அறியும்.

தலைவர் கலைஞர் 2003 ஜேக்டோ ஜியோ போராட்டத்தில் நம்மை பாதிப்பில் இருந்து காப்பாற்ற அன்று முழுவதுமாக பாடுபட்டார் என்பதை நெஞ்சிருக்கும் வரை மறக்க முடியாது. கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட ஏனைய தலைவர்களும், நமக்கு முழு பாதுகாப்பாக நின்றார்கள்.

முதல்வர். மு.க.ஸ்டாலின்
முதல்வர். மு.க.ஸ்டாலின்

ஆனால் இன்றைய நிலைமை என்ன? எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது மாண்புமிகு முக.ஸ்டாலின் அவர்கள் அளித்த வாக்குறுதிகள் அத்தனையும் அவர் முற்றிலும் மறந்தே போய்விட்டார். ஆனால் நாம் மறக்கவில்லை ! போராட வேண்டிய நேரத்தில் நாம் போராடி உறுதியாக நிற்பது இல்லை! நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதும் நமதே! என்ற சபதத்துடன் தேர்தல்களத்தில் முதலமைச்சர் அவர்கள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் இறங்கி விட்டார்கள். எது நடந்திருந்தாலும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடக்கும்போதே நடந்திருக்க வேண்டும். நடைபெறவில்லை!! எதுவுமே நடைபெறவில்லை!!! சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிற போது நம் நினைவுகள் அரசுக்கு வரவில்லை! பிப்ரவரி 15 ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்று இருந்தால் முதலமைச்சர் அவர்களின் பதிலுரையில் அது எதிரொலித்து இருக்கும் இது 100 % உண்மையாகும்.

ஆசிரியர்கள் சங்க போராட்டம்
ஆசிரியர்கள் சங்க போராட்டம்
4 bismi svs

நம்பினார் கெடுவதில்லை என்பது நான்குமறை தீர்ப்பு! என்பார்கள்! ஆனால் நம்மைப் பொறுத்தவரையில் நம்பிக்கை வைத்துதான் கெட்டுக் கொண்டிருக்கின்றோம்! நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை நம்மை திரும்பிப் பார்ப்பதற்கு எதிர் கட்சிகள் கூட தயாரில்லை!!! என்பதை நாம் உணர வேண்டும்! உணர வேண்டும்!! எந்த முடிவெடுத்தாலும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நம்பிகெட்டது போதும்! இனி நம்பிக்கையுடன் களத்தில் நிற்பதற்கு உறுதியுடன் சபதம் எடுப்போம்!

தற்போது SSTA இடைநிலை ஆசிரியர் பதிவு மூப்பு சங்கம், 6 வது நாளாக தொய்வில்லாத போர்க்குண உணர்வுடன் சமவேலைக்கு சம ஊதியம் கேட்டு போராடி வருகிறார்கள்! களத்தில் நின்று போராடி வருகிற அவர்களுடைய போர்க்குண உறுதியினை பாராட்டுகிறோம்! வாழ்த்துகிறோம்!

வீராங்கனைகளாக மகளிரணியினர் தொடர்ந்து களத்தில் நின்று போராடுவதை பாராட்டுகின்றோம். நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை எவரும் அழைத்துப் பேசப் போவதுமில்லை! கண்டுகொள்ளப் போவதுமில்லை! காலம்வரை காத்திருந்து களம் கண்டு வெற்றி முகட்டை நோக்கிச் செல்வதுதான் சரியான முடிவாக அமையும் என்பதை தலைமைகள் ஆய்வு செய்ய வேண்டும்.
போர்க்குண உணர்வினை காலமறிந்து பயன்படுத்துவதுதான் தலைவர்களின் தலைமைப் பண்பாக அமையும். பெற்ற அனுபவங்களின் கொள்முதலினை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஜேக்டோ ஜியோ உயர்மட்டக்குழுக் கூட்டம் சென்னையில் இன்று மாலை நடைபெறுகிறது. உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப் பள்ளிகளைப் பொறுத்தவரையில் செய்முறைத் தேர்வுகள் தொடங்கி விட்டது. மாணவர்களை மையப்படுத்தி தான் ஆசிரியர்கள் பணி என்பதை எந்தவொரு ஆசிரியராலும் மறக்க முடியாது மட்டுமல்ல; நெஞ்சில் நிலைநிறுத்தி பணிபுரிந்தும் வருகிறார்கள்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களோ? ஆசிரியர்களின் பிரச்சினைகளைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல், பெற்றோர்களைக் கொண்டாடி மகிழ்வோம்! என்ற நிகழ்ச்சியினை ஆசிரியர்களைக் கொண்டே பெற்றோர்களை அழைத்து வரச் சொல்லி விளம்பர நிகழ்வினை பிரமாதமாக நடத்தி வருகிறார்கள்!

பிப்ரவரி மாதம் கூட பள்ளிகளில் ஆசிரியர்களை பாடம் நடத்த விடாமல் விளம்பர நிகழ்வுகளில் மூழ்கியுள்ளார். ஆசிரியர் சங்கங்களை எல்லாம் பலவீனப்படுத்தி அவரின் மனசாட்சியாக, அவருடைய பிரதிநிதியாக, தொடர்பாளராக… ஆசிரியர் மனசுத் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஒருவரை நியமனம் செய்து அதிகாரப்படுத்தி வருகிறார்.

இனி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை பார்க்க வேண்டும் என்றால் அவருடைய மனசாட்சியை கேட்டுத்தான் பார்க்க முடியும். சங்கங்களுக்கு முக்கியத்துவம் இல்லாத சூழ்நிலை மட்டுமல்ல; முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஏன்?. இணை இயக்குனர்கள், இயக்குனர்கள், கல்வி அமைச்சகத்தில் பணியாற்றுபவர்கள் கூட எவ்வித முக்கியத்துவமும் இல்லாத சூழ்நிலையை மறைமுகமாக வளர்த்து வருகிறார்.

ஜெகநாத் மிஸ்ரா
ஜெகநாத் மிஸ்ரா

காலம் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்!.. அந்த நிலைமை உருவாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை! பீகார் மாநிலத்தில் ஜெகநாத் மிஸ்ரா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஒட்டுமொத்த தொழிற்சங்கத்தினர் 41 நாட்கள் வீதியில் நின்று போராடினார்கள். அவர் கண்டுகொள்ளவே இல்லை. கடைசியாக ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் வைத்தார்கள். முதலமைச்சரவர்களை நேரில் பார்த்து எங்கள் போராட்டத்தை விலக்கிக் கொள்கிறோம்!.. என்று சொல்வதற்கு வாய்ப்பு கொடுங்கள்! என்று கேட்டார்கள்.

என்னை கேட்டு நீங்கள் போராட்டத்தினை தொடங்கவில்லை. வீதியில் தொடங்கிய போராட்டத்தினை வீதியோடு விட்டுச் செல்லுங்கள்! என்று சொன்னார்கள். வீதியில் நின்றே போராட்டத்தினை இதயக் குமறல்களோடு சங்கங்கள் விட்டுச் சென்றார்கள்! இன்று ஜெகநாத் மிஸ்ரா அவர்களுடைய அடையாள முகவரி பீகாரில் இல்லை. ஆனால் பீகாரில் இன்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுடைய சங்கங்கள் போர்க்குண உணர்வோடு எழுந்து நின்று வருகிறார்கள் என்ற உணர்வுகள் நம் நெஞ்சின் நினைவலைகளாக எழுந்து வருகின்றன.

கெட்டபின்பு ஞானி என்பார்கள்! கெட்டால்தான் புத்திவரும் என்பார்கள்! கெட்டதற்குப் பிறகும் இவர்களுக்குப் புத்திவரவில்லையா? என்றும் சொல்வார்கள்! இன்னமும் கெட்டுப் போவேன் அதைச் சொல்ல நீயார் என்று கேட்பவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்!!! இதெல்லாம் கிராமத்தில் சொல்லப்பட்டு வருகிற வழக்கு மொழிகளாகும்.

நாடாளுமன்ற தேர்தல் வரும்வரை காத்திருப்போம்!.. உணர்வுடன் ஒன்று கூடுவோம்! வாருங்கள்!” என்பதாக தனது கருத்தை பதிவிட்டிருக்கிறார், ஐபெட்டோ அண்ணாமலை.

– அங்குசம் செய்திப் பிரிவு.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.